கடந்த ஓராண்டுக்கு மேலாகவே 2026 தேர்தல் வெற்றியை மையமாக வைத்தே ஆளும் கட்சியான திமுக , அன்றாடம் காய் நகர்த்தி வருகிறது ..அரசு நிகழ்ச்சியானாலும் கட்சி விழாக்கள் என்றாலும் பாஜக எதிர்ப்பை பிரதானமாக வைத்து பரப்புரை செய்து வருகிறார்கள் திமுக தலைவர்கள்.. முதல் அமைச்சர் மு க ஸ்டாலினும் துணை முதல் அமைச்சர் உதயநிதியும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசை ஆக்ரோசமாக எதிர்த்து வருகிறார்கள்.
கடந்த சிலமாதங்களாகவே, தமிழக கல்வித்துறைக்கு மோடி அரசு நிதி ஒதுக்காமல் வஞ்சித்து வருகிறது என்று மாநிலம் முழுவதும் திமுக அமைச்சர்கள் சுமத்தி வரும் குற்றச்சாட்டுகள் பொது மக்களிடம் அதீத கவனத்தை பெற்று வருகிறது. திமுக அரசின் குமறல்களை அதன் கூட்டணி கட்சிகளும் ஓங்கி முழங்குவதால் தமிழக பாஜக தலைவர்கள் விழி பிதுங்கி நிற்கிறார்கள்.

பி எம் ஸ்ரீ திட்டத்தில் உள்ள அம்சங்களை விளக்கமாக அவர்கள் எடுத்து கூறினாலும் மக்களிடம் அவர்கள் தரப்பின் நியாயம் எடுபடவில்லை. இத்தனைக்கும் திராவிட இயக்கங்களுக்கு எதிராக அக்னி வார்த்தைகளை எப்போதுமே வீசி வரும் மூத்த அரசியல் தலைவர் பழ கருப்பையா பி எம் ஸ்ரீ திட்டத்திற்கு ஆதரவாக பேசினாலும் கூட ஈனஸ்வரம் போல தான் கேட்கிறது.. இப்படி பாஜகவை வலிமையாக எதிர்ப்பதற்கு வாரந்தோறும் திமுகவுக்கு ஏதாவது ஒரு விவகாரம் சிக்கி விடுகிறது..
இந்த வாரம் என்ற கணக்காக. எம் பி தொகுதி குறைப்பு என்ற விவகாரத்தை கையில் எடுத்து அடித்து ஆடிக்கொண்டு இருக்கிறது திமுக.. நிம்மதியாக மூச்சு விட கூட நேரம் தராமல் அதிரடி அரசியல் செய்யும் திமுகவை பார்த்து (அதிக பிரசங்கி-பாஜக உட்கட்சி குரல் ) தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையே திணறுகிறார் என்கிறார்கள் அவரது தீவிர விசுவாசிகள்..

பி எம் ஸ்ரீ விவகாரத்தில் பாஜகவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த அதன் கூட்டணி கட்சிகள்கூட , நாடாளுமன்ற தொகுதிகள் மறுவரையில் திமுக விரித்த வலையில் விழுந்து விட்டது தான் அண்ணாமலைக்கு பெரும் தலைவலியை கொடுத்து விட்டது. திமுக அரசு கூட்டிய அனைத்து கட்சி கூட்டத்தில் பாமக உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டது திமுகவின் ராஜதந்திரத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள்.
தமிழக நலனை முன்வைத்து திமுக அடித்து ஆடி வரும் நேரத்தில் அதன் கூட்டணி கட்சிகளை போலவே பாஜக கூட்டணி கட்சிகளையும் தங்கள் பக்கம் நிற்கவைத்து வாண வேடிக்கை காட்டிக்கொண்டு இருக்கிறது, ஆளும் தலைமை..ஆனால் எதிர்முகாமோ 2026 தேர்தலை கருத்தில் கொண்டு அரசியல் செய்து வந்தாலும் கூட ஆளும் கட்சியான திமுகவுக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவை தங்கள் பக்கம் இழுக்க பாஜக மேலிட தலைவர்களால் முடியவே இல்லை என்பது தான் அக்கட்சி மூத்த நிர்வாகிகளின் ஆழ்ந்த கவலையாகும் .

அதுவும் அண்ணாமலையுடன் கைகோர்த்து நிற்க அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமல்ல இரண்டாம் கட்ட தலைவர்களான நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், சிவி சண்முகம், கேபி முனுசாமி, ஜெயக்குமார்,ஆர் பி உதயகுமார் உள்ளிட்டவர்கள் கூட தயாராக இல்லை என்பதை எஸ் பி வேலுமணி இல்ல திருமண விழா கட்சிகள் வெளிப்படுத்தியதை கண்டு மனம் நொந்து போய் விட்டார்கள் பாஜக இரண்டாம் கட்ட தலைவர்கள் .
இரண்டு கட்சிகளிடம் கொள்கை சார்ந்து எந்த முரண்பாடும் இன்றைய தேதியில் இல்லை என்ற போதும் தமிழகத்தில் அடி ஆழம் வரை பரவி இருக்கும் ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பதற்கு கூட இரண்டு கட்சிகளும் ஓரணியில் திரள விருப்பம் இல்லாதவர்களாக உள்ளார்கள்

