Fri. Nov 22nd, 2024

கொங்கு மண்டலத்தில் அதிமுக அமைச்சர்கள், திமுக பிரபலங்களை பின்னுக்குக் தள்ளி, ஒட்டுமொத்த ஊடக வெளிச்சமும் அதிகமாக பாயும் தொகுதியாக மாறியிருக்கிறது கோவை தெற்கு தொகுதி.. இங்கு பாஜக சார்பில் போட்டியிடும் தேசிய மகளிர் அணித்தலைவி வானதி சீனிவாசன், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணிநேரமும், தேர்தல் பிரசாரத்தில் சுவாரஸ்யத்தைக் கூட்டி, தொகுதி மக்களை ஈர்ப்பதுடன், பாஜக மற்றும் அதிமுக நிர்வாகிகளையும் உற்சாகமாக தொகுதியை வலம் வரும் வகையில் ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

ஒவ்வொரு நாளும் ஸ்டார் பிரமுகர்களை தொகுதிக்கு அழைத்து வந்து, வாக்காளர்களின் கவனம் வேறு பக்கம் திரும்பி விடாதபடி, தேர்தல் வியூகத்தை வகுத்து தூள் கிளப்புகிறார் வானதி சீனிவாசன். அவரை எதிர்த்துப் போட்டியிடும் மக்கள் நீதி மய்யத்தின் நிரந்தர ஒருங்கிணைப்பாளர் கமல்ஹாசன், காலையில் நடைப்பயிற்சி, ஆட்டோ, பேருந்து பயணம், சிறிய கடைகளில் தேநீர் அருந்துதல் என பல தசாவதாரத்திற்கு மேல் அவதாரம் எடுத்தாலும், அதையெல்லாம் டேக் இட் பாலிஸி ரீதியாக தூக்கியெறிந்துவிட்டு கூல் குயினாக சிரித்த முகத்தோடு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

நேற்றைய தினம் நடிகை நமீதா, கோவை தெற்கு தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவரின் ஃபேமஸ் டிரண்டான மச்சான்ஸ் தாமரைக்கு ஓட்டுப்போடுங்கள் என்ற வாக்கியத்தை வானதி சீனிவாசனே, நினைவுப்படுத்தி, மீண்டும் அதை நமீதா மூலமே சொல்ல சொல்லி வாக்காளர்களிடம் குறிப்பாக இளம்தலைமுறையினரை கலகலப்பாக்கினார் பாஜக வேட்பாளர்.

இன்றைய தினம், மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணியை அழைத்து வந்து, கொரோனோ காலத்தில் மூடப்பட்டிருந்த தொழிற்சாலையை அவர் மூலம் திறக்க வைத்ததை பொதுமக்களிடம் மீண்டும் நினைவுப்படுத்தியதுடன், சொந்த சகோதரியைப் போல, இருசக்கர வாகனப் பயணம், ஜீப் பிரசாரம் என இழுத்துச் சென்று வாக்குச்சேகரிப்பின் டெம்ப் குறையாமல் பார்த்துக் கொண்டார்.

வானதி சீனிவாசன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் வாக்குச் சேகரிப்பின் போது களைப்பு அடைந்து விடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் வடமாநில இளைஞிகள், பாட்டுப் பாடி உற்சாகமாக நடனமாடிக் கொண்டே, ஊர்வலத்தின் முன்பாக செல்வதால், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதி பிரசாரங்களையும் பின்னுக்குத்தள்ளி, கோவை தெற்கு தொகுதியை உச்சத்திலேயே வைத்திருக்கிறதாம் பாஜக.வின் பிரசார யுக்திகள்…

பிரசாரத்தின் இடையிடையே ஆன்மிக பெரியோர்களைச் சந்தித்து, ஆசியும் பெறும் வானதி சீனிவாசன், இந்து மத நம்பிக்கை கொண்டோரின் ஒட்டுமொத்த ஆதரவையும் முழுமையாக பெற, அவர்களிடம் போலி மதச்சார்பின்மை பேசாமலும், அரசியலுக்கு அப்பாற்பட்டும் மனம் விட்டு பேசுவதிலும் அதிக கவனத்தை செலுத்தி வருகிறாராம்.

கோவை தெற்கு தொகுதியில் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் பேரூர் ஆதீனம் அவர்களை சந்தித்து ஆசி பெற்ற வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசனின் கூல் மற்றும் கலகலப்பு பிரசாரத்தைக் கண்டு நடிகர் கமல்ஹாசனே மிரண்டு போயிருக்கிறாராம். மாநிலம் முழுவதும் ம.நீ.ம. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தாலும், ஒவ்வொரு மணிநேர இடைவேளையிலும் கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன் மேற்கொள்ளும் பிரசார யுக்திகளை பார்த்து டென்ஷன் ஆகிவிடுகிறார் என்று கூறுகிறார்கள் அவருடன் பயணிக்கும் ஊடகவியலாளர்கள்.

சினிமாவாக இருந்தால் பத்து அவதாரம் போடலாம்.. அரசியல், நிஜ களமாயிற்றே… கமல்ஹாசனுக்கு டென்ஷனை அதிகரிக்கச் செய்து வியர்க்கத்தான் வைக்கும்……