சென்னையில் இருந்து சேலம் செல்லும் வழியில் உள்ளது வாழப்பாடி. அதன் அருகில் உள்ள ஒரு கிராமம் புத்திரகவுண்டன்பாளையம். மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் சிலையை விட மிக உயரமாக, உலகத்திலேயே மிக உயரமான சிலையாக,145 145 அடி உயரத்தில் அழகுற முருகப் பெருமான் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
முருகப் பெருமானே நேரில் தரிசனம் தந்துக் கொண்டிருப்பதை போல காட்சியளிக்கும் அருள்மிகு முருகன் சிலை மட்டும் 126 அடி உயரம். அதன் பீடம் 19 அடி உயரம். மொத்தம் 145 அடி உயரத்துடன் தெய்வீமாக தரிசனம் தந்துக் கொண்டிருக்கிறார். மலேசியாவில் முருகன் சிலையை உருவாக்கிய திருவாரூர் தியாகராஜன் ஸ்தபதி குழுவினரின் கைவண்ணத்தில் தெய்வாம்சம் பொருத்திய முருகப் பெருமானிடம் மண்டியிடுவோர் எல்லோருக்கும் நிம்மதி கிடைத்து வருவதாக கூறுகிறார்கள் கோயில் நிர்வாகிகள்..
கலைநயத்துடன் ஆளுயர சிலை வடிவமைக்கப்பட்டு வந்த காலத்திலேயே அதன் அற்புதத்தை அடி முதல் முடி வரை கண் குளிர தரிசிக்க பக்தர்கள் படையெடுத்து வந்தனர்.
திருப்பணிகள் நிறைவடைந்து குடமுழுக்குவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில், பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு தரிசித்தனர். சேலம் மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்டங்கள், அண்டை மாநிலங்களிலும் இருந்தும் பக்தர்கள் குடும்பம் குடும்பமாக வந்து அருள்மிகு முருகப் பெருமானை கண் குளிர தரிசித்தனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டதால், புத்தரகவுண்டன்பாளையம் கிராமமே விழாக் கோலம் பூண்டது. திரும்பிய திசையெங்கும் சரண முழக்கங்களே எதிரொலித்தன.