Fri. Nov 22nd, 2024

புதுச்சேரி பாஜக தேர்தல் அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார்.

இதனைத் தொடர்ந்து அவர் பேசியதாவது:

மகளிர் முன்னேற்றம் அடைய வேண்டும். அதற்காக அவர்களுக்கு உரிய வாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும் என நினைக்கிற கட்சியாக பாஜக இருக்கிறது. இதனை கருத்தில் கொண்டதால்தான் பாஜக தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வாக்குறுதிகள் தரப்பட்டுள்ளன.

அடித்தட்டு மக்களின் மேம்பாட்டிற்கு என்னென்ன தேவையோ, அவற்றையெல்லாம் அவர்களிடம் இருந்து கோரிக்கைகளாக பெற்று வாக்குறுதிகளாக தந்துள்ளோம். நமது பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கு உயர்ந்துவிடக் கூடாது என்பதற்காக, மத்திய அரசின் பல புதுமையான திட்டங்கள் புதுச்சேரியில் அமல்படுத்தப்படவில்லை. இதே நிலைமைதான் மேற்கு வங்க மாநிலத்திலும் உள்ளது. மேலும், காங்கிரஸ் ஆட்சி புரியும் மாநிலங்களிலும் மத்திய அரசின் திட்டங்கள் நிறைவேற்றப்படுவதில்லை.

மக்களின் முன்னேற்றத்திற்காகதானே மாநில அரசுகள் இருக்கின்றன. அப்படிபட்ட சிந்தனை இருந்தால், புதுச்சேரியில் மத்திய அரசின் திட்டங்களை நிறைவேற்றியிருக்க இருக்க வேண்டுமல்லவா? மீனவர்கள், நலிவுற்றவர்களக்கு வீடு கட்டும் திட்டத்தை பிரதமர் மோடி அமல்படுத்தி வருகிறார். ஆனால் இந்த திட்டம் புதுச்சேரியில் புறக்கணிப்பட்டுள்ளது. இதேபோல, சுற்றுலா, கல்வி, மருத்துவமனை நிறுவுதல் போன்ற எந்த திட்டத்தையும் புதுச்சேரி காங்கிரஸ் அரசு நிறைவேற்ற முன்வரவில்லை.

அதற்குத் தேவையான அனைத்தையும் நிறைவேற்றக்கூடியதுதான் தேர்தல் அறிக்கை. மீன்வளத்துறைக்கு தனி அமைச்சகம் அமைத்தது பிரதமர்.

விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் நலத்திட்டங்கள் மீனவர்களுக்கும் விரிவுப்படுத்தப்படும். நிறைவேற்றப்படும். புதுச்சேரி துறைமுகம் ஆழப்படுத்தப்பட்டு நவீன கட்டமைப்புடன் கட்டப்படும். மீன்பிடி இறங்குதளம் அமைக்கப்படும். விவசாயிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகைமீனவர்களுக்கும் வழங்கப்படும். இந்தியாவில் உள்ள முன்னேறிய மாநிலங்களைப் போல, புதுச்சேரி மாநிலமும் முன்னேற வேண்டும் என்ற ஆசை பிரதமர் மோடிக்கு உள்ளது.

அவரின் ஆசையை நிறைவேற்றி வைப்பதற்காகதான் என்னைப் புதுவைக்கு அனுப்பி வைத்துள்ளார். மத்தியில் பாஜக ஆட்சி சிறப்பாக செயல்பட்டு வருவதைப் போல, புதுச்சேரி மாநிலத்திலும் பாஜக ஆட்சி அமைந்தால், மக்கள் விரும்புகிற ஆட்சியாக அது இருக்கும்.

இவ்வாறு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பின்னர், நெல்லித்தோப்பு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று மத்திய பாஜக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி மத்திய நிதிமையச்சர் நிர்மலா சீதாராமன் வாக்கு சேகரித்தார். அப்போது அவருக்கு அணிவிக்க முயன்ற பொன்னாடைகளை, அங்கிருந்த வயதான தம்பதிகளுக்கு அணிவித்து, ஒட்டுமொத்த பொதுமக்களையும் மகிழ்ச்சியில் திண்டாட வைத்தார் நிர்மலா சீதாராமன்.