Wed. Apr 24th, 2024

சித்திரை திருநாளை முன்னிட்டு அறுபடை வீடுகளில் ஒன்றான புகழ் பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. சித்திரை திருநாளான ஏப்ரல் 14 ஆம் தேதி (புதன்கிழமை) அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. அதிகாலை 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெறுகிறது.

காலை 8 மணியளவில் கோயிலில் இருந்து உற்சகவர் புறப்பட்டு, அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி வைபவம் நடைபெறுகிறது.

காலை 10 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகமும், சுவாமி சண்முகருக்கு அன்னாபிஷேகமும் நடைபெறுகிறது. நண்பகல் 12 மணியளவில் பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் நடைறெவுள்ள நிலையில் சமூக இடைவெளியில் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்படுகிறது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், தமிழக அரசின் சுகாதார துறை அறிவித்துள்ள கட்டுப்பாடுகள், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலிலும் அமல்படுத்தப்பட்டுள்ளன. புதிய அறிவிப்பின் படி, பக்தர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது

தடை செய்யப்பட்டுள்ள ஊர்களில் இருந்து வரும் பக்தர்கள், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள் மற்றும் முககவசம் அணியாமல் வருபவர்களுக்கு கோவிலுக்குள் நுழைய அனுமதி இல்லை.

பக்தர்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்து இருக்க வேண்டும். பக்தர்கள் கோவில் வளாகத்துக்குள் அசுத்தம் செய்யக்கூடாது.

பக்தர்கள் கால்களை நீரில் சுத்தம் செய்தும், கைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்த பின்னர், உடல் வெப்பநிலையை தெர்மல் ஸ்கேனர் கொண்டு பரிசோதனை செய்த பிறகு, நோய் அறிகுறிகள் இல்லாத பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.

தேங்காய், பூ, பழம் ஆகியவற்றை கொண்டு வருவதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும்.

அங்கபிரதட்சணம் போன்ற வேண்டுதல்களுக்கு அனுமதியில்லை.

முடி காணிக்கை செலுத்தும் இடங்களில் அரசால் தெரிவிக்கப்பட்ட நிலையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்.

சுவாமி தரிசனம் செய்து முடிந்த பின்னர் பக்தர்கள் கோவில் வளாகத்தில் தங்கி இளைப்பாற அனுமதி இல்லை.

5 நபர்களுக்கு மேல் ஒரே இடத்தில் கூட்டமாக கூடுவது தவிர்க்கப்பட வேண்டும்.

65 வயதுக்கு மேற்பட்டவர்கள் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சுவாசம் தொடர்பான நோய், இதய நோய் போன்ற இணையான நோய்களை கொண்டவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள், 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் போன்றவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும்

இவ்வாறு கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.