இந்தியாவில் கடந்தாண்டு கொரோனோ தொற்று உச்சத்தில் இருந்த போது, இதே காலகட்டத்தில் பதிவான எண்ணிக்கையை மிஞ்சும் வகையில் தற்போது 2வது அலையில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கடந்த ஒரு வாரமாக, நாள்தோறும் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரித்து வருகிறது. இன்றைய தினம் நாடு முழுவதும் 2 லட்சத்து 17 ஆயிரத்து 353 பேருக்கு கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவில் ஒரே நாளில் 1,185 பேர் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளதும் பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனோ பரவலில் டெல்லி, மும்பை, குஜராத் ஆகிய மாநிலங்கள் தொடர்ந்து முன்னணியில் இருந்து வரும் நிலையில், இந்த பட்டியலில் தமிழகமும் கடந்த ஒரு வாரமாக இடம் பெற்றுள்ளது. தமிழகத்தில், குறிப்பாக சென்னையில் கொரோனோ தொற்று பாதிப்பிற்கு உள்ளாகுபவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்து மூன்றாயிரத்தை தொடும் அளவுக்கு சென்றுக் கொண்டிருப்பதால், சென்னை மாநகராட்சியும், சுகாதார துறையும், கொரோனோவைக் கட்டுக்குள் கொண்டு வர முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், கொரோனோ தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வருவாய், காவல் உள்ளிட்ட பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து கொரோனோ நெறிமுறைகளை மக்களிடம் எடுத்துரைக்கும் பணிகளை விரைவுப்படுத்தி வருகிறார்.
அதுபோல, மாநகராட்சி ஆணையர் பிரகாஷும், மண்டலம் வாரியாக விழிப்புணர்வுக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்து, மாநகராட்சி ஊழியர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் பொதுமக்களிடம் கொரோனோ தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரசாரம் செய்து பணிகளை வேகப்படுத்தி வருகிறார்.
இருப்பினும், கொரோனோ தொற்று அதிகரிப்பு குறித்த சந்தேகம் பொதுமக்களிடம் ஏழாமல் இல்லை. சுகாதாரத்துறையும், மாநகராட்சியும் நாள்தோறும் அறிவிக்கும் கொரோனோ பாதிப்பு குறித்து கேள்வி கேட்டு வருகின்றனர். பொதுமக்களிடம் விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டுள்ள தமிழக அரசு, விமான நிலையங்கள், ரயில் நிலையங்களில் எந்தவொரு பரிசோதனையும் மேற்கொள்ளாதது ஏன் என்று எழுப்புகின்றனர்.
கடந்தாண்டும் இதுபோலதான் தமிழக அரசு செயல்பட்டதாக குற்றம் சாட்டும் சமூக ஆர்வலர்கள், கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக டெல்லி, மும்பை, குஜராத் போன்ற வடமாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள், ரயில் மூலம் சென்னை வந்துள்ளனர். அவர்களுக்கு கொரோனோ தொற்று பாதிப்பு இருக்கிறதா, பயணிகள் விவரம், அவர்கள் எங்கே செல்கிறார்கள், எங்கு தங்கப் போகிறார்கள் என்று எந்தவொரு ஆய்வும் ரயில் நிலையங்களில் மேற்கொள்ளப்படாமல் இருப்பது ஏன்? என்று சமூக ஆர்வலர்கள் கேட்கின்றனர்.
சென்னை உள்பட மாநிலம் முழுவதும் வீடு, வீடாக மருத்துவப் பரிசோதனை நடத்த உத்தரவிட்டுள்ள சுகாதாரத்துறை, ரயில் நிலையங்களில் கொரோனோ தடுப்பு முகாம் அமைத்து பயணிகளை பரிசோதனைக்கு உட்படுத்தாதது ஏன் என்றும் கேள்வி எழுப்புகிறார்கள். உள்நாட்டில் கொரோனோ தொற்று பரவுதல் கட்டுப்பாட்டிற்குள் இருந்தாலும், வட மாநிலங்களில் இருந்து வரும் பயணிகள் மூலம் தமிழகத்தில் கொரோனோ பாதிப்பு அதிகரிக்கத்தான் செய்யும். அதனை தடுக்க சுகாதாரத்துறை என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
விமான சேவையை ரத்து செய்தததைப் போல, ரயில் சேவையையும் உடனடியாக ரத்து செய்து, வட மாநிலங்களில் இருந்து சென்னைக்கு வரும் பயணிகளை அடையாளம் கண்டு, அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு, அதன் முடிவு வரும் வரை, வடமாநில பயணிகளை தனிமைப்படுத்தி கண்காணிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ச