Fri. Nov 22nd, 2024

மனித வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் சாகசம் நிறைந்தவைதான்.. புலம்பிக் கொண்டிருப்பதிலும், கதறிக் கொண்டிருப்பதிலும் ஒரு புண்ணியமும் இல்லை. துணிச்சலாகவும், எதையும் நம்மால் சாதிக்க முடியம் என்ற நம்பிக்கையாகவும் எந்தவொரு காரியத்தையும் செய்தால்தான் வெற்றி மாலை கழுத்தில் விழும். துணிச்சலும், நம்பிக்கை மட்டும் இருந்தால் போது, சமயோசித புத்தியும் வேண்டும்.

மூன்றும் ஒரே நேர்கோட்டில் இணைந்து விட்டால், வெற்றி, வெற்றி என்று கூத்தாடலாம். அப்படி அதிசயப் பிறவுகளாக மாறுபவர்கள் நம்மில் ஒருவராக கூட இருக்கலாம். அவர்களின் அசாத்திய துணிச்சல் வெளிப்படும் வரை அவர்களை நம்மால் அடையாளம் கொள்ள முடியாது.

அப்படிபட்ட ஒருவரைதான் மகாராஷ்டிரா மாநிலம் வாங்கனி ரயில் நிலையம் அறிமுகப்படுத்துகிறது.

அங்குள்ள ரயில் நிலையில், தண்டவாளத்தில் குழந்தை ஒன்று தவறி விழுந்து விடுகிறது. .உடன் வந்த கண்பார்வையற்ற மாற்றுத் திறனாளி தாய், தண்டவாளத்தில் விழுந்த சிறுமியை காப்பாற்ற கதறுகிறார். அதே நேரத்தில் அதிக சத்தத்தை எழுப்பியபடி ரயிலும் வந்துக் கொண்டிருக்கிறது.

வெறிச்சோடியிருக்கும் ரயில் நிலையத்தில், அந்த குழந்தையின் கதறல் குரல் காற்றில் கலக்கிறது. அப்போது ஆபத்பாந்தவனாக ஓடி வருகிறார் ரயில்வே ஊழியர் ஒருவர். உயிரைப் பணயம் வைத்து மின்னலைப் போல பாய்ந்து அந்த குழந்தையை தூக்கி தண்டவாளத்தில் வைக்கிறார். கூடவே ரயில் மோதிவிடுமோ என்ற ஒரு சில நிமிடங்களுக்கு இடையே அவரும் தாவி தண்டவாளத்தில் ஏறி விடுகிறார்.

திக்..திக் நிமிடங்களில் இருவரும் உயிர் தப்புகிறார்கள். மின்னல் வேகத்தில் விரைந்து செல்கிறது ரயில். ஒன்றிரண்டு பேர் அந்த காட்சியை நேரில் பார்த்து, அதிர்ச்சியில் இருந்து மீள முடியாதவர்களாக இருக்கிறார்கள்.

ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமிரா பதிவுகள், அந்த சாகசத்தை பதிவு செய்து இருக்கிறது. தொடக்கம் முதல் கடைசி வரை திக்..திக். நிமிடங்களாக கரையும் அந்த சாகசம், பார்க்கும் அனைவரையும் பதைபதைக்க வைக்கிறது.