கொரோனோ 2 வது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. டெல்லி, குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் நாள்தோறும் உயிரிழப்போரின் எண்ணிக்கை நூறை கடந்து சென்றுக் கொண்டிருப்பதன் மூலம் 2 வது அலையின் வீரியத்தை உணர்ந்து கொள்ள முடிகிறது.
அந்த நிலை தமிழகத்தில் உருவாகி விடக் கூடாது என தமிழக அரசு முழு வீச்சில் பணியாற்றிக் கொண்டிருக்கிறது. தடுப்பூசி மீதான சந்தேகங்கள் ஒருபக்கம் இருந்தாலும் கூட, பல்லாயிரக்கணக்கான மக்கள் நாள்தோறும் தடுப்பூசிகளை போட்டுக் கொள்கின்றனர் என்பது ஆறுதல் அளிக்கும் தகவலாகதான் இருக்கிறது. அதே சமயம், வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறையால் கொரோனோ நோயாளிகள் 7 பேர் உயிரிழந்த நிகழ்வும் அதிர்ச்சியளிக்கும் வகையிலேயே உள்ளன.
சிகிச்சை முறையில் உள்ள குறைபாடுகளை தெரிவிக்கும் போது, அதற்கு தீர்வு காண தமிழக அரசு முயல வேண்டும். அதை தவிர்த்து, மூடி மறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால், அரசு மீதான நம்பிக்கையை மக்கள் இழந்து விடுவார்கள். அரசியல்வாதிகள் ஆட்சி நிர்வாகத்தில் இல்லாதபோது, அரசு அதிகாரிகள் இன்னும் கொஞ்சம் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். அவர்களும் அரசியல்வாதிகளைப் போல உதாசீனப்படுத்தும் வகையில் நடந்து கொண்டால், மக்களின் சினம் அதிகரிக்குமே தவிர, குறையாது.
இப்படி அடிதட்ட மக்கள் நோயோடும், அரசு நிர்வாகத்தோடும் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், ஆளும்கட்சி அமைச்சர்களும், எதிர்க்கட்சித் தலைவர்களும் ஒரு குறுகிய கால வெளிநாட்டுப் பயணத்தை கொரோனோ கெடுத்துவிட்டதே என்று புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கடந்த பல மாதங்களாக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் சூறாவளிப் பிரசாரம் மேற்கொண்டனர். கொளுத்தும் வெயிலில் சுற்றி வந்ததால், தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தவுடன் வெளிநாடு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். ஆனால், உலகின் பல்வேறு நாடுகளில் மட்டுமின்றி நாடு முழுவதும் கொரோனோ 2 வது அலை வேகமெடுத்ததை அடுத்து, தனது வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்து விட்டு கொடைக்கானலுக்கு குடும்பத்துடன் சென்று வந்தார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்தும், மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக ஏப்ரல் 2 வது வாரத்தில் அமெரிக்காவிற்கு செல்ல திட்டமிட்டிருந்தார். அவருக்கு உதவி செய்வதற்காக அவரது மனைவி பிரேமலதா, அவர்களது மகன்கள் ஆகியோரும் வெளிநாடு பயணத்திற்கு தயாராகி வந்தனர். கொரோனோ அச்சுறுத்தலால் அவர்களின் வெளிநாட்டு பயணமும் தடைபட்டது.
ஆளும்கட்சியைச் சேர்ந்த அதிமுக அமைச்சர்கள் சிலரும், அவர்களது வாரிசுகளும் வெளிநாட்டு பயணங்களுக்கு முன்னேற்பாடுகளை எல்லாம் செய்துவிட்டு, தயாராக இருந்தனர். ஆனால், ஏப்ரல் 6 வாக்குப்பதிவு முடிந்த கையோடு கொரோனோ கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்ததால், அவர்களும் சோகமடைந்துவிட்டனர்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும், லண்டன், கனடா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு செல்வதற்காக பயண ஏற்பாடுகளை எல்லாம் செய்து தயாராக இருந்தார். ஆனால், அவருக்கும் ஏமாற்றத்தை தந்துவிட்டது கொரோனோ.
திமுக.வில் இரண்டாம் கட்ட தலைவர்கள் சிலரும், அவர்களது குடும்பத்தினரும் போட்டு வைத்திருந்த வெளிநாட்டு பயணத் திட்டமும் பணால்ஆகிவிட்டது.
படப்பிடிப்பை காரணமாக வைத்து மக்கள் நீதி மையத்தின் நிரந்தர ஒருங்கிணைப்பாளர் நடிகர் கமல்ஹாசனும் வெளிநாட்டு பயணத்திற்கு தயாராகவே இருந்தார். அவர் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த வெளிநாடுகளில் எல்லாம் கொரோனோ அச்சுறுத்தல் அதிகமாக இருப்பதால், உள்நாட்டிலேயே சூட்டிங்கிற்கு தயாராகிவிட்டார்.
அவரைப் போலவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், மருத்துவப் பரிசோதனைக்காக வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்தார். கொரோனோ கட்டுப்பாட்டால் அவரது வெளிநாட்டு பயணமும் ஒத்திவைக்கப்பட்டுவிட்டது.
குறுகிய கால வெளிநாட்டுப் பயணத்தை கூடமேற்கொள்ள முடியாததால் தமிழக அரசியல் தலைவர்கள், நடிகர்கள் உள்நாட்டிலேயே முடங்கி கிடக்க, கொரோவோ பரவலை காரணம் காட்டி, தமிழக அரசு அறிவித்த ஊரடங்களால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, கொடைக்கானல், ஏற்காடு மற்றும் நீலகிரி மாவட்ட சுற்றுலா மையங்களில் ஆர்ப்பாட்டங்கள் அதிகமாகியுள்ளன. சிறு வியாபாரிகள் முதல் பெரிய ஹோட்டல் உரிமையாளர்கள் வரை, கொரோனோ ஊரடங்கை திரும்ப பெற வேண்டும் என முழக்கமிட்டு வருகின்றனர்.
பெரும்பான்மை மக்களுக்கு வாழ்வாதாரமே கேள்விக்குறியாகியுள்ளது… தேர்தல் முடிவுகளை விட கொரோனோ ஊரடங்குதான் அவர்களை பயமுறுத்திக் கொண்டிருக்கிறது.