நடிகர் ரஜினிகாந்திற்கு திரையுலக சேவையில் வழங்கப்படும் மத்திய அரசின் மிக உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த வாரத்தில்தான் அவரது மருமகனும் புகழ் பெற்ற நடிகருமான தனுஷுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது.
51-வது தாதாசாகேப் பால்கே விருது, நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் டெல்லியில் இன்று அறிவித்தார்.
இந்திய திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்கு மத்திய அரசு சார்பில் தாதாசாகேப் விருது வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு விருது வழங்கப்பட்டது.
தமிழ் திரையுலகில் இதுவரை நடிகர் சிவாஜி கணேசன், இயக்குநர் கே.பாலச்சந்தர் ஆகியோருக்கு இந்து விருது வழங்கப்பட்டுள்ளது. உலக நாயகன், சகலகலாவல்லவன் என புகழப்படும் நடிகர் கமல்ஹாசனுக்கு இந்த விருது இதுவரை வழங்கப்படவில்லை. நடிப்பை கடந்து பாடகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பல துறைகளிலும் புதுமையை நிகழ்த்தியிருந்த போதும், அவரது பெயர், இந்த விருதுக்கு தகுதியானவரா என்ற நடந்த பரிசீலனையில் கூட தேர்வுக்குழுவினர் கமல்ஹாசன் பெயரை உச்சரிக்கவில்லை.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, நடிகர் ரஜினிகாந்த்தை விட அதிக படங்களில் நடித்திருந்தாலும் கூட, திரைப்படத்துறையில் அவர் எந்தொரு சாதனையும் படைத்திடவில்லை என மத்திய அரசு கருத்துவதாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
தாதாசாகேப் விருது அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே இருக்கிற வேலையையெல்லாம் விட்டுவிட்டு, பிரதமர் மோடி, நடிகர் ரஜினிகாந்த்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மனம் திறந்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார். தனது டிவிட்டர் பக்கத்திலும் ரஜினிகாந்த்தை உச்சி குளிர வாழ்த்தியிருக்கிறார்.
பிரதமர் மோடியே வாழ்த்து மழை பொழிந்த பிறகு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தாமல் இருந்தால் பாவமாகிவிடாதா? அதனால், கொங்கு மண்டலத்தில் பிரசார நெருக்கடியில் இருந்த போதும் அவரும் ரஜினியை வாழ்த்தி, தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் நடக்கும் சட்டமன்றத் தேர்தல், இந்தநேரத்தில் உங்களுக்கு நினைவுக்கு வரக்கூடாது….