Thu. Nov 21st, 2024

தாரை.வே.இளமதி,சிறப்புச் செய்தியாளர்.

பத்திரிகையாளர் நலன், வளர்ச்சியில் மிகவும் அக்கறை காட்டும் பத்திரிகையாளர் சங்கம் ஒன்று சென்னையில் இருக்கிறது என்றால், அது சென்னை உயர்நீதிமன்ற பத்திரிகையாளர் சங்கம்தான் என்று பெருமையாகவே கூறலாம். குறைந்த எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் இருந்தாலும் கூட   நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் இடையே இருக்கும் பரஸ்பர நம்பிக்கை வியக்க வைக்க கூடிய ஒன்றுதான்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, மூத்த நீதிபதிகள் உள்பட அனைத்து நீதிபதிகள் மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தை உள்ளடக்கிய அனைத்து நீதிமன்றகளின் மூத்த வழக்கறிஞர்கள் முதல் இளம் தலைமுறை வழக்கறிஞர்கள் வரை அனைவரிடமும் உயர்நீதிமன்ற செய்தியாளர்கள் பண்பட்ட நேசத்தை உருவாக்கி கொள்ளுதல் என்பதே இந்த சங்கத்தின் முதன்மையான நோக்கமாகும்.

நீதிமன்ற செய்திகள்தான் வாழ்க்கை என்றாகி விட்ட நிலையில், அந்த துறையில் செய்தி சேகரிப்பை மேம்படுத்தி கொள்ள, ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள். இதுபோன்ற முன்னெடுப்புகள்  20 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை பிரஸ் கிளப்பிலும் நடைபெற்று இருக்கிறது..

ஓவ்வொரு மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை மாலையில் அனுபவம் மிகுந்த வழக்கறிஞரை அழைத்து அவரது அனுபவங்களை உள்வாங்கிகொள்கிறார்கள்.. வழக்கறிஞர் நண்பரின் அழைப்பின் பேரில் சென்று இருந்து போது தற்செயலாக செப் 27 அன்று நடைபெற்ற அந்த கூட்டத்தில் பார்வையாளராக கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

சங்க துணை தலைவர் வில்சன் ஆப்ரகாம், செயலாளர் ரமேஷ் குமார், நிர்வாக குழு உறுப்பினர்கள்  சங்கர் குமார்,சுப்பையா உள்பட பல மூத்த செய்தியாளர்களுடன்  20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே நல்ல நட்பு இருந்து வருகிறது..

மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதாவால் புகழ் வெளிச்சத்திற்கு வந்த மூத்த வழக்கறிஞர் ஜோதி, 1974 ஆம் ஆண்டில் இருந்து நீதித்துறையோடு இருந்து வரும் 50 ஆண்டு கால அனுப்புவங்களை அவருக்கு உரிய பாணியில் நகைச்சுவையோடு எடுத்து உரைத்தார். 90 நிமிடங்களுக்கு மேல் அனுபவங்களை பகிர்ந்துகொன்ட நேரத்தில் மூத்த செய்தியாளர் சேகர், ஆவுடையப்பன் உள்பட சங்க நிர்வாகிகளுடனான நெருக்கத்தை மிகவும் நெகிழ்ச்சியோடு நினைவு கூர்ந்தார்..

உரையாடலின் துவக்கத்தில் அறிமுக உரையாற்றிய ரமேஷ் குமார், செந்தில் பாலாஜி வழக்கில் பிணை விடுவிப்பில் ஆவணங்கள் தாக்கல் விவகாரத்தில் சென்னை அமர்வு நீதிமன்றம் முதல்முறையாக எழுப்பிய குழப்பத்தை பற்றிய கருத்தை கேட்டுக்கொண்டதுடன், நீதிமன்ற விசாரணையின் போது இந்தியாவில் எந்தவொரு வழக்கறிஞரும் நீதிபதியின் பெயரை சொல்லி அழைத்தது இல்லை என்பது வரலாறாக இருக்கும் போது ஜோதி அவர்கள் மட்டுமே நீதிபதியின் பெயரை நேருக்கு நேர் சொல்லி அழைத்தவர் என்று கூறி மிகவும் தைரியமான வழக்கறிஞர் என்று சுவாரஸ்யமாக பேசி ஜோதியின் தனித்துவமான குணநலன்களை பற்றிய அபூர்வ தகவல்களை  அறிந்து கொள்ளும் ஆர்வத்தை முதலிலேயே தூண்டிவிட்டார்.

