Sat. Nov 23rd, 2024

பிரதமர் மோடியை விட தமிழக தேர்தல் அரசியல் களத்தை உன்னிப்பாக கவனித்து வரும் உள்துறை அமைச்சர் அமிஷ்தாவையை ஆட்டம் காண செய்துள்ளது, தமிழகத்தில் தலைதூக்கிய சாதிய அரசியல். தென் மாவட்டங்களில் ஒரு சில மாவட்டங்களில் பெரும்பான்யைமாக உள்ள குடும்பன், காலாடி, பண்ணாடி, கடையன், பள்ளன், தேவேந்திர குலத்தான், வாதிரியார் ஆகிய பட்டியலினத்தவரை ஒரே பிரிவின் கீழ், அதாவது தேவேந்திர குல வேளாளர் என்ற அடைமொழியோடு அங்கீகரிக்க வேண்டும் என்பது, அந்த சமுதாய தலைவர்களின் நீண்ட நாள் கோரிக்கை.

தென் மாவட்டங்களில் பரவலாக உள்ள இந்த மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றினால், அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் பாஜக.வுக்கு ஆதரவாகவும், விசுவாசிகளாகவும் மாறுவார்கள் என்று பாஜக தலைவராக இருந்த போது அமிஷ்ஷாவுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. அதனை நம்பிய அவரும், அந்த பிரிவினரையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவந்து, தமிழக அரசின் பரிந்துரையை வைத்து தேவேந்திர குல வேளாளர் என்ற பட்டப்பெயருடன் அழைக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வந்து, நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றிவிட்டது மத்திய அரசு.

ஆனால், வேளாளர் என்ற பட்டப்பெயரை, பிள்ளைமார் சமுதாயத்தினர் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வரும் நிலையில், அவர்கள் மத்திய பாஜக-அதிமுக அரசுக்கு எதிராக மாறிவிட்டனர். அதன் பாதிப்பை, தென்மாவட்டங்களில் போட்டியிடும் அதிமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் தற்போதைய தேர்தலின் போது எதிர்கொண்டு வருகின்றனர்.

அதுபோல, வடமாவட்டங்களில் அதிமுகவின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்க, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வன்னியர்களுக்கு 10.5 சதவிகித தனி உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றி விட்டார். இந்த தனி உள்ஒதுக்கீடு விவகாரம் பூதகரமாக கிளம்பி, வடமாவட்டங்களில் சிறுபான்மையராக உள்ள இதர சாதி மக்களை, அதிமுக.வுக்கு எதிராக ஓரணியில் திரள வைத்துவிட்டது.

தமிழகத்தில் சாதியுணர்வு கனலாக கொதித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இரண்டு சாதிகளுக்கு மட்டும் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் கொடுத்ததை, பிற சமுதாயத்தைச் சேர்ந்த தலைவர்கள் மட்டுமல்ல, கீழ்மட்ட நிலையில் உள்ள மக்களும் எளிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்த நேரத்தில்தான், திமுக முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, மு.க.ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி குறித்து உவமையோடு சொன்ன விஷயத்தை தமிழகத்தில் உள்ள பாஜக தொழில்நுட்ப பிரிவு ஊதிப் பெரிதாக்க, அதை அதிமுக வெற்றிக்காக பயன்படுத்திக் கொண்டார் முதலமைச்சர் பழனிசாமி.

தனது தாயாரைப் பற்றி தரக்குறைவாக பேசிவிட்டார் திமுக.வைச் சேர்ந்த ஆ.ராஜா என்று கூறி அவர் கண்ணீர் வடித்தது, அன்றைய தினம் மட்டுமே அனுதாபத்தை தேடி தந்ததே தவிர, அதே விஷயத்தை தாராபுரம் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியும் திமுக.வுக்கும் காங்கிரஸுக்கும் எதிராக பயன்படுத்தியது, பூமாரங் மாதிரி மாறி, இப்போது பாஜக அதிமுக கூட்டணிக்கு தலைவலியை உருவாக்கிவிட்டது.

தமிழகத்தில் கடந்த ஒரு வார காலமாக, சாதி ரீதியான உணர்வுகள் அதிகரித்து, அதிமுக பாஜக கூட்டணிக்கு எதிரான மனநிலையை உருவாக்கிவிட்டது என்று மத்திய உளவுத்துறை கொடுத்த அறிக்கையோடு நேற்று (ஏப்ரல் 1) சென்னை வந்த உள்துறை அமித்ஷா, பிரசார பயணத்திற்கு இடையேயான ஓய்வுநேரத்தில் தமிழக பாஜக முன்னணி நிர்வாகிகளை, தமிழக அரசியல் கள நிலவரத்தை சரிவர கணிக்காமலேயே தவறான தகவல்களை தந்து கொண்டிருக்கிறீர்கள். உங்கள் ஆலோசனைகளை கேட்டு மத்திய அரசு எடுத்த பல நடவடிக்கைகள் தோல்வியடைந்து வருவதுடன், அது பாஜக போட்டியிடும் பெரும்பான்மையான தொகுதிகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்று உளவுத்துறை அறிக்கை எச்சரித்திருக்கிறது.

ஆ.ராசாவுக்கு எதிரான விவகாரத்தை பிரதமர் அளவுக்கு கொண்டு சென்றிருக்க வேண்டாம். அவரை குறி வைத்து திமுக.வுக்கு நெருக்கடி கொடுக்கலாம் என்று நீங்கள் சொன்ன ஆலோசனை தவறாக போய்விட்டது. ஆ.ராசாவுக்கு ஆதரவாக தலித் மக்கள், அறிவார்ந்த நடுநிலை வாக்காளர்கள் எல்லாம் பாஜக.வுக்கு எதிராக திரும்பி விட்டார்கள். ஆ.ராசா விஷயத்தில் பாஜக செய்த தவறால், சட்டமன்றத் தேர்தலில் பாஜக போட்டியிடும் 20 தொகுதிகளில் 90 சதவிகிதத்திற்கு மேல் டெப்பாசிட்டை இழந்து விடும் ஆபத்துதான் நேர்ந்திருக்கிறது. கடந்த ஓராண்டாக டெல்லி பாஜக மேலிடம் வகுத்த வியூகத்தை எல்லாம் தவிடுப் பொடியாகிவிட்டது. இதில் இருந்து எப்படி மீள்வது என்றே தெரியவில்லை என்று ஆவேசமாக பேசியதாக, பாஜக மூத்த நிர்வாகி ஒருவர் புலம்பினார்.