ஒன்றுபட்ட ஆந்திரா மாநிலத்தின் மறைந்த முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டி, பிரிக்கப்பட்ட ஆந்திராவில் முதல்வராக பதவி வகித்து வருகிறார். மற்றொரு மாநிலமான தெலுங்கானாவில், சந்திரசேகர் ரெட்டி முதலமைச்சராக உள்ளார். இந்த நிலையில், தெலுங்கானாவிலும் ஒஸ்.எஸ்.ராஜகேசர ரெட்டியின் ஆட்சியை அமைக்க, அவரது மகள் ஒய்.எஸ்.ஷர்மிளா ரெட்டி களத்தில் குதித்துள்ளார். கடந்த பல மாதங்களாக தெலுங்கானாவில் சுற்றுப் பயணம் செய்து மக்களிடையே ஆதரவு திரடடி வந்த அவர், ஒய்.எஸ்.ராஜகேசர ரெட்டியின் பிறந்த நாளான ஜூலை 8 ஆம் தேதி தெலுங்கானாவில் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கப்போவதாக அதிகாரப்பூவமாக அறிவித்துள்ளார்.
ஐதராபாத்தில் இருந்து நேற்று எல்லை மாவட்டமான கம்மத்தை நோக்கி நடைபெற்ற பிரம்மாண்டமான கார் பேரணிக்கு தலைமை வகித்த ஷர்மிளா, அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர், ஜூலை 8 ஆம் தேதி புதிய அரசியல் கட்சியின் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று அறிவித்தார்.
ஷர்மிளாவின் அரசியல் பிரவேசத்திற்கு அவரது தாயாரும் மறைந்த ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் மனைவியுமான ஒய்.எஸ். விஜயலட்சுமியும் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்பு தெரிவத்துள்ளார். தனது மகள் தெலுங்கானா மக்களுக்கு சேவை செய்யத் தேர்ந்தெடுத்ததில் மகிழ்ச்சி அடைவதாகவும், தனது மகளுக்கு தந்தையைப் போலவே தைரியமும் இருப்பதாகவும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
தனது சகோதரியின் அரசியல் நடவடிக்கைகளில் இருந்து ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி விலகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய கட்சி தொடங்கும் திட்டத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்த செல்வி ஷர்மிலா, புதிய கட்சியின் கட்சியின் பெயர், சின்னம், கொடி மற்றும் கொள்கை என அனைத்து அரசியல் நடவடிக்கைகள் குறித்தும் புதிய கட்சிக்கான பெயர் அறிவிக்கப்படவுள்ள நாளான ஜூலை 8 அன்றே தெரிவிப்பார் என்று அவரது விசுவாசிகள் தெரிவிக்கின்றனர்.
2023 ஆம் ஆண்டில் தெலுங்கானாவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.அப்போது, ஷர்மிளாவின் புதிய அரசியல் கட்சிக்கும், ஆளும்கட்சியான தெலுங்கானா ராஷ்டிரிய சமதிக்கும் இடையே கடும் போட்டி நிலவ வாய்ப்புள்ளதாக அம்மாநில அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். பாஜக.வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவாரா அல்லது தனது சகோதரர் வழியில் தனித்து களம் இறங்குவாரா ஷர்மிளா என்பது, 2013 ஆம் ஆண்டில்தான் தெரிய வரும் என்கிறார்கள் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் ஆதரவாளர்கள்.