Fri. Nov 22nd, 2024

சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தை முதல்முறையாக பார்க்கும் யாரும், அவரிடம் இருக்கும் மனவுறுதியையும், மறைந்து கிடக்கும் பலத்தையும் அறிந்திட மாட்டார்கள். பார்வைக்கு எளியவராக காட்சியளிக்கும் சி.வி.சண்முகம், விழுப்புரம் மாவட்டத்தின் அசைக்க முடியாத அதிமுக தூண். எதிரிகள் கூட பகையை மறந்து வீடுதேடி வந்தால் பாசத்தோடு தழுவி, ஆத்மார்த்தமாக ஆரத் தழுவி அன்புக் காட்டக் கூடியவர், சி.வி.எஸ். என்கிறார்கள் விழுப்புரம் மக்கள்.

அப்பழுக்கற்ற அன்பால் கட்டியிழுக்கும் குணம் கொண்ட சி.வி.எஸ்., கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை ஆயிரம்விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில்,அவர் மீது விசுவாசம் காட்டி வரும் அரசியலுக்கு அப்பாற்பட்ட நல்ல உள்ளங்கள், அவர் விரைவாக பூரண நலம் பெற்று மீண்டும் களத்திற்கு திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

அதேநேரத்தில், விழுப்புரத்தில் அவரின் வெற்றி வாய்ப்பு எப்படியிருக்கும் என்பதை கணிக்க முடியாததால், அதிமுக.வில் உள்ள அமைச்சரின் விசுவாசிகளும் நிம்மதியின்றி தவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்கிற தகவல் கிடைத்துள்ளது. நமக்கு அறிமுகமான அதிமுக நிர்வாகி ஒருவரிடம் பேசினோம்.

விழுப்புரம் மாவட்ட அதிமுக.வில் காலம் காலமாக செல்வாக்குப் படைத்த பிரபலங்கள் நிறைய பேர் இருந்து இருக்கிறார்கள். அவர்களிடம் எல்லாம் காணப்படாத அசாத்திய தைரியம், சி.வி.எஸ்.ஸிடம் உண்டு. அவரது உருவத்திற்கும், உயரத்திற்கும் துளியும் சம்பந்தம் இல்லாதது அவரிடம் காணப்படும் தில்லு. அந்த தில்லுக்காகவே, அவரோடு இணைந்து, அவரது கட்டளைக்கு அடிப்பணிந்து அதிமுக.வில் இயங்கிக் கொண்டிருப்பவர்கள்தான் ஆயிரம் ஆயிரமாயிரம் பேர்.

மனதில் பட்டதை அப்படியே சொல்லி விடுவார் சி.வி.எஸ். கண்டிப்பு காட்டுவதிலும் கனிவு காட்டுவதிலும் அவருக்கு இணை அவரே..விழுப்புரம் தொகுதியில் 2011ல் முதல்முறையாக போட்டியிட்டு வெற்றிப் பெற்றதுமே அமைச்சராக பதவியேற்றார். 2016லும் வெற்றிப் பெற்று மீண்டும் அமைச்சர் ஆனார். 3 வது முறை ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தப் போகிறார் என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தாலும், ஏப்ரல் 6 ஆம் தேதிக்குப் பிறகு கேள்விப்படுகிற தகவல்கள் அச்சமூட்டுபவையாக இருக்கின்றன.

கடந்த 10 ஆண்டுகளில் விழுப்புரம் தொகுதிக்கு மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் பரவலாக மக்கள் பேசும் அளவுக்கு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றி வைத்திருக்கிறார் சி.வி.எஸ். வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் கொரோனோ காலத்தில் தொகுதி மக்களுக்கு செய்த உதவிகனை நினைத்துப் பார்த்து மக்கள் நிச்சயம் தனக்குதான் வாக்களிப்பார்கள் என்று உறுதியான நம்பிக்கை சி.வி.எஸ். ஸிடம் இருக்கிறது.

ஆனால், சி.வி.எஸ்., கொரோனோ தொற்று பாதிப்புக்கு சிகிச்சைப் பெற்று வரும் இந்தநேரத்தில், தொகுதி முழுவதிலும் இருந்து கிடைக்கும் தகவல்கள், எங்களை நிம்மதியிழக்கச் செய்து வருகிறது என்கிறார், அமைச்சர் சி.வி.எஸ்.ஸுக்கு மிக, மிக நெருக்கமான விசுவாசி.

