தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இங்கிலாந்தில் முகாமிட்டு இருக்கும் நேரத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வார வாரம் தமிழ்நாட்டுக்கு வருவது வெறும் பாஜக வளர்ச்சிக்கு மட்டுமல்ல, திமுக அரசின் செயல்பாடுகளை ரகசியமாக கண்காணிக்கவும் தான் என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறார் மத்திய உளவுத்துறை அதிகாரி ஒருவர்.. செப்டம்பர் 2 வது வாரத்தில் கோவை மாவட்டத்தில் நிர்மலா சீதாராமன் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது தமிழக அரசு அதிகாரி ஒருவர், ரகசியமாக சந்தித்து நிர்மலா சீதாராமனிடம் கொடுத்த புகார் ஒன்றுதான் இப்போது திமுக அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் ஆயுதமாக மாறியிருக்கிறது என்கிறார்..
நல்லரசு விசாரணையில் கிடைத்த தகவல்கள், அதிர்ச்சி ரகம்……..
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியை விட தற்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில்தான் அரசு அதிகாரிகளுக்கு அதிகளவில் தண்டனைகள் வழங்கப்பட்டு வருவதாக மனம் நொந்து கூறுகிறார்கள் திமுக ஆதரவு அரசு அதிகாரிகள்.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கூட்டுறவு துறை மற்றும் கூட்டுறவு வீட்டு வசதி வாரிய சங்கத்தின் அலுவலர்கள் 14 பேர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டு இருப்பதும் அதன் பின்னணியில் மெட்ரோ சிட்டி எனும் சென்னை பெருநகர கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தின் நிர்வாகிகள் இருக்கிறார்கள் என்று பாதிக்கப்பட்ட தரப்பினர் கூறிவருகிறார்கள் என்பதும்தான் அதிர்ச்சியளிக்கும் தகவல் ஆகும்.
தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்கள் நூற்றுக்கணக்கில் செயல்பட்டு வருகின்றன..அந்தந்த பகுதியில் உள்ள மக்களுக்கு நியாயமான விலையில் வீட்டுமனைகள் கிடைப்பதற்கு கூட்டுறவு நிதியை பயன்படுத்தி தனியாரிடம் இருந்து நிலத்தை பெற்று வீட்டுமனைகள் பிரித்து விற்பனை செய்வதுதான், இந்த சங்கங்களின் பிரதான பணியாகும். சட்டத்திற்கு புறம்பாக செயல்படாமல் கூட்டுறவுத் துறை அனுமதித்த சட்டங்களின்படி விற்பனை செய்தாலே சங்க பணியாளர்கள் முதல் கூட்டுறவு பதிவாளர் வரையிலும் அரசியல்வாதிகளுக்கும் ஆட்சியாளர்களுக்கும் கவனிப்புகள் பலமாகவே இருக்கும். இதன் காரணமாகவே, வீட்டு வசதி சங்கங்கள் துவங்கபட்ட காலத்தில் இருந்தே அரசியல் பிரமுகர்கள், ஓய்வு பெற்ற கூட்டுறவுத் துறை அலுவலர்கள் என ஏராளமானோர் கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள்..
முந்தைய அதிமுக, திமுக ஆட்சிகளில் நடைபெறாத அநியாயம், திராவிட மாடல் ஆட்சியில் தான் அதிகமாக அரங்கேறியிருக்கிறது என்று கூறும் கூட்டுறவுத் துறை அதிகாரிகள், கூட்டுறவுத் துறை பதிவாளர்கள் உள்பட 11 அரசு அதிகாரிகள் மற்றும் சங்க அலுவர்கள் என கொத்தாக 14 அலுவலர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்பது தான் ஒட்டுமொத்த கூட்டுறவுத் துறை அலுவலர்களையும் கொந்தளிக்க வைத்துள்ளது..
