Fri. Apr 26th, 2024

புகைப்படங்கள் உதவி : மதுரை பிரபல ஊடக புகைப்படக் கலைஞர் பாலமுத்துகிருஷ்ணன்…

பங்குனி உத்திர திருநாள் என்றாலே குமரக்கடவுள் வீற்றிருக்கும் கோயில்களில் திருவிழா களைகட்டும். திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி இன்று திரளான பக்தர்கள் வடம் பிடிக்க தேரோட்டம் விமரிசையாக நடந்தது.

தமிழ் மாதங்களில் 12 வது மாதம் பங்குனி. நட்சத்திரங்களில் 12 வதாக உச்சம் பெற்றிருப்பது உத்திரம். இவை இரண்டும் இணையும் நாளே (பௌர்ணமி நாள் ) பங்குனி உத்திர நாளாகும். இதனையொட்டி, கடந்த ஞாயிற்றுக் கிழமை, அறுபடை வீடுகளிலும் பங்குனி உத்திரத் திருவிழாவுக்கான கொடியேற்றம் கோலாகலமாக தொடங்கியது.

அன்று முதல் ஒவ்வொரு நாளும் மூலவர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்று வருகிறது. மாலையில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளும் உற்சவர், மேள தாளம் முழங்க திரு வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருத்தணி, திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், பழநி உள்ளிட்ட அறுபடை வீடுகளிலும் பக்தர்கள், அனைத்து விழா நாட்களிலும் திரண்டு முருகப் பெருமானை மனமுருக வழிபட்டனர்.

அந்த வகையில், திருப்பரங்குன்றத்திலும் பங்குனி உத்திர விழா களைகட்டியுள்ளது. இன்று தேர்த்திருவிழா வைபவம் என்பதால், காலை முதலே பக்தர்கள் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குவியத் தொடங்கினர். சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனையில் கலந்துகொண்டு முருகப் பெருமானை தரிசித்தனர்.

பின்னர், அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவர் எழுந்தருள, முருகா, முருகா, என்ற பக்தி முழக்கங்களை எழுப்பியவாறே பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். பசுமை நிறைந்த திருப்பரங்குன்றத்தின் ஊரினுடையே திருத்தேர் பவனி வந்த காட்சியை கண்ட பக்தர்கள், கண்களில் ஆனந்த கண்ணீர் வழிந்தோட, மனமுருகி வழிபட்டனர்.