Thu. May 9th, 2024

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ஆனைவாரி நீர்வீழ்ச்சி, உள்ளூர் மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்றது. விடுமுறை நாட்களில் அங்கு சுற்றுலாப் பயணிகள் நீராடுவது வழக்கம். அதன்படி, அண்மையில் அந்த நீர்வீழ்ச்சியில் பலர் குளித்து கொண்டிருந்த போது, நீர் வரத்து அதிகரித்தது. அதில், கை குழந்தயுடன் தாய் ஒருவர் உள்பட 4 பேர் சிக்கி கொண்டனர்.

வெள்ளத்தில் அடித்து செல்லாமல் இருக்க, நீர்வீழ்ச்சியையொட்டி இருந்த பாறை மீது ஒருவர் பின் ஒருவராக ஏற முயன்றனர். அங்கிருந்தவர்கள் மரத்தில் கயிறு கட்டி மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருவர் கயிறை பிடித்து உயிர் தப்பிய நிலையில், கைக் குழந்தையுடன் தாய் மட்டும் பாறை மீது ஏற முடியாமல் திணறினார். இதனைத்தொடர்ந்து, இருவரையும் மீட்கும் முயற்சியில் இரண்டு இளைஞர்கள் ஈடுபட்டனர். கடுமையான போராட்டத்திற்குப் பிறகு சேயும், தாயும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக மீட்புப் பணியில் ஈடுபட்டஇளைஞர்கள் இருவரும் பாறையில் இருந்து தவறி ஆர்ப்பரித்து ஓடிய வெள்ள நீரில் விழுந்தனர். அதனைப் பார்த்து, அங்கிருந்தவர்கள் அலறினர். ஆனால், நல்லவேளையாக இருவருக்கும் நீச்சல் தெரிந்து இருந்ததால், அடித்து செல்லப்பட்ட வெள்ளத்தில் நீந்தி, கரையேறினர்.

பதைபதைக்க வைக்கும் இந்த நிகழ்வை அங்கிருந்த சுற்றுலாப் பயணி ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தங்கள் உயிரை பணையம் வைத்து சேயையும், தாயையும் மீட்ட இளைஞர்களின் துணிச்சலான செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. முதல்வர் மு.க.ஸ்டாலினும், இளைஞர்களின் தீரமிக்க செயலை பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பாராட்டு செய்தி இதோ….

முதல்வர் மு.க.ஸ்டாலினை தொடர்ந்து வனத்துறை செயலாளர் சுப்பிரியா சாஹும் தனது டிவிட்டர் பக்கத்தில் ஆனைவாரி நீர்வீழ்ச்சி மீட்பு நிகழ்வை பதிவேற்றம் செய்து, அந்த இளைஞர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இதேபோல், காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் ஐபிஎஸ்.ஸும் ஆனைவாரி நீர்வீழ்ச்சி மீட்பு நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.