கட்டுரையாளர்: மூத்த ஊடகவியலாளர்-வளர்மெய்யறிவான் (எ) விஷ்வா விஸ்வநாத்
அரசமரத்தடி விநாயகர் கோயிலில்கூட பிரசாதம் எனும் பெயரில் வழியாட்டுக்கு வரக்கூடியவர்களுக்கு உண்ணுவதற்கு ஏதாவது இலவசமாகக் கொடுப்பது வழக்கம். கோயில்களில் அன்னதானம் செய்யப் படுவதும் வழக்கம்.
ஆனால், லிங்க பைரவி, ஆதி யோகி கோயில்கள் உள்ள ஈஷாவுக்குள் குடும்பத்தோடு சென்று வந்தால் உங்கள் Money Purse காலி ஆகிவிடும்.
சோறு ஒரு தட்டு அங்கு என்ன விலை என்று யோசியுங்கள்.
ஆக…. அது ஒரு Shopping Mall, Commercial complex.
ஜக்கிக்கு அமெரிக்காவில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் உண்டு.
இப்படி ஜக்கியின் பார்வை திரும்பிய பக்கமெல்லாம் பணத்தையும், சொத்துக்களையும் கொட்டுவதற்கு ஆயிரக் கணக்கில் பெரும் கோடிஸ்வரர்கள் அவருக்கு உள்ளனர்.
இவர்களின் பணம், சொத்துக்களின் உதவியுடன், பாழடைந்து போன கோயில்களை அரசின் துணையுடன் ஏன் ஜக்கி புனரமைப்பு செய்யவில்லை?
“இந்துக் கோயில்கள்” மீது அக்கறை உள்ள ஜக்கி, பாழடையும் கோயில்களைக் கண்டு மனம் வேதனைப்பட்டு தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்குப் போவாரானால் ஈஷாவின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் பாதியை விற்றால்கூட குறைந்தது 100 பாழடையும் கோயில்களை சீரமைக்க முடியுமே?!
ஏன் செய்யவில்லை?
அவ்வளவு ஏன், அவர் “வீற்றிருக்கும்” வெள்ளியங்கிரி அடிவாரத்தில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் கடந்த மற்றொரு கோயில் முட்டம் நாகேஸ்வரர் – முத்து வள்ளியம்மன் கோயில்.
தமிழர்களின் நாக வழிபாட்டுக்கு மிகச் சிறந்த ஆதாரம், சான்று இக் கோயில்.
கொங்கு நாட்டில் நாகர் வழிபாட்டுக்கான சான்று என்பதுடன் இங்குள்ள இறைவிக்குப் பெயர் முத்து வள்ளி. இறைவர் பெயர் நாகேஸ்வரர்.
இதை விட இக்கோயில் அமைந்துள்ள – ஈஷா ஆக்கிரமித்து அமைத்துள்ள பகுதிகள், சேரநாடு எனும் கேரளாவின் வணிகத் துறைமுகம் தொடங்கி கொங்கு நாட்டில் இந்த வெள்ளியங்கிரி – முட்டம் வழியாக வந்து துடியலூர் வழியாக வந்து நொய்யலை ஒட்டி திருப்பூர் எனும் (அன்றும்) ஏற்றுமதி நகரமாக இருந்த ஊரை இணைத்து உலகை இணைக்கும் “வணிகப் பாதை” தான் முட்டம் – ஈஷா உள்ள இடம்.
திருப்பூர் – துடியலூர் – முட்டம் – பாலக்காடு
இது ஒரு வணிகப்பாதை.
அதேபோல கோவைக்குத் தெற்காக மற்றொரு பாதை பாலக்காட்டை இணைத்தது.
இவ்வளவு தொன்மம் கொண்ட இடத்தில் அமைந்துள்ள முட்டம் நாகேஸ்வரர் கோயில் சிதிலமடைந்து கிடந்தபோது ஜக்கி அதைக் கண்டுகொள்ளவில்லை.
மாறாகப் பெரும் பணச் செலவில் ஆதி போகி சிலையை வைத்து Publicity செய்து கோடிக் கணக்கில் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்.
தன் இடத்தில் இருந்து நடந்து வரும் தொலைவில் உள்ள பழம் கோயிலான, ஆயிரக்கணக்கான ஆண்டு தொன்மம் வாய்ந்த முட்டம் நாகேஸ்வரர் கோயிலைக் கண்டு கொள்ளாமல் விட்ட ஜக்கி, பல கோடிகள் செலவில் “தமிழ் தெரியாத” ஆதி யோகிக்கு சிலை வைக்கிறார்.
இவர்தான் இப்போது, தமிழ்நாட்டுக் கோயில்களை “பக்தர்கள்” அதாவது தனது தலைமையிலான “பக்தாள்” வசம் ஒப்படையுங்கோ என்கிறார்.
இந்த முட்டம் நாகேஸ்வரர் கோயிலைப் பழமை மாறாமல் சீரமைத்துக் கொடுத்தது யார் தெரியுமா?
பேரூர் ஆதினம் சாந்தலிங்க அடிகளார் கல்லூரி சிற்பக் கலைப் பிரிவு மாணவ, மாணவிகள்.
ஜக்கி எனும் முகமூடிக்குப் பின்னணியில் பெரிய முதலை ஒன்று, வாய் பிளந்து நிற்கிறது.
ஜக்கி எனும் முகமூடி, முதலைக் கண்ணீர் வடிக்கிறது. தமிழர்களே, தமிழ்ப் பண்பாட்டின் மீது அக்கறை கொண்டவர்களே மிகக் கவனமாக இருங்கள்.