கொரோனோ தொற்று எதிராக போராடி வரும் அனைத்து மாநிலங்களுக்கும் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என பிரதமர் நரேந்திர மோடி உறுதிப்பட கூறியுள்ளார்.
கொரோனோ தொற்று பாதிப்பு அதிகமாக உள்ள 10 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேச முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது: அனைத்து மாநிலங்களும் ஒரே தேசமாக ஒன்றிணைந்து செயல்பட்டால் எந்தவிதமான பற்றாக்குறையும் ஏற்படாது என்றும் மத்திய சுகாதார அமைச்சும் மாநிலங்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருவதுடன் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தார்.
கொரோனோ தொற்று எதிராக போராடி வரம் அனைத்து மாநிலங்களுக்கும் தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்குவதற்கு தயாராக உள்ளதாக பிரதமர் மோடி கூறினார்.
ஆக்சிஜன் தட்டுப்பாடு குறித்து அனைத்து மாநிலங்களும் கவலை தெரிவித்துள்ள நிலையில், ஆக்சிஜன் உற்பத்தி மற்றும் விநியோகத்தை அதிகரிக்க தொடர்ச்சியாக முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறிய பிரதமர், தேவைக்கு ஏற்ப ஆக்சிஜன் கிடைக்கும் வகையில் மத்திய அரசின் அனைத்து துறைகளும் இணைந்து செயல்படுகின்றன என்றும் பிற தொழில்துறையினரும் ஆக்ஸிஜன் தயாரிப்பில் ஈடுபட வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். முன்னதாக பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருத்துவமனைகளில் போதிய இடம் இல்லாதது, மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட கொரோனோவுக்கு எதிரான போராட்டத்தில் பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.