Sat. Nov 23rd, 2024


கொரோனோ பாதிப்பு உள்ள மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று கலந்துரையாடினார். அப்போது பிரதமர் மிக முக்கியமாக வலியுறுத்திய ஐந்து அம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. வேகமெடுத்துள்ள இரண்டாவது அலைக்கு எதிரான போரில் எளிதான வெற்றியை காண, பிரதமர் முன்வைத்த ஐந்து அம்சங்களையும், மாநிலங்கள் பரிந்துரைகளாக எடுத்து செயல்பட வேண்டும் என்பதே நேற்றைய கலந்துரையாடல் கூட்டத்தின் முக்கிய சாரம்சமாக கூறப்படுகிறது

கொரோனோ தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த, உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள நெறிமுறைகளில் அலட்சியம் காட்டாமல், முழுமையாக அமல்படுத்த வேண்டும். அப்போதுதான், மருத்துவமனைகளுக்கு, மருத்துவர்களுக்கு, செவிலியர்களுக்கு ஏற்படும் நெருக்கடிகளை குறைக்க முடியும்.

கொரோனோ தொற்றை முழுமையாக கட்டுப்படுத்த முதல் ஆயுதமாக இருப்பது முகக் கவசம்தான். பொது இடங்களில் முகக்கவசம் இன்றி மக்கள் நடமாடுவதை எக்காரணத்தைக் கொண்டும் அனுமதிக்க கூடாது. இரண்டாவது, தனிமனித இடைவெளியை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். முக்கியம் இல்லாத எந்தவொரு நிகழ்வுக்காகவும் தேவையில்லாமல் கூடுவதை தவிர்க்க வேண்டும்.

இந்த இரண்டு அம்சங்களிலும் மாநில அரசுகள் முழுமையான கவனத்தை செலுத்தினால், தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக்கை பெருமளவில் குறையும். இப்படிபட்ட நிலையை உருவாக்கினால்தான் மருத்துவமனைகள், அதன் இயல்பான பணிகளை எந்தவிதமான நெருக்கடியும் இன்றி மேற்கொள்ள முடியும்.

நோய் தொற்று அறிகுறியுடன் வருபவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிப்பதை முதல் கடமையாக மாற வேண்டும். அதன் எண்ணிக்கையும் அதிகப்படுத்தப்பட வேண்டும். மருத்துவரின் ஆலோசனையின்றி எந்தவொரு தனிப்பட்ட மனிதரும் எந்தவிதமான மருந்தையும் எடுக்கக்கூடாது என்ற விழிப்புணர்வை உருவாக்குவது முக்கியமானது, ஏனெனில் அவை உண்மையில் தேவைப்படுபவர்களுக்கு மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்யும்.

தற்போதைய ஆக்ஸிஜன் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, ஆக்ஸிஜன் பயன்பாட்டை கண்காணிப்பது முக்கியமானதாகும். தேவைப்படுவோருக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடின்றி கிடைக்க வேண்டுமானால், அக்சிஜன் உரிய முறையில் பயன்படுத்தப்பட வேண்டும்.

ஆக்சிஜன் தயாரிப்பை பன்மடங்கு அதிகரிக்க மத்திய அரசும், மாநில அரசும் துரிதமான நடவடிக்கைகளை எடுத்து வருவதுடன், ஆக்சிஜன் தேவைப்படும் மாநிலங்களுக்கு விரைந்து அனுப்பும் நடவடிக்கைகளும் வேகப்படுத்தப்பட்டுள்ளன.

பிரதமர் நிறைவாக, மருத்துவமனைகளில் சிகிச்சை அளிப்பதற்கு போதுமான மருத்துவர்கள் இல்லை என்ற குறையை போக்க, ராணுவம் உள்ளிட்ட பிற அமைப்புகளில் இருந்து ஓய்வுப்பெற்ற மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்களை நியமிப்பதுன் மூலம் நோய் தொற்றாளர்களுக்கு விரைவான சிகிச்சையை அளிக்க முடியும்.

கொரோனோ தொற்று தொடர்பான விழிப்புணர்வு, ஆலோசனை வழங்குவதால், உரிய வழிகாட்டுதல் போன்ற தொலைபேசி வாயிலான பணிகளுக்கு தனி மையத்தை அமைத்து ஓய்வுப் பெற்ற முன்னாள் மருத்துவ ஊழியர்களை நியமிக்கலாம்.

இந்த கலந்துரையாடல் கூட்டத்தில் பரிமாறப்பட்ட கருத்துகளை மாநில அரசுகள் முழுமையாக கடைப்பிடித்தால், கொரோனோ 2 வது அலைக்கான போரில் இருந்து இந்தியா வெகு விரைவாக வெற்றி பெற்று விட முடியும்.

இவ்வாறு பிரதமர் மோடி, மாநில அரசுகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.