பண்ருட்டி அதிமுக எம்.எல்.ஏ சத்யா பன்னீர்செல்வத்திற்கும் கடலூர் மாவட்ட அமைச்சர் எம்.சி.சம்பத்திற்கும் ஆரம்பத்தில் இருந்தே ஏழாம் பொருத்தம். இருவருக்கும் இடையே இருந்த முன்விரோதத்தால், பண்ருட்டியில் அமைச்சர் ஆதரவாளர்களும், பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது. கடந்த 2019 ஆம் ஆண்டில் இருவருக்கும் இடையே கடும் மோதல் மூண்டு ஒருவருக்கு ஒருவர் கத்தி குத்து வரைச் சென்று, காவல் நிலையத்திலும் புகார் ஆனது. அமைச்சர் எம்.சி. சம்பத்தை சமாளிப்பதற்காக சத்யா, பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள், முன்னாள் எம்.பி.அருண்மொழித்தேவன் ஆதரவாளராக மாறிப் போனார்கள்.
எம்.சி.சம்பத்திற்கு எதிராக எதிர்ப்பு அணி வலுவானதைத் தொடர்ந்து, அமைச்சரை அழைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பலமுறை கண்டித்ததும் உண்டு. சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில், அருண்மொழித்தேவன், புவனகிரி தொகுதியை குறி வைத்து காய் நகர்த்தியதால், அமைச்சர் தரப்போடு சமரசம் செய்து கொண்டார்.
இதனால், தனித்து விடப்பட்ட சத்யா எம்.எல்.ஏ., விழுப்புரம் மாவட்ட அமைச்சர் சி.வி.சண்முகத்தின் ஆதரவாளராக மாறினார். இதனால் மேலும் ஆத்திரமடைந்த அமைச்சர் எம்.சி. சம்பத், சிட்டிங் எம்.எல்.ஏ.வான சத்யா பன்னீர்செல்வத்திற்கு மீண்டும் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்காமல் குழிப் பறித்தார். அதற்கு பலன் கிடைக்கவே, அதிமுக மாநில அமைப்புச் செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரனை, பண்ருட்டி வேட்பாளராக அதிமுக தலைமை அறிவித்தது.
அமைச்சர் எம்.சி.சம்பத்தின் மீது இருந்த கோபத்தை, அதிமுக தலைமையில் உள்ள இரட்டையர் மீது காட்டினார் சத்யா எம்.எல்.ஏ., அதிமுக வேட்பாளராக களத்தில் உள்ள சொரத்தூர் ராஜேந்திரனுக்கு எதிராக உள்ளடி வேலைகளை செய்தனர் சத்யாவும், அவரது கணவர் பன்னீர்சல்வம் உள்ளிட்ட ஆதரவாளர்கள். இதனால் கடுப்பான ராஜேந்திரன், அவர்களது உள்குத்துகளை அதிமுக தலைமையிடம் போட்டுக் கொடுத்தார். அமைச்சர் எம்.சி.சம்பத்தும் சத்யாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்க, தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே அதிமுக எம்.எல்.ஏ. என்று கூட பார்க்காமல் சத்யா பன்னீர்செல்வத்திற்கு கட்சியில் இருந்து கட்டம் கட்டிவிட்டனர்.
தற்காலிகமாக நீக்கப்படுகிறார் என்று கூட அறிவிக்காமல்,அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே நீக்கப்படுவதாக அறிவித்துவிட்டது அதிமுக தலைமை. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் நடவடிக்கைக்கு கட்டுப்பட்டு அதிமுக.விலேயே நீடிப்பாரா, அல்லது டிடிவி தினகரன் பக்கம் தாவி விடுவாரா சத்யா எம்.எல்.ஏ. என்பது விடிவதற்குள் தெரிந்துவிடும்…
சத்யா எம்.எல்.ஏ. நீக்கம் மூலம் அதிமுக தொண்டர்களுக்கு கடுமையான ஒரு எச்சரிக்கையை இரட்டையர்கள் தெரிவித்துள்ளதாக கூறுகிறார்கள் அதிமுக முன்னணி நிர்வாகிகள். அதிமுக வெற்றிப் பெற்று ஆட்சி அமைக்கிறதோ, இல்லையோ, கட்சித் தலைமையை சசிகலாவிடம் விட்டுக் கொடுக்கும் பேச்சுக்கே இடம் இல்லை என்பதைதான் இந்த நீக்கம் மூலம் ஓ.பி.எஸ்.ஸும் இ.பி.எஸ்.ஸும் நிரூபித்திருக்கிறார்கள் என்கிறார்கள்.