நிகழ்ச்சியின் நிறைவில் நண்பர் சுப்பையா, செல்வி ஜெயலலிதா கரடு முரடானவர், அவரை சந்திப்பதே கடினம் என்றெல்லாம் செய்திகள் வெளியாகினவே,…அவரது வக்கீல் என்று முறையில் உங்கள் அனுபவம் எப்படி என்று வினா எழுப்பினார்.

செல்வி ஜெயலலிதா மாதிரி பண்புள்ள, கனிவான, கருத்துக்களை உள் வாங்கி கொள்வதில் சிறந்த தலைவரை பார்க்கவே முடியாது..இந்தியாவிலே மிகச் சிறந்த ஆளுமையாக நிலைத்து நின்று இருக்க கூடியவர், கூடா நட்பின் காரணமாக இப்பிறவியின் நல்வாய்ப்பை இழந்து விட்டார் என்று வேதனையை வெளிப்படுத்தினார்.

சிறப்பு உரையின் துவக்கத்தில், திராவிட பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்தவன். இரண்டு அண்ணார்கள், அண்ணிகள் தன்னை அரவணைத்ததால் தான் இந்தளவுக்கு உயரத்தை தொட முடிந்தது. செல்வ செழிப்பில் இருந்த போதும் தான் சராசரி மாணவன்தான். வழக்கறிஞர் ஆக வேண்டும் என்பது பள்ளி கால கனவு. முதலியார் பட்டப்பெயரை கொண்ட சைவ வேளாளர் எனும் முன்னேறிய வகுப்பில் பிறந்ததால் கடின உழைப்பின் மூலமே கல்வி தகுதியை வளர்த்து கொள்ள முடிந்தது. தனி மனித வாழ்க்கையில் உறவுகள், நண்பர்களிடம் அன்பு காட்டுங்கள், அரவணைத்து செல்லுங்கள்..அதனால் கிடைக்கும் மகிழ்ச்சி வேறு எதுவும் தந்து விடாது என்று முன்னுரையின் போது அழுத்தமாக பதிவு செய்த போதே அவரின் ஒவ்வொரு வார்த்தையையும் உள்வாங்கி கொள்ள மனம் தயாராகிவிடுகிறது.

1991 ஆம் ஆண்டுக்கு முன்பே டான்சி நிறுவனத்திற்கு பணியாற்றி இருக்கிறேன். கிரனைட் குவாரி உரிமத்தில் இருந்து வந்த சில தொழில் அதிபர்களின் ஆதிக்கத்தை அடித்து நொறுக்க, தான் உருவாக்கிய விதி ஒன்று தான் செலவி ஜெயலலிதா முதல்வர் ஆனவுடன் அரசு வழக்கறிஞ்ராக தான் பணியாற்றும் வாய்ப்பை காலம் ஏற்படுத்திவிட்டது. ஒரு வழக்கிற்கு ரூ 5000 என சன்மானம் என கூறப்பட்டபோது, அதைவிட பல மடங்கு வருவாய் கிடைத்ததால் அரசு வழக்கறிஞர் பணியை ஏற்க மறுத்தேன். அப்போது தான் முதல்முறையாக செல்வி ஜெயலலிதாவின் அழைப்பின் பேரில் நேரில் சந்தித்தேன். தனது இயலாமைக்கான காரணத்தை விளக்கிய பிறகும் நீங்கள் தான் அரசு வழக்கறிஞர் என்று அழுத்தமாக கூறி அனுப்பி வைத்துவிட்டார் .பின்னர் நான்கு ஐந்து பொது நிறுவனங்களின் வழக்குகளுக்கு வாதாடும் வாய்ப்பை தந்து சன்மான தொகையை அதிகாகமாக கிடைக்கும் வாய்ப்பை உருவாக்கினார்.

