இந்தியாவின் தலைநகரான டெல்லியில் திரும்பிய பக்கமெங்கும் மரண ஓலம்தான். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட ஒட்டுமொத்த பாஜக அரசின் அனைத்து அமைச்சர்களும் டெல்லியில் வசித்து வரும் நிலையில், கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளில் இடம் இல்லை. தொற்று இருக்கிறதா இல்லையா என்பதை அறிந்து கொள்ள நாள்கணக்கில் காத்திருக்க வேண்டிய அவலநிலை என மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோபமான முழக்கங்கள் வீதிதோறும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
டெல்லியில் நேற்று மட்டும் சிகிச்சைப் பலனின்றி 306 பேர் உயிரிழந்துள்ளனர். கண்ணீரோடும் கதறலோடும் தங்களது உறவினரின் உடலை சுமந்து கொண்டு வரும் மக்கள், அவரின் இறுதிச்சடங்குகளை கூட நிம்மதியாக செய்யாத முடியாத அளவுக்கு மயானங்களில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சடலங்கள் வரிசையாக கிடத்தி கிடக்க, அவசர அவசரமாக எரியூட்டிக் கொண்டிருக்கின்றனர் மாநில அரசின் பணியாளர்கள்.
கடந்தாண்டு கொரோனோ உச்சத்தில் இருந்த போது கூட உயிரிழப்புகள் இந்தளவுக்கு இல்லை என்பதால், டெல்லி மக்களின் அச்சம் பன்மடங்கு அதிகரித்து இருக்கிறது. அதுவும், கொரோனோவை கட்டுப்படுத்த முடியாமல் கையறு நிலையில் நிற்கும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசைப் பார்த்து பரிதாப்படுகின்றனர் டெல்லி வாசிகள்.
டெல்லியில் நாள்தோறும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், அவர்களில் மோசமான பாதிப்பிற்குரியவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிப்பதற்கு படுக்கைகள் இல்லை. மேலும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை, தீவிர சிகிச்சைப் பிரிவில் இடமின்மை, வென்டிலேட்டர் வசதியுடன் படுக்கைகள் கிடைக்கவில்லை என்ற கூக்குரல்கள், தொற்றாளர்களையும், அவர்களது உறவினர்களையும் நிம்மதியிழக்க செய்துவிட்டது.
டெல்லியில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கொரோனோ நோயாளிகள் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் கூடுதலாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால், ஒரு படுக்கையில் இருவர், தரையில் படுக்க வைத்து சிகிச்சை என மருத்துவமனையிலும் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளதால், புதிதாக தொற்று பாதிப்பிற்குள்ளானவர்கள், மருத்துவமனையில் இடம் கிடைப்பதற்கே பல நாட்கள் காத்திருக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனால், உரிய சிகிச்சை உடனடியாக கிடைக்காததால், ஆரம்ப கட்ட நோய்த் தாக்குதல் கூட வீரியம் பெற்று, நோயாளியின் உடல் நிலையை மிக வேகமாக மோசமடைய செய்துவிடுதவாக உறவினர்கள் புலம்புகின்றனர். இதே நிலை நீடித்தால், நோயாளிகளின் இறப்பு விகிதம் 3 இலக்கத்தில் இருந்து 4 இலக்கமாக உயரக் கூடிய ஆபத்துள்ளதாகவும் அச்சப்படுகிறார்கள் டெல்லியில் உள்ள அரசு மருத்துவர்கள். மருத்துவமனைகளில் இடப் பற்றாக்குறை, ஆக்சிஜன் தட்டுப்பாடு, அதிக எண்ணிக்கையிலான மருத்துவர்களுக்கு கொரோனோ பாதிப்பு, மருந்து, மாத்திரைகள் இருப்பு இல்லாமல் இருப்பது போன்ற பல்வேறு காரணங்களால், கடந்த சில நாட்களாக கொரோனோ தொற்று சோதனை மேற்கொள்வதையும் கணிசமாகக் குறைத்துள்ளது, டெல்லி அரசு. இதுபோன்ற நடவடிக்கைகாளல், டெல்லி மக்களுக்கு பேராபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறும் மருத்துவர்கள், நோயாளிகளை சரியான நேரத்தில் கண்டறிந்து தனிமைப்படுத்துதல் மற்றும் சிகிச்சை அளிப்பதை தாமதப்படுத்தினால், இந்தியாவிலேயே டெல்லி மோசமாக பாதிக்கப்படும் என்று எச்சரிக்கின்றனர் டெல்லி சுகாதாரத்துறை அதிகாரிகள். கடந்த பல நாட்களாக கொரோனோ தொற்று கோரத்தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கும் நிலையில், பிரதமர் மோடியோ, உள்துறை அமைச்சர் அமித்ஷாவோ டெல்லி நிலைமை குறித்து கவலைப்பட்டதாகவே தெரியவில்லை என்கிறார் ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவர் ஒருவர். போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து சுகாதாரத்துறை நிர்வாகத்தை மேம்படுத்தினாலதான், கொரோனோ தொற்று மேலும் பரவாமல் கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்று கூறும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., ஒருவர், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தன்னுடைய சக்திக்கு மீறி நடவடிக்கை எடுத்தாலும், உழைத்தாலும் மத்திய அரசின் உதவியின்றி, கொரோனோ தொற்றின் கோரத்தாண்டவத்தை தடுத்து நிறுத்த டெல்லி மாநில அரசால் மட்டும் முடியாது என்று அழுத்தம் திருத்தமாக கூறுகிறார்.