மகாராஷ்டிராவில் கொரோனோ பரவல் உச்சத்தை தொட்டுள்ளது. இன்று மட்டும் கொரோனோ தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 63 ஆயிரத்து 729 பேர் என கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் இந்தளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது, இதுவே முதல்முறை.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 63 ஆயிரத்து 294 ஆக பதிவாகியிருந்தது. திங்கள் முதல் வியாழன் வரை இதைவிட எண்ணிக்கை குறைவாக இருந்து வந்த நிலையில், இன்றைய தினம், அதிகமான பேர் கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்றைய தேதியோடு கொரோனோவில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 37 லட்சத்து 3 ஆயிரத்து 584 ஆக உயர்ந்துள்ளது.
இன்று மட்டும் குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 45 ஆயிரத்து 335 ஆக உள்ளது. இந்த எண்ணிக்கையோடு குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 30 லட்சத்து 4 ஆயிரத்து 391 ஆக உள்ளது.
குணமடைவோரின் சதவிகிதம் 81.12 ஆக உள்ள நிலையில், இறப்பு விகிதம் 1.61 சதவிகிதமாக இருக்கிறது என்று மகாராஷ்டிரா மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இன்று ஒரே நாளில் சிகிச்சை பலனின்றி 398 பேர் உயிரிழந்துள்ளது மகாராஷ்டிராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனோவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் இடம் கிடைப்பதில்லை என்ற சோகம் ஒருபுறம் இருக்க, உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மயானங்களில் ஒரே நேரத்தில் 100 கணக்கான உடல்கள் வருவதால், தகன ஏற்பாடுகளை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மாநகராட்சி ஊழியர்கள் கவலையோடு தெரிவிக்கின்றனர்.