Fri. Nov 22nd, 2024

அதிமுக அமைச்சர்களில் 9 பேர் தோல்வி முகத்தில் உள்ளனர். சிவகாசி தொகுதியில் இருந்து ராஜபாளையத்திற்கு மாறிய அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, 3 மற்றும் 4 வது சுற்றுகளின் முடிவில் பின்தங்கிய நிலையிலேயே உள்ளார். அடுத்தடுத்த சுற்றுகளிலும் முன்னேறுவதும் பின்தங்குவதுமாக ராஜேந்திர பாலாஜியின் வெற்றி ஸ்கிராப் மாறிக் கொண்டே வருகிறது.

ராஜபாளையம் தொகுதி அ.தி-மு.க.வின் கோட்டை என்று கூறப்பட்டு வரும் நிலையில், அங்கு சாதாரண தொண்டரை நிறுத்தினால் கூட எளிதாக வெற்றிப் பெற்றுவிடுவார் என்பதுதான் களயதார்த்தம். அதன் காரணமாகவே சிவகாசியில் கடந்த 2016 ஆம் ஆண்டி வெற்றிப்பெற்ற கே.டி.ராஜேந்திரபாலாஜி, 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் ( தற்போதைய) தேர்தலில் ராஜபாளையத்தில் போட்டியிட்டார்.

அவருடைய கெட்ட நேரம் ராஜபாளையத்தில் அதிமுக பின்னடைவை சந்தித்து வரும் நிலையில், கடந்த 2016 ஆம் ஆண்டில் போட்டியிட்டு வெற்றிப் பெற்ற சிவகாசி தொகுதியில் அதிமுக முன்னிலையில் உள்ளது.

அஞ்சல் வாக்குகளில் முன்னிலையில் இருந்த ராஜேந்திர பாலாஜி, அடுத்தடுத்து வாக்கு எண்ணிக்கை சுற்றுகளில் பின்னடவை தொடர்ந்து சந்தித்து வருகிறார்.

இவரைப் போல, அதிமுக.வின் முன்னணி அமைச்சர்களான சிவி சண்முகம், ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன், எம்.சி.சம்பத், காமராஜ், எம்.ஆர். விஜயபாஸ்கர், பெஞ்சமின், ராஜலெட்சுமி ஆகியோருடன் மொத்தம் 9 அமைச்சர்கள் தொடர்ந்து தோல்வி முகத்திலேயே உள்ளனர்.

சிவி சண்முகத்தின் பின்னடைவுக்கு அவரது சகோதரர் ராதாகிருஷ்ணனின் அடாவடிதான் காரணம் என்கிறார்கள் விழுப்பரம் அதிமுக நிர்வாகிகள். மேலும், அவரை எதிர்த்து போட்டியிடும் திமுக வேட்பாளர் லட்சுமணனும் முன்னாள் அதிமுக பிரமுகர் என்பதுதான் சுவாரஸ்யமானது. ,

சி.வி.சண்முகம்

விழுப்புரம் அரசியலில் சி.வி. சண்முகத்திற்கு சீனியராக இருந்த லட்சுமணன், 2016 ல் செல்வி ஜெயலலிதா மறைந்தபோது, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளராக மாறினார். அதன் காரணமாக, அவர் வகித்து வந்த விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளர் பதவி பறிபோனது. அவரிடமிருந்த மாவட்டச் செயலாளர் பதவியைதான், சிவி சண்முகத்திற்கு வழங்கினார் வி.கே.சசிகலா.

சி.வி.சண்முகத்தின் தோல்லி, அவரது அரசியல் வாழ்க்கைக்கே அசிங்கமாக போய்விடும் என்று கதறுகிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடனான நெருக்கத்தால், அதிமுக நிர்வாகிகளை புறக்கணித்ததன் விளைவை ஜெயக்குமார் எதிர்கொண்டிருக்கிறார் என்றும், எஞ்சிய பிற அமைச்சர்கள், அதிமுக.வினருக்கும் தொகுதி மக்களையும் கடந்த 5 ஆண்டு காலமும் தொடர்ந்து புறக்கணித்து வந்தததன் காரணமாக தோல்வியை தழுவும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர் என்கிறார்கள் அதிமுக முன்னணி நிர்வாகிகள்…