Fri. Apr 26th, 2024

27 நட்சத்திரங்களில் 12வதாக வரும் உத்திர நட்சத்திர நாயகன் சூரியன். அதே நாளில் நிலவும் முழுமை பெற்று பௌர்ணமியாகி சூரியனோடு பொருந்துவதை பங்குனி உத்திரம் என்று அழைக்கப்படுகிறது.

சூரியன், சந்திரன் ஆகிய இரண்டு நட்சத்திரங்களால் இரட்டை நன்மைகள் கிடைக்கின்றன. புராண காலத்தில் இதேநாளில்தான் சிவபெருமான் அன்னை பார்வதியோடு மணக்கோலத்தில் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மதுரையில் காட்சி தந்தருளினார்.

பங்குனி உத்திர திருநாளில் புதுமணப் தம்பதியர் உள்ளிட்டோர் அதிகாலையில் நீராடி, விரதம் இருந்து சிவன், அம்பாளுக்கு ஆராதனை செய்தால், இல்லத்தில் ஆனந்தம் பெருகும். மணமாகாத மகளிர் இந்த விரதத்தை கடைப்பிடித்தால் தெய்வாம்ச குணமுடைய கணவர் கிடைப்பார் என்பது முன்னோர்களின் நம்பிக்கை. அதனால், தமிழகம் எங்கும் பங்குனி உத்திர திருவிழா களை கட்டியுள்ளது.

தமிழர்கள் பக்தியோடு கொண்டாடும் பங்குனி உத்திரத்தை நினைவில் வைத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு, குமரக் கடவுளின் அறுபடை வீடுகளும் களைகட்டியுள்ளன. பழனியில் திரண்டுள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் கொடுமுடியில் இருந்து புனித நீர் சுமந்து வந்து மூலவருக்கு அபிஷேகம் செய்து பக்தியுடன் வழிபட்டனர். இதேபோல, திருத்தணி, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், சுவாமிமலை, பழமுதிர்ச்சோலை ஆகிய படை வீடுகளில் சிறப்பு ஆராதனை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு, பக்தியுடன் முருகனை தரிசனம் செய்து வருகின்றனர்.