Thu. Nov 21st, 2024

மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் சிவசேனா அதிருப்தி குழு தலைவரான முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மகத்தான வெற்றிப் பெற்றார்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிப் பெற்ற பிறகு, முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை வாழ்த்தி பாஜக முன்னாள் முதல்வரும் துணை முதல்வருமான தேவேந்திர ஃபட்னாவிஸ் பேசினார்.

அவர் கூறியதாவது:

2019 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அளித்தனர். ஆனால் தனிப்பெரும் கட்சி என்ற நிலையிலும் கூட பாஜகவுக்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. ஆனால் தற்போது ஏக்நாத் ஷிண்டேவுடன் இணைந்து மீண்டும் சிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைத்துள்ளோம். ஒரு உண்மையான சிவசேனா நிர்வாகி முதல்வர் ஆக்கப்பட்டுள்ளார்.

அரசியலில் எதிரிகளின் குரலுக்கு செவிசாய்க்க அனைவரும் தயாராக வேண்டும். முந்தைய ஆட்சிக்கு எதிரான விமர்சன அறிக்கைகள் மற்றும் சமூக ஊடகங்களில் கருத்துகள் பதிவிட்தற்காக மக்கள் சிறையில் அடைக்கப்பட்டதைப் பார்த்தோம். நமக்கு எதிராக பேசுபவர்களுக்கு நாம் ஜனநாயக ரீதியில் பதில் அளிக்க தயாராக இருக்க வேண்டும்.

திரும்ப வருவேன்…

விமர்சனங்களுக்கு நாம் சரியான முறையில் பதிலளிக்க வேண்டும். நான் திரும்பி வருகிறேன் என்று ஒருமுறை சட்டப்பேரவையில் பேசும் போது கூறியிருந்தேன். ஆனால் நான் அப்படிச் சொன்னதும் பலர் என்னைக் கேலி செய்தார்கள். நான் இன்று திரும்பி வந்திருக்கிறேன். அதுவும் என்னுடன் ஏக்நாத் ஷிண்டேவையும் அழைத்து வந்துள்ளேன். என்னை கேலி செய்தவர்களை நான் பழிவாங்க மாட்டேன். நான் அவர்களை மன்னிப்பேன். அரசியலில் பழிவாங்கும் எண்ணம் ஒருபோதும் எடுபடாது:

பாஜக மேலிடம் கட்டளை

என்னை முதல்வர் ஆக்கிய பாஜக மேலிடம் தான் இப்போதும் நான் துணை முதல்வர் பதவியை ஏற்க வேண்டும் என்று கட்டளையிட்டது. அதே கட்சி சொன்னால் வீட்டில் கூட உட்கார்ந்திருப்பேன். இன்று நான் உங்களுக்குச் சொல்கிறேன், இந்த அரசில் அதிகாரத்திற்கான சண்டை ஒருபோதும் இருக்காது, நாங்கள் தொடர்ந்து ஒத்துழைப்போம்.

ED அரசாங்கம்

இது ஒரு ED அரசாங்கம் என்று (அமலாக்கத்துறை)மக்கள் கிண்டல் செய்கிறார்கள். ஆம், இது ஏக்நாத் மற்றும் தேவேந்திராவின் ED அரசாங்கம்தான். முந்தைய அரசாங்கத்தின் கடைசி அமைச்சரவைக் கூட்டத்தில் மாவட்டங்களின் பெயர்களை மாற்றுவது தொடர்பாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. பெயர் மாற்றம் தொடர்பாக கடந்த அமைச்சரவையில் என்ன முடிவுகள் எடுக்கப்பட்டிருந்தாலும், நாங்கள் அதே கருத்தில் உள்ளதால் அந்த முடிவுகளை நாங்கள் நிலைநிறுத்துவோம். கடந்த அமைச்சரவை விதிகளின்படி இல்லை என்பதால் அந்த முடிவுகளை நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்த ஏக்நாத் ஷிண்டே தலைமையில் மீண்டும் அமைச்சரவை கூடி தீர்மானம் நிறைவேற்றுவோம்.

இவ்வாறு ஃபட்னாவிஸ் பேசினார்.