தேர்தல் தேதி அறிவிப்பதற்கு 6 மாதத்திற்கு முன்பே, தொகுதியை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டார் சி.வி.எஸ். ஸின் அண்ணார் சி.வி.ஆர் என்றும் பெரியவர் என்றும் விழுப்புரம் அதிமுக.வினரால் அழைக்கப்படும் சி.வி.ராதாகிருஷ்ணன். சென்னையில் உள்ள அதிமுக.வினர் மத்தியில் ஆர்.கே. என்றே இவரை அழைக்கிறார்கள்.

பெரியவர் என்று அழைக்கப்படும் சி.வி.ஆர்…

சி.வி.எஸ்.ஸிடம் இருப்பது விசுவாசக் கூட்டம் என்றால், ஆர்.கே. வுடன் இருப்பது ஜால்ரா கூட்டம். விழுப்புரத்திலும் சரி, தொகுதியில் உள்ள கிராமங்களிலும் சரி, என்ன மாதிரியாக மக்கள் நினைக்கிறார்கள் என்பதை பட்டுவர்த்தனமாக சொல்லமாட்டார்கள். அப்படி உண்மையைச் சொன்னால் ஆர்.கே.எப்படி எடுத்துக் கொள்வார் என்ற பயத்தில்,, உண்மையை பூசி, மொழுகி, எப்படிச் சொன்னால் ஆர்.கே. சந்தோஷப்படுவாரோ, அதற்கு ஏற்ப சொல்வார்கள். அப்படிபட்டவர்களை நம்பிதான், தொகுதியை ஒப்படைத்துவிட்டார் சி.வி.எஸ்.

கடந்த ஆறு மாத காலமும், இப்படிபட்ட ஜால்ரா கூட்டத்தையே கூட்டிக் கொண்டு விழுப்புரம் தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் சுற்றி வந்தார் ஆர்.கே. அந்தந்த கிராமங்களில் உள்ள அதிமுக நிர்வாகிகளுக்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்காமல், அங்குள்ள இளைஞர்கள் கேட்டதையெல்லாம், குறிப்பாக கேரம் போர்டு, கைப்பந்து, கால்பந்து உள்ளிட்ட விளையாட்டுப் பொருட்களை வாரி வழங்கினார். இப்படி தொகுதிக்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் உள்ள இளைஞர்களுக்கு செலவிட்டது மட்டும் 2 கோடியில் இருந்து 3 கோடி வரைக்கும் இருக்கும்.

தாங்கள் நிர்வாகிகளாக இருக்கும் கிராமத்தில் தங்களை முன்னிலைப்படுத்தாமல், இளைஞர்களை மட்டுமே நம்பி ஆர்.கே. செலவு செய்ததை அப்போதைக்கு ஏற்றுக் கொண்ட கிராம அளவிலான அதிமுக நிர்வாகிகள், வாக்குப்பதிவுக்கு முந்தைய சில நாட்களில் உள்ளார்த்தமாக பணியாற்றவில்லை என்ற செய்தி நேற்றிலிருந்து அரசல் புரசலாக வந்துக் கொண்டிருக்கிறது.

சி.வி.எஸ்.ஸை எதிர்த்து திமுக.வில் யார் நின்றிருந்தாலும் வெற்றியைப் பற்றி துளியும் கவலைப்பட மாட்டோம். சி.வி.எஸ்.ஸை வீழ்த்த வேண்டும் என்று திட்டம் தீட்டியே திமுக தலைமை, வளர்த்த கடாவையே மார்பில் பாய வைக்கும் வகையில், கடந்த 2020 ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளராக பதவி வகித்தவரும் முன்னாள் எம்.பி.யுமான டாக்டர் ஆர்.லட்சுமணனை திமுக.வுக்கு இழுத்து அவரையே சி.வி.எஸ்.ஸுக்கு எதிராக களத்தில் நிறுத்திவிட்டது.

விழுப்புரத்தில் சி.வி.எஸ்.ஸின் அரசியல் அதிரடி என்றால், ஆர்.லட்சுமணனின் அரசியல் அமைதி வழி.. அம்மா (செல்வி ஜெயலலிதா) உயிரோடு இருந்த வரை ஆர்.லட்சுமணன் அதிமுக.வில் கொடி கட்டி பறந்தார். சி.வி.எஸ்.ஸோடு மிக நெருக்கமான நட்பில்தான் இருந்து வந்தார். ஆனால், தர்மயுத்த நாயகர் ஓ.பி.எஸ்.ஸின் ஆதரவாளராக இவர் இருந்ததால், சசிகலா சிறைக்கு செல்வதற்கு முன்பாக ஆர்.லட்சுமணனை கட்சியில் இருந்து நீக்கினார். அவர் வகித்து வந்த மாவட்டச் செயலாளர் பதவியும் பறிபோனது.

அதன் பிறகு ஓ.பி.எஸ்.ஸும், இ.பி.எஸ்.ஸும் இணைந்த பிறகு மீண்டும் லட்சுமணனுக்கு பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்த்தார். ஆனால், அவரை மன்னிக்க சி.வி.எஸ். தயாராக இல்லை. இருவருக்கும் இடையே ஏற்பட்ட புகைச்சலில், தான் வகித்து வந்த மாவட்டச் செயலாளர் பதவியும் சி.வி.எஸ்.ஸுக்கு வழங்கப்பட்டதால், அதிருப்தியில் இருந்து வந்த லட்சுமணன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திமுக.வில் ஐக்கியமானார். அப்போதே திமுக தலைமை, அவருக்கு உறுதியளித்திருக்கும் போல, அவர்தான் விழுப்புரம் திமுக வேட்பாளர் என்று.

திமுக.வில் இணைந்த ஓராண்டிற்குள்ளாகவே, விழுப்புரம் திமுக நிர்வாகிகளை அன்பால் அரவணைத்த ஆர். லட்சுமணன், அமைச்சர் சி.வி.எஸ்.ஸுக்கு கடும் போட்டியாளராக மாறிப் போனார். படுத்துக் கொண்டே ஜெயிப்பேன் என்ற நிலையில் தொகுதியை வைத்திருந்த சி.வி.எஸ்.ஸுக்கு இந்த தேர்தலில் சிம்ம சொப்பனமாக மாறி நிற்கிறார் ஆர். லட்சுமணன்.

அமைச்சருக்கு தொகுதிக்குள் நல்ல பெயர் இருந்தாலும், அவரது அண்ணார் ஆர்.கே.வின் அதிரடி அரசியலைக் கண்டு மனம் வெறுத்துப் போய்விட்டனர் விழுப்புரம் தொகுதி முன்னணி நிர்வாகிகள் பலர். அவருடன் ஏற்பட்ட மன வருத்ததில் தேர்தலுக்கு முன்பாக அதிமுக.வில் இருந்து விலகி விட்டனர், விழுப்புரம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ மணி என்கிற ராஜரத்தினம் மணி என்பவரும் அதில் ஒருவர்.

திமுக தலைமையைப் போல, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரனும், விழுப்புரத்தில் சி.வி.எஸ்.ஸின் அரசியல் செல்வாக்கை அழித்துவிட வேண்டும் என்று காய் நகர்த்தினார். அவரின் முயற்சிக்கு பலன் கிடைக்கிறதோ இல்லையோ, அதிமுக.வில் உள்ள தன்னுடைய பழைய விசுவாசிகள் மூலம் கணிசமான வாக்குகளை ஆர்.லட்சுமணன் மடை மாற்றியிருக்கிறார் என்ற அதிர்ச்சி தகவல், இப்போது கிடைத்துக் கொண்டிருக்கிறது.

வாக்குப்பதிவுக்கு 4 நாட்களுக்கு முன்பு எம்.ஜி.ஆர்.மன்றத்தின் மாவட்ட இணைச் செயலாளர் எஸ்.எம். பாலசண்முகம், சி.வி.எஸ்.ஸுக்கு எதிராக பகீர் புகார்களை கிளப்பிவிட்டு, சி.வி.எஸ்.ஸின் எதிர்பாளர்களை ஒருங்கிணைத்ததும் பாதிப்பு ஏற்படுத்தியிருக்குமோ என்ற அச்சம் இப்போது எழுந்திருக்கிறது.