வழக்கு பற்றி ஆழமாக விவாதிக்கும் பண்பு அவரிடம் இருந்தது..ஆனால் அவரின் நம்பிக்கை பெற்று இருந்த வழக்கறிஞர்கள், பயத்தின் காரணமாக உண்மைகளை சொல்ல முன்வரவில்லை. அவருடனான ஒவ்வொரு சந்திப்பின் போதும் உண்மையாகவே இருந்தேன்..அதுதான் எனக்கு பெறும் துயரத்தை தந்துவிட்டது என்று கூறி பல்வேறு நிகழ்வுகளை எடுத்து உரைத்தார்.

தைரியமாக , அறிவு கூர்மையாக வாதாடியாக தருணங்களை பட்டியலிட்ட ஜோதி, இலங்கை போரை பற்றிய தகவல்களை பற்றி பேசிய போது அவரையும் அறியாமல் கண்கலங்கிவிட்டார்..முள்ளிவாய்க்கால் துயரத்தை நேரில் பார்த்தபோது ரத்தம் படிந்த மண்ணில் துடிதுடித்த துயரத்தை பார்வையாளர்களிடமும் கடத்தி விட்டார்.

பல லட்ச மக்களின் உயிரை பறித்த அந்த நாட்களின் துயரத்தை பற்றி பேசிய நேரத்தில் அவரால் அழுகையை அடக்க முடியவில்லை..தமிழ் இனத்திற்கு உரிய பெருமைகளை காப்பாற்ற வேண்டும். இன்றைய இளந்தலைமுறை யினரிடம் இன, மொழி உணர்வு குறைந்து விட்டது வேதனையை தருகிறது என்று கூறியவர், தமிழ் மண்ணிற்கு தீங்கு விளைவிக்கும் மாற்று சிந்தாந்தத்திற்கு எதிராக தமிழ் சமுதாயத்தை கட்டமைக்க வேண்டிய கடமை அரசியல் தளத்தை கடந்து அனைவருக்கும் இருக்கிறது என்று அழுத்தம் திருத்தமாக பதிவு செய்தார்.. ஒட்டுமொத்த வழக்கறிஞர் வாழ்க்கையிலும் நீதிமன்ற செய்தியாளர்களுடன் இருந்து வந்த நெருக்கத்தை சுட்டிக்காட்டியவர், மூத்த செய்தியாளர்கள் ஆவுடையப்பன், சேகர் உள்ளிட்டவர்களின் நேசத்தையும் வெளிப்படுத்த தயங்கவில்லை. நீதிமன்ற செய்தியாளர்கள் அனைவருமே திறமைசாலிகள் என்று மனம் திறந்து பாராட்டிவர் மூத்த வழக்கறிஞர்களின் அனுபவத்தை அங்கீகரிப்பது ஆக சிறந்த செயல் என்று கூறி நெகிழ்ச்சியை ஏற்படுத்தினார்..

உரையாடலின் போது, நீதிபதி இருக்கையை நோக்கி ஏன் நகரவில்லை என்ற கேள்வி எழுந்த போது, அவர் பதில் கூறுவதற்கு முன்பே பங்கேற்பாளரான மூத்த வழக்கறிஞர் சூரிய பிரகாசம், உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவத்திற்கு முன்பாகவே நீதிபதி உயர்வு தேடி வந்தது. உயர் பதவி மீது துளியளவு  ஆசைகூட கொள்ளாமல் மிகுந்த மனத்துணிவோடு புறக்கணித்தவர் ஜோதி என்று வெளிப்படையாக போட்டு உடைத்தார்.

சிறிய அரங்கில் நடைபெறும் இதுபோன்ற நிகழ்வுகள், சென்னை பிரஸ் கிளப் போன்ற பெரிய அரங்குகளில் அனைத்து ஊடகர்களும் கலந்து கொள்ளும் வகையில் நடத்தப்பட்டால், பழுத்த ஆன்றோர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை தரும் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *