Sat. Nov 23rd, 2024

அதிமுக அமைச்சர்களில் நிலோபர் கபில், ஸ்ரீரங்கம் வளர்மதி, சிவகங்கை பாஸ்கரன் ஆகியோருக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது. அப்போது, அதிமுக தலைமைக்கு எதிராகவும், வேலூர் மாவட்ட அமைச்சர் கே.சி.வீரமணிக்கு எதிராகவும் கண்ணீர் மல்க போட்டியளித்தார் நிலோபர் கபில். அப்போது அவர், தனக்கும் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கும் நட்பு இருப்பதாக அமைச்சர் கே.சி.வீரமணி, அதிமுக தலைமையில் போட்டுக் கொடுத்துள்ளார்.

ஆனால், நான் துரைமுருகனை ஒருமுறை கூட நேரில் சந்தித்தித்தது இல்லை. ஆனால், கே.சி.வீரமணிக்கும் துரைமுருகனுக்கும்தான் நெருங்கிய உறவு இருக்கிறது. இருவரும் தொழில் ரீதியிலான கூட்டணி பங்காளிகள்.. இவர்கள் இருவருக்கும் இடையேயான உறவை மறைத்து என் மீது பழி சுமத்துகிறார். அதிமுக.வுக்கு தான் எப்போதும் விசுவாசமாக இருப்பேனே தவிர ஒருபோதும் துரோகம் செய்ய மாட்டேன் என கண்ணீர் மல்க பேட்டியளித்தார்.

அவரின் கதறல் பேட்டி, அதிமுக நிர்வாகிகளிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், அமைச்சர் கே.சி.வீரமணிக்கு எதிராக அவரது சொந்த சகோதரி மகன் தென்னரசு, ஆவேசமாக வீடியோவில் பேசி அதை சமூக ஊடகங்களில் பரவவிட்டார். அந்த வீடியோவில், 3 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் பணத்தை வைத்துள்ளார். அந்த பணத்தை செலவழித்து தேர்தலில் வெற்றிப் பெற்றுவிடலாம் என்று நினைக்கிறார் கே.சி. வீரமணி. அவரை இந்த தேர்தலில் வீழ்த்தாமல் நான் ஓயமாட்டேன் என பகிரங்கமாக சவால் விட்டிருந்தார்.

அமமுக வேட்பாளராக அவர் ஜோலார்பேட்டையில் களமிறங்கி அமைச்சர் கே.சி.வீரமணிக்கு கடும் நெருக்கடியை கொடுத்தார். இருவருக்கும் இடையே திமுக வேட்பாளராக திருப்பத்தூர் திமுக மாவட்ட பொறுப்பாளர் தேவராஜ், அதிமுக ஆட்சியின் 10 ஆண்டு கால ஊழல்களை முன்வைத்து தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

அமைச்சர் கே.சி.வீரமணியும், திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனும் நகமும், சதையுமாக நட்பு கொண்டு, ஒன்றுபட்ட வேலூர் மாவட்டத்தில் சாதி அரசியல் செய்வதாகவும், அதன் காரணமாக மற்ற சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள், இருவருக்கும் எதிரான மனநிலையில் இருப்பதாகவும், அந்த மாவட்டத்தில் உள்ள அரசியல் சார்பற்ற தொழிலதிபர்கள் கருத்து தெரிவித்தனர். அதனை ஏற்கெனவே நல்லரசு தமிழ் செய்திகளில் பகிர்ந்துள்ளோம்.

இந்த எண்ணவோட்டத்தில் ஜோலார்பேட்டை தொகுதி மக்கள் இருந்து வந்தநிலையில், அமைச்சர் கே.சி.வீரமணி படுதோல்வி அடைந்துள்ளார். திமுக வேட்பாளர் தேவராஜ் வெற்றிப் பெற்றுள்ளார். அவருக்கு திமுக முன்னணி நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அமைச்சர் கே.சி.வீரமணியை வீழ்த்தியதன் மூலம் ஒன்றுபட்ட வேலூர் மாவட்டத்தில் சாதி ரீதியிலான அரசியலை முன்னெடுத்து வந்த ஒருவர், அரசியலில் இருந்து அகற்றப்பட்டுள்ளது அனைத்து சமுதாய மக்களுக்கும் கிடைத்த வெற்றி என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார்கள்..

மகிழ்ச்சியுடன் கொண்டாட்டத்திலும் ஈடுபட்டுள்ள திமுக.வினரிடையே தேவராஜ் பற்றியும் சில சுவாரஸ்யமான தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டு வருகின்றன. திமுக.வுடன் கூட்டணி அமைக்கும் இஸ்லாமிய கட்சிகள், ஒவ்வொரு தேர்தலின்போதும் வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய இரண்டு தொகுதிகளை திமுக. தலைமையிடம் கறாராக கேட்டு பெற்றுவிடுவார்கள். அந்தவகையில், கடந்த 2016 தேர்தலின்போதும், திமுக கூட்டணியில் வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய தொகுதிகளை பெற்றன இஸ்லாமிய கட்சிகள்.

வேலூர் மாவட்டத்திற்கு திரும்பிய இஸ்லாமிய வேட்பாளர்கள், மரியாதை நிமித்தமாகவும், ஆதரவு கேட்டும் அப்போது வேலூர் மேற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்த தேவராஜை சந்தித்து ஆதரவு கேட்டனர். அப்போது அவர்களிடம், ஒவ்வொரு தேர்தலின்போதும், கூட்டணிக் கட்சிகள் என்ற அடிப்படையில் வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய இரண்டு தொகுதிகளையும் நீங்களே பெற்று வந்தால், இந்த இரண்டு தொகுதிகளிலும் திமுக. வுக்காக வாழ்நாள் முழுவதும் உழைக்கும் கட்சிக்காரர்கள் எப்போது தேர்தலில் போட்டியிடுவார்கள் என்று கூறி தனது ஆதங்கத்தை கடுமையாக கூறியதாக தகவல் வெளியானது.

இதுதொடர்பாக, இஸ்லாமிய அமைப்புகள் திமுக தலைமையிடம் புகார் வாசித்ததாகவும் அதன் பேரில் திமுக தலைவர், தேவராஜிடம் இருந்த மாவட்டச் செயலாளர் பதவியை பறித்துவிட்டு, முத்தமிழ்ச் செல்வி என்பரை மாவட்ட திமுக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டது என்பதும் கடந்த கால வேலூர் மாவட்ட வரலாறு.

2016 ல் இருந்து 2019 ஆம் ஆண்டு வரை எந்தவொரு முக்கியத்துவமும் வழங்கப்படாத நிலையில், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அப்போதைய திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த், வேட்பாளராக அறிவிக்கப்பட்டதையடுத்து, திமுக தலைமை மீது வருத்தத்தில் இருந்து வந்த தேவராஜை சரிகட்டும் நோக்கில், மீண்டும் அவருக்கு மாவட்ட அளவிலான பதவி வழங்கப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம் பிரிக்கப்பட்டதையடுத்து, அந்த மாவடடத்தின் செயலாளராக பதவி வகித்து வருகிறார் தேவராஜ்.

திமுக மீதும் அக்கட்சியின் தலைமை மீதும் மிகுந்த விசுவாசம் காட்டி வரும் தேவராஜ், அதிமுக அமைச்சர் கே.சி.வீரமணியை வீழ்த்தி வெற்றிப் பெற்றிருப்பது, திருப்பத்தூரில் உள்ள ஒவ்வொரு திமுக தொண்டர்களையும், கூட்டணி கட்சியினரையும், சமூக நீதி காவலர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கே.சி வீரமணியை வீழ்த்தியிருப்பதன் மூலம், தேவராஜுக்கு திமுக தலைமை அமைச்சர் பதவியையும் வழங்கி அழகுப் பார்க்கும் என்ற எதிர்ப்பார்ப்புடன் இருப்பதாக மகிழ்ச்சியுடன் கூறுகிறார்கள் தேவராஜின் ஆதரவாளர்கள்.