ஏ.டி. பாஸ்கரன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் (வீட்டு வசதி), பழனிவேலு, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குனர், தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி இணையம், சண்முகசுந்தரம், பொது மேலாளர், தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி இணையம், ரேவதி, கூட்டுறவு சார்பதிவாளர்-வீட்டு வசதி அலுவலகம், இளங்கோ, உதவி பொது மேலாளர், தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி இணையம், சங்கர், மேலாளர் தமிழ்நாடு கூட்டுறவு வசதி இணையம் உள்பட 14 அலுவர்கள் துறை ரீதியிலான விசாரணையும் எதிர்கொண்டு உள்ளனர்..தங்களுக்கு எதிரான தற்காலிக பணியிடை நீக்கம் மற்றும் துறை ரீதியிலான விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என கோரி 7 அலுவலர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்குகள் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்த போது துறை ரீதியிலான விசாரணைக்கு தடை விதித்த நீதிபதி, அனைத்து வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்கும் வகையில் பட்டியலிடுமாறு உத்தரவிட்டுள்ளார். அக்டோபர் 1 ஆம் தேதி இந்த வழக்குகள் மீதான விசாரணை மீண்டும் நடக்கும் போது பாதிக்கப்பட்ட அரசு அலுவலர்கள் சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர்கள், இந்த விவகாரத்தில் முதல்வரின் நிழலாக உள்ளவரின் அதிகார துஷ்பிரயோகம், பணத்தாசை உள்ளிட்டவற்றையம் உயர் ஐஏஎஸ் அதிகாரிகளின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளையும் ஆட்சி தலைமையின் பெயரை தவறாக பயன்படுத்திய பிரமுகர்களின் கைப்புள்ளையாக இருந்த கோழைத்தனத்தையும் தகுந்த ஆதரங்களுடன் அதிர்ச்சி தரும் வாதத்தை முன்வைக்க உள்ளனர்..ஏற்கனவே ஆளும்கட்சி அமைச்சர்கள் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணையிலேயே கண்டிப்பு காட்டி வரும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வீட்டுவசதி வாரிய மோசடிகளிலும் ஆட்சி தலைமைக்கு நெருக்கமானவர்களின் தொடர்பு இருக்கிறது என நம்பி விட்டால், அரசு அதிகாரிகள் சஸ்பென்ட் வழக்குகள் திராவிட மாடல் ஆட்சிக்கு மிக பெரிய சிக்கலை ஏற்படுத்தி விடும் என்று கவலையோடு கூறுகிறார்கள் திமுக ஆதரவு கூட்டுறவு துறை அதிகாரிகள்.
நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்காக அரசு அதிகாரிகள் காத்திருக்கும் அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட கூட்டுறவுத் துறை அதிகாரிகள் குடுப்பதை சேர்த்த பாஜக பிரமுகர் ஒருவர்தான், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் இந்த விவகாரத்தில் மத்திய அமலாக்கத்துறை விசாரணை நடத்த வேண்டும் என்று முறையிட்டு இருக்கிறார் என்று மத்திய உளவுத் துறை அதிகாரி கூறுகிறார்.
மத்திய அமலாக்கத்துறையின் விசாரணை சூடு பிடித்தால் திராவிட மாடல் ஆட்சி தலைமைக்கே சிக்கலை ஏற்படுத்தும் வகையில் மெட்ரோ சிட்டி சங்க நிர்வாகிகளின் சித்து விளையாட்டுகள் அம்பலத்திற்கு வரும் என்றும் மறைந்த திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி உயிரோடு இருந்த காலத்தில் அவரின் இளம்வயது கொண்ட உதவியாளரின் பெயரிலான புரோக்கர் ஒருவர், ஆட்சி மேலிடத்தின் பெயரை பயன்படுத்தி ஐஏஎஸ் அதிகாரிகள், கூட்டுறவு அதிகாரிகளை மிரட்டி எப்படி எல்லாம் காரியம் சாதித்து இருக்கிறார் என்பதும் வெட்ட வெளிச்சமாகி விடும் என்று பொடி வைத்து பேசுகிறார்கள் பாஜக மூத்த நிர்வாகிகள்..
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, திமுக அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகளால் ஏற்படும் ஆபத்தைவிட ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் திமுகவிற்கு தொடர்பு இல்லாதவர்களால்தான் அதிகமான நெருக்கடிகள் ஏற்பட்டு கொண்டிருக்கிறது என்பதை திராவிட மாடல் ஆட்சியின் முதல்வர் உணர்ந்து, விழித்துக்கொள்ள வேண்டிய சரியான காலம் இதுவே…
[…] […]