Fri. Nov 22nd, 2024

நாடு முழுவதும் இன்று கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 34 ஆயிரத்து 692 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 2 லட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க முடியாமல் மாநில அரசுகள் திணறி வருகின்றன. போதிய அளவு படுக்கை வசதிகள் இல்லாததது ஒருபுறம் என்றால், கொரோனோ சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் கிடைப்பதிலும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குஜராத், டெல்லி, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் சிகிச்சைப் பலனின்றியும், உரிய சிகிச்சை கிடைக்காமலும் கொரோனோ தொற்றுக்கு உள்ளானவர்கள் கொத்து கொத்தாக உயிரிழந்து வருகின்றனர்.

இன்று ஒரே நாளில் மட்டும் ஆயிரத்து 341 பேர் உயிரிழந்துள்ளனர். அதிக எண்ணிக்கையில் நோயாளிகள் மரணம் அடைந்து வரும் துயரம் ஒருபுறம் இருக்க, அவர்களை உடனடியாக தகனம் செய்துவதற்கும் போதிய மயான வசதியில்லாததால், பொதுமக்களின் கோபம், அந்தந்த மாநில அரசுகளின் மீது திரும்பியுள்ளது.

நாடு முழுவதும் ஒருவிதமான கொதிப்பு நிலை பரவி வரும் நிலையில், கொரோனோ தொற்று பாதிப்பு அதிகரிப்பதை கட்டுப்படுத்துவது தொடர்பாகவும், மருத்துவ சிகிச்சையை அதிகரிப்பது தொடர்பாகவும், கொரோனோ தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள உயரதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்றிரவு ஆலோசனை நடத்தினார். கானொலி வாயிலாக நடந்த இந்த ஆலோசனையின் போது, கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிப்பது தொடர்பாகவும், தேவையான மருந்துகள், பிராணவாயு இருப்பு வைத்திருப்பது உள்ளிட்ட முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். தடுப்பூசி செலுத்துவதை அதிகப்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் ஆலோசனை கூறினார்.

கடந்தாண்டைப் போலவே, கொரோனோ தொற்றுக்கு எதிரான போராட்டத்தை ஒருங்கிணைந்து வெற்றிகரமாக போராடி வெற்றிப் பெறுவோம் என்றும் பிரதமர் மோடி நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.

பிரதமர் தேர்தல் பிரசாரத்தில் மும்முரம்

பிரதமரின் ஆய்வுக் கூட்டத்திற்கு முன்பாக மும்பையில் செய்தியாளர்களிடம் பேசி மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்ரே, மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தேவையான பிராண வாயு சிலிண்டர் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது தொடர்பாக பிரதமரின் கவனத்திற்குக் கொண்டு செல்ல முயன்றேன். ஆனால், பிரதமர் மேற்கு வங்க தேர்தல் பிரசாரத்தில் மும்முரமாக இருப்பதாக தகவல் கூறப்பட்டது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

மகாராஷ்டிராவில் நிலவி வரும் மருந்து தட்டுப்பாடு குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதியிருப்பதாகவும் முதல்வர் உத்தவ் தாக்ரே தெரிவித்துள்ளார்.