கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த டெல்லியில் இன்று முதல் ஒரு வாரம் முழு ஊரடங்கு அமலுக்கு வருவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பின் முக்கிய அம்சங்கள் இதோ…
கடந்த 24 மணிநேரத்தில் டெல்லியில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 500 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை இல்லாத வகையில் ஒருநாளில் தொற்று பாதிப்பு உச்சத்தை தொட்டுள்ள நிலையில், மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த, முழு ஊரடங்கு தேவைப்படுகிறது.
இன்று இரவு 10 மணி முதல் வரும் 29 ஆம் தேதி காலை 5 மணி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும். டெல்லியில் உள்ள மக்கள், கொரோனோ நெறிமுறைகளில் அலட்சியம் காட்டாமல் பொதுமக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். டெல்லியில் உள்ள வெளிமாநில கூலித் தொழிலாளர்கள் முழு ஊரடங்கை கண்டு அச்சமடையாமல், பொறுமை காக்க வேண்டும். குறைவான நாட்கள் மட்டுமே ஊரடங்கு அமலில் இருக்கும் என்பதால், டெல்லியை விட்டு தங்கள் ஊருக்கு யாரும் அவசரப்பட்டு பயணம் மேற்கொள்ள வேண்டாம்.
தனியார் மருத்துவர்கள் உரிய அடையாள அட்டையுடன் அன்றாட பணிகளை மேற்கொள்ளலாம், கர்ப்பிணி பெண்கள், நோயாளிகள் மருத்துவமனைக்கு செல்லும் போது உடன் உதவியாளர்களை அழைத்துச் செல்லாம், தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரும்புவோர் உள்ளிட்டவர்கள் தங்களது அடையாள அட்டையுடன் செல்ல அனுமதி வழங்கப்படும்.
இறுதிச்சடங்கு நிகழ்வுகளில் 20 பேருக்கு மிகாமல் கலந்துகொள்ள அனுமதிப்படும் டெல்லி அரசின் முந்தைய உத்தரவு அப்படியே நடைமுறையில் இருக்கிறது.
இவ்வாறு டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளளார்.