கோவை மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளிலேயே தனித்த அடையாளத்தோடு இருப்பது கோவை தெற்கு தொகுதிதான். கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர், பாஜக.வைச் சேர்ந்த மகளிர் அணி தேசிய தலைவியான வானதி சீனிவாசன். மேலிட செல்வாக்கைப் பெற்றிருந்த போதும், தற்போதை தேர்தலில், இந்த தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதற்கு வாய்ப்பு கேட்டு, டெல்லி மேலிட பாஜக.வுடம் கடுமையாக போராடியவர்தான் வானதி சீனிவாசன்.
குறைந்த வாக்காளர்களைக் கொண்ட இந்த தொகுதியில் கொஞ்சம் சிரமப்பட்டால், பாஜக வெற்றிப் பெற்றுவிடும் என்ற களச்சூழல் நிலவுவதால், கோவை முன்னாள் பாஜக எம்.பி. சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட முன்னணி தலைவர்கள், இந்த தொகுதியை குறி வைத்து காய் நகர்த்தினர். இருந்தபோதும், பாஜக மேலிட தலைவர்களின் ஆசி, கோவை மாவட்டத்தின் அசைக்க முடியாத அதிமுக முன்னணி நிர்வாகியும், செல்வாக்கு மிக்க ஆளும்கட்சி அமைச்சரான எஸ்.பி.வேலுமணியின் முழு ஆதரவோடு, கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார், வானதி சீனிவாசன்.
கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் தோல்வியை தழுவியிருந்த போதும், கடந்த 5 ஆண்டுகளில் அவ்வப்போது தொகுதியில் தலையை காட்டி, பொதுமக்களிடம் தன்னை புதுப்பித்துக் கொண்டே வந்தார் வானதி சீனிவாசன். கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் கொரோனோ தொற்று அச்சம் எழுந்த போதும், அதனால் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போதும், கோவை தெற்கு தொகுதிக்கு அடிக்கடி வந்து வறிய, விளிம்பு நிலை மக்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை வழங்கி, ஆதரவாக நின்றவர் வானதி சீனிவாசன்.
அவரை எதிர்த்து மக்கள் நீதி மய்யத்தின் நிரந்தர ஒருங்கிணைப்பாளர் கமல்ஹாசன் போட்டியிட போகிறார் என்ற தகவல் வெளியானபோதுகூட, கோவை தெற்கு தொகுதி பாஜக முன்னணி நிர்வாகிகளிடம் தைரியமாக பேசி வானதி சீனிவாசன், கமல்ஹாசனை கண்டெல்லாம் பயப்படாதீர்கள். மக்களை கவரும் வித்தையெல்லாம் எனக்கு தெரியும். அவர்களில் ஒருத்தராக என்னை மாற்றிக் கொள்ள முடியும். அதனால், கொஞ்சம் கடுமையாக உழைத்தால் போதும் கோவை தெற்கு தொகுதியில் பாஜக கொடியை பறக்க விட்டு முடியும் என்று சொல்லி வந்தவர் வானதி சீனிவாசன். வெறும் சொல் பேச்சு வீராங்கனையாக இல்லாமல், அதிகாலையில் இருந்து நள்ளிரவு வரை தொகுதி முழுவதும் பம்பரமாக சுற்றி வைத்து, மக்களை கவர்ந்தார் வானதி சீனிவாசன் என்று பிரதான எதிர்க்கட்சியான திமுக முன்னணி நிர்வாகிகளே வியப்போடு தெரிவிக்கின்றனர்.
நடிகை நமீதா வந்தார். அவரை குஷியாக்கி, தொகுதியில் ஒரு ரவுண்ட் ஜாலி பிரசாரத்தை மேற்கொண்டார் வானதி சீனிவாசன். மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி வந்தார். தனது சொந்த சகோதரி போல, அவரின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு தெரு, தெருவாக நடந்து சென்று வாக்கு சேகரித்தார் வானதி சீனிவாசன். இப்படி, அவரது தனிப்பட்ட பிரசாரத்தாலும், பாஜக மேலிட தலைவர்களின் வருகையாலும், நடிகர் கமல்ஹாசனை கதறவிட்டவர் வானதி சீனிவாசன்.
கடந்த 10 ஆண்டு உழைப்பை ஒற்றை கல், ஒரு நொடியில் சிதைத்துவிட்டது. நேற்று முன்தினம் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரசாரத்திற்கு கோவை வந்தார். அப்போது நடைபெற்ற வாகனப் பேரணியில், ஒப்பணக்கார வீதியில் உள்ள வி.எம்.காலணியகத்தை குறி வைத்து கல் வீசி தாக்குதல் நடத்தியதும், அந்த பகுதியி உள்ள இதர கடைகளை மூடச் சொல்லி வணிர்களை பாஜக.வினர் தாக்கிய விவகாரமும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
மதக்கலவரத்தை தூண்டி குளிர் காய பாஜக.வினர் சதித்தீட்டம் தீட்டியுள்ளதாக எதிர்க்கட்சியினர் முன்வைத்த பிரசாரத்திற்கு வலு சேர்ப்பதாக அமைந்துவிட்டது பாஜக.வினரின் கல்வீச்சு நிகழ்வு. வானதி சீனிவாசனின் ஒட்டுமொத்த செல்வாக்கையும் வீழ்த்த நடிகர் கமல்ஹாசன், கல்வீச்சு ஆயுதத்தை கையில் எடுத்துக் கொண்டார். தனது முகநூல் பக்கத்தில் கல்வீச்சு அராஜகத்தை பதிவேற்றி, கோவை தெற்கு தொகுதியில் காவியை குழி தோண்டி புதைக்க தொடங்கிவிட்டார்.
அதைவிட அதிர்ச்சிக்குரிய விஷயம், இதுவரை தூக்க கலக்கத்தில் இருந்த திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயகுமாரும் சிலிப்புக் கொண்டு பிரசாரத்திற்கு கிளம்பிவிடடாராம்.
தமிழகத்தில் மூன்று நான்கு தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் எப்படியாவது வெற்றிப் பெற்றிட வேண்டும் என காய் நகர்த்தி வரும் டெல்லி பாஜக மேலிடம் கூட, கோவை தெற்கு தொகுதியில் மக்களின் ஏகோபித்தஆதரவோடு வானதி சீனிவாசன் வெற்றி பெற்றுவிடுவார் என்ற மகிழ்ச்சியில் இருந்து வந்தது. இந்த நேரத்தில், எதிர்பாராமல் நடத்த கல்வீச்சு நிகழ்வால், வானதி சீனிவாசனின் கதை முடிந்துவிட்டதே என்று கவலை கொண்டுள்ளதாக கூறுகிறார்கள் கோவை தெற்கு தொகுதி பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள்.
கல்வீச்சு நிகழ்வு நடந்த அன்றிரவே சிறுபான்மையினர், வர்த்தகர்கள், பாஜக ஆதரவு பிரமுகர்கள், வானதி சீனிவாசனின் ரசிகர் கூட்டம் என தாமரையை மலர வைக்கும் சிந்தனையில் இருந்து வந்த ஒட்டுமொத்தக் கூட்டமும், அவருக்கு எதிரான மனநிலைக்கு சென்று விட்டார்கள்..
நந்தவனத்தில் ஓர் ஆண்டி – அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி – மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி”
பாவம் வானதி சீனிவாசன்….