Sun. Apr 28th, 2024

இணையதள தொலைக்காட்சிக்கு மனிதநேயம், மதம் தாண்டிய ஒற்றுமை குறித்து பேட்டியளித்த பள்ளி மாணவர் ஏ.அப்துல் கலாம் , தமிழகத்தில் மட்டுமின்றி தமிழ் கூறும் நல்லுலகத்தில் ஒரே நாளில் பிரபலமானார்..அவரின் மனிதநேய சிந்தனையே அவரின் குடும்பத்திற்கு சிக்கலை ஏற்படுத்தி தந்தது..அவருக்கு வைக்கப்பட்ட மாமேதையின் பெயரின் தியாக வாழ்க்கையை புரிந்து கொள்ளாத அவர் வசிக்கும் வீட்டின் உரிமையாளர், ஊடக வெளிச்சம் அந்த சிறுவன் மீது விழுவதை கண்டு எரிச்சல் அடைந்து வாடகை வீட்டை காலி செய்யுமாறு கடும் நெருக்கடி கொடுத்து வந்தார். இதுதொடர்பாக சிறுவனின் தாய் கண்ணீர் மல்க பேட்டி கொடுக்க அதுவும் வைரலானது..அதை பார்த்த முதலமைச்சர் கலாம் குடும்பத்தினரை நேரில் அழைத்து பாராட்டினார். அப்போது, தாங்கள் வறுமை நிலையில் வாடகை வீட்டில் வசிப்பதாகவும், வீட்டின் உரிமையாளர் வீட்டை காலி செய்யும் படி வலியுறுத்துவதாகவும், அரசின் சார்பில் தங்களுக்கு வீடு வழங்க வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்தனர்.

கோரிக்கையை ஏற்ற தாயுள்ளம் கொண்ட முதல்வர் உடனடியாக அவருக்கு தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் வீடு ஒதுக்க வேண்டும் என்று துறை அமைச்சர் என்ற முறையில் நேற்று தொலைபேசி வாயிலாக தா. மோ. அன்பரசனுக்கு உத்திரவிட்டார்.

முதல்வர் உத்திரவின் பேரில் இன்று காலை மாணவர் அப்துல் கலாமின் பெற்றோரை நேரில் அழைத்த அமைச்சர் தா. மோ. அன்பரசன், அவர்களுக்கு எந்த திட்டப் பகுதியில் வீடு ஒதுக்க வேண்டும் என்று கேட்டறிந்து சம்மந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களை தொடர்பு கொண்டு அவருக்கு ஒதுக்கீட்டு ஆணையை விரைவாக தயார் செய்யும் படி கேட்டுக்கொண்டார். நாளைக்குள் (பிப் 26) அவர்களுக்கு தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் வீடு ஒதுக்கி ஆணை வழங்கப்படவுள்ளது.

பின்னர் மாணவர் ஏ.அப்துல்கலாமை பாராட்டி அவருக்கு “பெரியார் இன்றும் என்றும்” நூலினை அமைச்சர் தா. மோ. அன்பரசன் பரிசாக வழங்கி வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.

24 மணிநேரத்தில் சிறுவர் கலாமின் துயரத்தை துடைத்த முதல்வர் மு. க. ஸ்டாலினின் மனித நேயத்தை சமூக ஆர்வலர்கள் மனமுவந்து பாராட்டி வருகின்றனர்…