பாஜக மகளிர் அணி தேசிய பொதுச் செயலாளரும் கோவை தெற்கு தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளருமான வானதி சீனிவாசன், தனது வேட்புமனுவுடன் தாக்கல் செய்த சொத்து விவரம் மற்றும் வருமானம் குறித்து அறப்போர் இயக்கம் சந்தேகம் கிளப்பி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதை தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஏற்றியுள்ள வானதி சீனிவாசன், அறப்போர் இயக்கம் தவறான பிரசாரத்தை முன்னெடுத்துள்ளது. வெட்கம் என பதிவிட்டு, வருமானம் மற்றும் சொத்து மதிப்பு குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
2021 ஆம் ஆண்டில் தனது ஆண்டு வருமானம் ரூ. 9,77,900 என்றும் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது தொடர்பாக ஏற்கெனவே விளக்கம் அளித்துவிட்டதாக வானதி சீனிவாசன் விளக்கம் அளித்துள்ளார். தனது பெயரில் உள்ள சொத்து, பரம்பரை சொத்து என்றும் சந்தை மதிப்பின் அடிப்படையில் தொகை உயர்ந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற உண்மைக்கு மாறான தகவல்கள், வாக்காளர்களிடம் தவறான எண்ணத்தை ஏற்படுத்தும் என்றும் வானதி சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட இடங்களில் வாக்காளர்களுக்கு பாஜக.வினர் பணம் கொடுத்ததாக கூறி, 12 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக விவகாரமும், பாஜக கூட்டணி கட்சியினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சலீவன் வீதி பகுதியில் பா.ஜ.கவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் புனித பணியில்!! ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கிருந்த பா.ஜ.கவை சேர்ந்த நபர்களை கலைந்து போகும் படி சொன்ன போது, அவர்கள் அதிகாரிகளின் உத்தரவிற்கு கீழ்படியாமல் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து அங்கிருந்த பா.ஜ.கவினர் கருணாகரன், சேகர் உட்பட 12 பேரை கைது செய்த போலீசார் அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்தனர். அவர்களிடம் இருந்து 6 வாகனங்களை பறிமுதல் செய்து உள்ளனர்.
மேலும் அவர்களிடம் இருந்து 46 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 1000 ரூபாய் பரிசு கூப்பன் ,500 ரூபாய் பரிசு கூப்பன், பா.ஜ.க தொப்பிகள், கொடிகள், வாக்காளர் பட்டியல், காசோலைகள், ஏடிஎம் கார்டு, கிரெடிட் கார்டு உட்பட பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
பின்னர் கைது செய்யப்பட்ட 12 பேர் மீதும் அரசு அதிகாரிகள் உத்தரவு கீழ்படியாதது, அத்துமீறுதல், கலகம் செய்தல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வெரைட்டிஹால் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் 12 பேரையும் ஜாமினில் விடுவித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட 6 வாகனங்கள் வெரைட்டி ஹால் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.