ஆர்.கே.வுடன் ஒட்டி உறவாடிய ஜால்ரா கூட்டத்தில் சிலர், ஆர்.லட்சுமணனின் சிலிப்பர் செல்லாக இருந்து இருக்கிறார்கள். கூட்டமாக யார் வந்தாலும் பணம் தருவார் ஆர்.கே. என்று கிராமத்து இளைஞர்களுக்கு ரகசியமாக தகவல் பரப்பினார்கள். அவர்களின் தூண்டுதலின் பேரில், கூட்டம் கூட்டமாக வந்த இளைஞர்கள் எல்லாம், அதிமுக.வுக்குதான் வாக்களிக்கப் போகிறார்கள் என்று நம்பிககையில் பணத்தை தண்ணீராக இறைத்தார் ஆர்.கே.ஆனால், அத்தனை பேரும் ஆர்.கே.விடம் பணத்தை வாங்கிக் கொண்டு திமுக.வுக்கு வாக்களித்துவிட்டார்கள் என்று ஜால்ரா கூட்டத்தில் இருந்து செய்தி கசிய விடப்படுகிறது.

அதிமுக தரப்பில் வாக்காளர்களுக்க தலா ஆயிரம் ரூபாய் தரப்பட்டது. 70, 80 சதவிகிதம் பேருக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று கூறி வழங்கப்பட்ட தொகையை, தொகுதி முழுவதும் வாக்காளர்களுக்கு முறையாக வழங்காமல், கட்சி நிர்வாகிகளே அமுக்கிவிட்டனர் என்ற தகவலும் கடந்த இரண்டு நாட்களாக கசிகிறது. அதே நேரம் திமுக தரப்பில் வாக்காளர்களுக்கு கொடுக்கப்பட்ட 500 ரூபாய் பணம் முழுமையாக பட்டுவாடா ஆகியிருக்கிறது.

மற்றொரு பக்கம், பாமக தரப்பு தகவல்களும் திருப்தியாக இல்லை. தலைவர்கள் ஒன்றாக சேர்ந்துவிட்ட போதும், பழைய பகையை மறக்காத பாமக நிர்வாகிகள், திமுக.வுக்கு மறைமுகமாக ஆதரவு திரட்டியதுடன், பெரும்பான்மையானோர் உதயசூரியனுக்கு வாக்களித்திருக்கிறார்கள் என்ற தகவலும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

சி.வி.எஸ்.ஸுக்கு உள்ள ஆழமான கடவுள் பக்தி, தெய்வ வழிபாட்டில் உள்ள ஆழ்ந்த ஈடுபாடு ஆகியவற்றால், கொரோனோவில் இருந்து வெகு விரைவாக பூரண குணமடைந்து விழுப்புரம் திரும்பி விடுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. ஆனால், மே 2 ஆம் தேதி என்ன ரிசல்ட் வருமோ என்ற பயம்தான் நிம்மதியிழக்கச் செய்து இருக்கிறது.

தேர்தலில் வெற்றி தோல்வி சகஜம். ஆனால், சி.வி.எஸ்.ஸிடம் அரசியல் பாடம் கற்ற ஆர்.லட்சுமணனிடம் தோல்வியடைந்தால், சி.வி.எஸ்.ஸுக்கு மட்டுமல்ல, விழுப்புரம் மாவட்ட அதிமுக.வுக்கே அவமானம். ஒரு சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலாவது சி.வி.எஸ். வெற்றிப் பெற்றுவிடுவார் என்ற நம்பிக்கையோடு இருக்கிறோம்.

தப்பித்தவறி வெற்றி வாய்ப்பு இழந்தால், சி.வி.எஸ்.கூட கோபத்தை வெளிப்படுத்தமாட்டார். தோல்வி தரும் விரக்தியில் ஆர்.கே. ஆடப்போகும் ஆட்டத்தை நினைத்தால்தான் இப்போதே ஈரக்குலை எல்லாம் நடுங்குகிறது என்கிறார்கள் அமைச்சர் சி.வி.எஸ்.ஸின் தீவிர விசுவாசிகள்..

தம்பியுடையான் படைக்கு அஞ்சான்.. இந்த பழமொழி சி.வி.எஸ்.ஸுக்கு .100 சதவிகிதம் பொருந்தும்..ஆனால், அண்ணராக உள்ள ஆர்.கே. வின் படையும், செயல்பாடுகளும்தான் சி.வி.எஸ்.ஸுக்கு தலைவலியாக அமையப் போகிறது. என்று கிலி ஏற்படுத்துகிறார்கள் விழுப்புரம் திமுக உடன்பிறப்புகள்.

One thought on “தம்பியுடையான் படைக்கு அஞ்சான்.. அர்த்தமிழக்கச் செய்யும் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் சகோதரர்.. புலம்பும் விழுப்புரம் அதிமுக நிர்வாகிகள்…”

Comments are closed.