Thu. Nov 21st, 2024

மகாராஷ்டிரா சட்டசபையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் 40 பேரின் ஆதரவுடன் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே வெற்றி பெற்றார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைந்து தேர்தலை சந்தித்த சிவசேனா கட்சி மாபெரும் வெற்றியைப் பெற்றது. முதல் அமைச்சர் பதவியை பங்கீடுவதில் பாஜகவுடன் எழுந்த பிரச்னையால், அந்த கூட்டணியில் இருந்து விலகிய சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸுடன் இணைந்து அம்மாநிலத்தில் கூட்டணி அரசை நிறுவியது. அதன் முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே முதல் அமைச்சராக பதவியேற்றார்.

இரண்டரை ஆண்டுகள் முடிவுற்ற நிலையில் ஆளும்கட்சியான சிவசேனாவில், இந்துத்துவாவின் தீவிர ஆதரவாளரான அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 40 அதிருப்தி எம்எல்ஏக்கள் ஒன்று திரண்டனர். கடந்த வாரத்தில் முதல்வர் உத்தவ் தாக்ரே தலைமையிலான ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் 9 அமைச்சர்கள் உள்பட 40 அதிருப்தி சிவசேனா எம்எல்ஏக்களும் அசாம் மாநிலத்தில் தஞ்சம் அடைந்தனர்.

அம்மாநில ஆளுநர் உத்தரவின் பேரில் சட்டப்பேரவையை பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட நிலையில், சொந்த கட்சியிலேயே நான்கில் மூன்று பங்கு அதிருப்தி எம்எல்ஏக்கள் தனி அணியாக நின்றதால், முதல் அமைச்சர் பதவியில் இருந்து விலகினார்.

இதனையடுத்து சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு மகாராஷ்டிரா மாநில பாஜக ஆதரவு அளித்ததன் பேரில், ஏக்நாத் ஷிண்டே முதல் அமைச்சராக பதவியேற்றார். பாஜகவைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் துணை முதல்வராக பதவியேற்றார்.

இதனையடுத்து, சட்டப்பேரவையில் பெரும்பான்மையான நிரூபிப்பதற்கான 2 நாள் சிறப்புக் கூட்டம் நேற்று துவங்கியது. இதில், பேரவைத் தலைவருக்கான தேர்தலில் பாஜகவைச் சேர்ந்த ராகுல் நர்வேக்கர் வெற்றி பெற்றார். இரண்டாம் நாளான இன்று முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்கும் வகையில் திர்மானத்தை முன்மொழிந்தது. சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் 40 பேரின் ஆதரவுடன் ஷிண்டே பெரும்பான்மையை நிரூபித்தார். பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க 144 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில்,பாஜக மற்றும் சுயேட்சை எம்எல்ஏக்கள் என ஒட்டுமொத்தமாக 164 எம்எல்ஏக்கள் ஆதரவு வாக்குகள் ஏக்நாத் ஷிண்டேவுக்கு மகத்தான வெற்றியை தேடி தந்தது. அவருக்கு எதிராக உத்தவ் தாக்ரே தலைமையிலான சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸை உள்ளடக்கி 99 எம்எல்ஏக்கள் வாக்களித்தனர்.