கொரோனோ 2 வது அலை நாடு முழுவதும் புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், பாதிப்பில் மகாராஷ்டிராவுக்கு அடுத்து 2 வது இடத்தில் இருக்கும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவுப் பிறப்பிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று அம்மாநில பாஜக முதல்வர் யோகி ஆதித்யநாத் உறுதிபட தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உச்சம் தொட்ட கொரோனோ 2 வது அலையால் ஏப்ரல் 18 ம் தேதி நிலவரப்படி 191457 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9830 ஆக உள்ளது. கொரோனோ பாதிப்பு அதிகம் உள்ள லக்னோ, பிரயாகராய், வாரணாசி, கான்பூ மற்றும் கோரக்பூர் ஆகிய மாவட்டங்களில் வரு 26 ஆம் தேதி ஊரடங்கை விதிக்க வேண்டும் என அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாகவும், உத்தரப்பிரதேசத்தில் நிலவும் கொரோனோ பாதிப்பு குறித்தும் காணொலி வாயிலாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யா நாத்துடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது, கொரோனோ பரவலை கட்டுப்படுத்தவும், தொற்று பாதிப்பில் உள்ளவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார் முதல்வர் யோகி. மேலும் தொற்று பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகளும், தேவையான அளவிற்கு படுக்கை வசதிகளும் கொண்ட மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளார் யோகி.
கடந்த பல நாட்களாக, 10 ஆயிரம், 20 ஆயிரம் 30 ஆயிரம் என ஒவ்வொரு நாளும் கொரோனோ தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வந்த நிலையில், நேற்றைய தினம் மட்டும் கொரோனோவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 287 ஆகவும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 167 ஆக உள்ளது.
கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நாள்தோறும் பாதிக்கப்பட்டு வருவதால், நோயாளிகளை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிப்பதற்கு போதுமான வசதிகளும், மருத்துவர்களும் இல்லாததால் அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் திணறி வருகின்றனர். ஒருநாள் முழுவதும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் மருத்துவமனையில் இடம் இல்லாததால், சாலையோரம் ஆம்புலன்ஸிலேயே படுக்க வைக்கப்பட்டிருந்த காட்சிகள் வெளியான நேரத்தில், அம்மாநில உயர்நீதிமன்றம் ஆழ்ந்த கவலையை தெரிவித்தது. இருப்பினும், உத்தரப்பிரதேச மாநில அரசு, குறிப்பிட்ட சில மாவட்டங்களில் கூட ஊரடங்கை அமல்படுத்த தயக்கம் காட்டி வருகிறது. இதனால், வரும் நாட்களில் கொரோனோ பாதிப்பு அதிகமாகும் என்றும் உயிரிழப்புகளும் அதிமாக மக்களை நிம்மதியிழக்கச் செய்யும் என்று உத்தரப் பிரதேசத்தில் உள்ள மூத்த ஊடவியலாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.