2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி வலுவாக இருந்தால் தான் சட்டப்பேரவையில் நுழைய முடியும் என்ற நிர்ப்பந்தத்தில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர்களை போலவே தற்போதைய பாஜக சட்டமன்ற உறுப்பினர்களும் அதிமுக – பாஜக கூட்டணி எப்படியாவது அமைய வேண்டும் என்று ஒவ்வொரு நிமிடமும் பிரார்த்தனையில் ஈடு பட்டு வருகிறார்கள்..ஆனால் எடப்படியாரோ பாஜகவின் பாச (பாசிச) வலையில் மீண்டும் சிக்கி விட கூடாது என்று நடிகர் விஜய் வாசம் புரியும் திசை நோக்கியே தவம் இருந்து கொண்டுஇருக்கிறார்..இரட்டை இலை தொடர்பான வழக்கால் இ பி எஸின் சகாப்தமே முடிந்து விடும் என்ற ஆருடம் மூலைக்கு மூலை கேட்டாலும் கூட அவரின் இலக்கு மாறவில்லை.

விஜயுடன் கூட்டணி அமைத்து 2026 தேர்தலில் அதிமுக தனி பெரும்பொன்மையுடன் வெற்றி பெறுவதையும் முதல்வர் நாற்காலியில் இபிஎஸ் மீண்டும் அமர்வதை எந்த விலை கொடுத்தாவது தடுத்து விட வேண்டும் என்ற வைராக்கியதுடன் ஓபிஎஸ், டிடிவி தினகரன், அன்புமணி ராமதாஸ், அண்ணாமலை ஆகியோர் விஜய் தனித்தே தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் மத்திய பாஜக அரசு சித்துவேலைகளை காட்ட வேண்டும் என்று தினந்தோறும் வேண்டி கொண்டு இருக்கிறார்கள்..
இந்த பின்னணியை முழுமையாக உணர்ந்து கொண்டு இருக்கும் இபிஸ், தனது முதலமைச்சர் நாற்காலியை காப்பாற்றி கொடுக்கும் சக்தி கொண்ட ஆபத்பாண்டவனாக நடிகர் விஜயை பார்க்கிறார்..மணிகளை நம்பி கொண்டு இருந்தவருக்கு இன்றைய தேதியில் விஜய் தான் ராஜ குரு. இதன் காரணமாகவே திமுக தான் எங்களுக்கு முதல் எதிரி என்று கூக்குரல் விடும் இபிஸை குழப்பத்தில் ஆழ்த்தவே அவரது குரலாகவே திமுவுக்கு எதிராக குரல் கொடுக்க தயாராகிவிட்ட போதும் அவருடன் கைகோர்க்க பழைய கசப்புகளை மறந்து விட்டு வர அண்ணாமலையும் தயக்கம் காட்டிவருகிறார்.
.இருவருக்குக்கும் இடையே மூண்ட விரோதம் இப்போதைக்கு முடிவுக்கு வராது என்பதால் தான் பாமக தலைவர் அன்புமணி உள்ளிட்ட பாஜக கூட்டணி கட்சிகள் 2026 தேர்தலில் தங்கள் தலையெழுத்து என்னாகுமோ என்ற அச்சத்தில் உள்ளார்கள்..

எதிர்க்கட்சிகள் பல குழுவாக நிற்பதை சாதகமாக்கி கொண்டு 2026 சட்டமன்ற தேர்தலில் ஒட்டுமொத்தமாக அறுவடை செய்ய பதினாறு கால் பாய்ச்சலில் ஆளும் திமுக பாய்ந்து கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் அந்த அரசுக்கு எதிராக வலிமையான போராட்டத்தை முன்னெடுக்க அதிமுகவும் பாஜகவும் ஒரே மேடையில் இணைந்து முழக்கம் எழுப்ப இன்னும் பல மாதங்கள் ஆகலாம்.
திமுக அரசுக்கு எதிராக பிரம்மாஸ்திரங்களாக ஊழல், பாலியல் வன்முறை, கொலைகள் போன்ற பொது மக்களை நிம்மதியிழக்க செய்து கொண்டு இருக்கும் விவகாரங்கள் வரிசை கட்டி நிற்கும் போதும் ஓராணியில் திரள்வதற்கு எதிர்க்கட்சிகள் இப்போதைக்கு முன்வர மாட்டார்கள் என்பதால் தான் அதிர்ஷ்ட காற்று தங்கள் பக்கமே வீசி கொண்டு இருப்பதாக நினைத்து திமுக தலைமை அடித்து ஆடிக்கொண்டு இருக்கிறது.. இதுபோன்ற ஆட்டங்களால் மக்கள் மனதை மயக்கிவிட முடியாது என்ற உண்மையை திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் பலர் புரிந்து வைத்து இருந்தாலும் கூட அவர்களின் குரலுக்கு அம்பலத்தில் மரியாதை கிடைப்பதில்லை என்பது தான் நிதர்சனம்.
முயல் – ஆமை கதை சுவாரஸ்யம் 2026 தேர்தல் நெருங்க நெருங்க அதிமாகவே அரங்கேரும் கூத்தை அடிக்கடி பார்க்கலாம்….