பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா, தமிழகத்தில் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். சென்னையில் பரப்புரையில் ஈடுபட்ட அமித்ஷா, ஆயிரம் விளக்கு தொகுதியில் நடிகை குஷ்புவை ஆதரித்து வாக்கு சேகரித்தார். இதேபகுதியில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பாஜக மற்றும் அதிமுக கூட்டணியினரிடம் பேசிய அமித்ஷா, எழும்பூர் தொகுதி பாஜக கூட்டணி வேட்பாளர் ஜான் பாண்டியன், துறைமுகம் பாஜக வேட்பாளர் வினோத் செல்வம் ஆகியோரையும் அறிமுகப்படுத்தி ஆதரவு திரட்டினார்.
அப்போது பேசிய அவர், தமிழகத்தின் வளர்ச்சிக்காக எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் கண்ட கனவை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியால் மட்டுமே நிறைவேற்ற முடியும் என்றும் ஊழல், வாரிசு அரசியல் செய்யும் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக வாக்களிக்குமாறு நான் மக்களை கேட்டுக்கொள்கிறேன் என்றும் அமித்ஷா கூறினார்.
ஆயிரம் விளக்கு தொகுதியில் நடைபெற்ற பேரணி குறித்து தனது முகநூலில் பதிவிட்டுள்ளார் அமித்ஷா. அதில், அதிக எண்ணிக்கையில் கலந்து கொண்ட ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதி மக்களுக்கு நன்றி! இந்த மகத்தான ஆதரவு தேசிய ஜனநாயக கூட்டணி மீதான தமிழகத்தின் வலுவான நம்பிக்கையை பிரதிபலிக்கிறது என்றும் அமித்ஷா குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து, திருநெல்வேலியில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து அமித்ஷா பரப்புரை மேற்கொண்டார். அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்களிடம் பேசிய அவர், பிரதமர் மோடி, பாஜக, அதிமுக ஆகிய கட்சிகள் தாழ்த்தப்பட்ட மக்களின் வளர்ச்சிக்காக பாடுபட்டு வருகின்றன. தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவரைதான் இந்தியாவின் குடியரசுத்தலைவராக தேர்வு செய்தது பாஜக.தான். அதேபோல, பாஜக.வின் தேசியத் தலைவராக உள்ளவரும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்தான்.
தமிகத்தில் உள்ள விவசாயிகள், வேலையற்ற இளம்தலைமுறை, மீனவர்கள் ஆகியோரின் முன்னேற்றத்தைப் பற்றிதான் பிரதமர் மோடி சிந்தித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அவருடைய மகன் உதயநிதியை அரசியல் தலைவராக மாற்றுவது எப்படி என்பது பற்றிதான் சிந்தித்துக் கொண்டிருக்கிறார். இந்த தேர்தலில் பொதுமக்கள் சிந்தித்து முடிவு எடுக்க வேண்டியது ஒரே விஷயம்தான்.
ஒருபக்கம் தேசிய முற்போக்கு கூட்டணி, தமிழகத்தில் உள்ள ஏழை மற்றும் விவசயிகள் முன்னேற்றத்திற்காக உழைப்பதற்கு கடமைப்பட்டுள்ளது. மறுபக்கம் உள்ள திமுக தலைமையிலான கூட்டணியோ, இரண்டு குடும்பங்களின் வளர்ச்சியைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறது.
ஊழலில் திளைத்தவர்கள் மற்றும் வாரிசு அரசியலை ஊக்குவிப்பவர்கள் இரண்டாவது முறையாகவும் ஆட்சிக்கு வர முடியாமல் தமிழக மக்கள் புறக்கணிப்பார்கள் என்று எனக்கு மிகப் பெரிய நம்பிக்கை இருக்கிறது,
மக்களைப் பற்றி, அவர்களின் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கிறவர் முதல் அமைச்சராக பதவியேற்க வேண்டுமா அல்லது தனது மகனை முதல் அமைச்சராக்க வேண்டும் என்று சிந்திக்கிற கட்சியை தேர்ந்தெடுக்க வேண்டுமா என்பதுதான் பொதுமக்களின் முன் இப்போது உள்ள ஒரு அம்சம்.
இவ்வாறு அமித்ஷா பேசினார்.