கலைஞரின் பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் விவகாரம், தமிழகத்தில் சூட்டை கிளப்பியிருக்கிறது.
பேனா நினைவுக் சின்னம் அமைக்கும் பணியை திராவிட மாடல் அரசு ஒருபக்கம் துரிதப்படுத்த, மறுபக்கம் எதிர்ப்புக்குரல்களும் பலமாகவே கேட்டுக் கொண்டிருக்கிறது.
சென்னை மெரினா கடற்கரையில் அமைப்பதற்கு பதிலான அண்ணா அறிவாலயத்தில் அமைத்துக் கொள்ளுங்கள் என்று ஆலோசனைகளையும் கூறிக்கொண்டிருக்கிறார்கள் எதிர்ப்பாளர்கள்.
இலவச சேலையை வாங்குவதற்கே உயிரை விட்டுக் கொண்டிருக்கும் ஏழை தாய்மார்கள் வாழும் நாட்டில் 80 கோடி ரூபாய்க்கு பேனா நினைவுச் சின்னம் தேவையா என்ற கேள்விகளும் மூலை முடுக்குகளில் இருந்தும் கேட்க தொடங்கியிருக்கிறது.
பொதுமக்களின் வரிப்பணத்தில் நினைவிடம், கலைஞர் நூலகம் அமைத்துக் கொண்டிருக்கும் திராவிட மாடல் அரசு,
பேனா நினைவுச்சின்னத்தை திமுகவின் கட்சி நிதியில் இருந்தோ, முரசொலி அறக்கட்டளை நிதியில் இருந்தோ அமைக்க வேண்டியதுதானே என்று ஆவேசமாக கேள்விகளை முன் வைத்துக் கொண்டிருக்கிறார்கள் சமூக போராளிகள்.
திமுக கட்சிக்காரர்களிடம் நிதி திரட்டி பேனா நினைவுச்சின்னத்தை அமைத்து கொள்ளுங்கள் என்ற முழக்கமும் கேட்க தொடங்கியிருக்கிறது.
திமுக கட்சிகாரர்களிடம் நிதி திரட்டி, கட்டப்பட்ட அண்ணா அறிவாலயம் எத்தனை பஞ்சாயத்துகளை சந்தித்தது என்பது எல்லாம் இன்றைய தலைமுறைக்கு தெரியுமா?
அண்ணா அறிவாலயத்தோடு தொடர்பு கொண்ட துரோகத்தை தூசி தட்டி பார்ப்போம் வாருங்கள்…
பேரறிஞர் அண்ணாவால் தோற்றுவிக்கப்பட்ட திமுகவுக்கு வடசென்னையில், ராயபுரத்தில் அறிவகம் எனும் பெயரில் முதல் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.
தொடர்ந்து 1964 ல் இரண்டாவதாக, தேனாம்பேட்டையில் அன்பகம் நிறுவப்பட்டது.
பேரறிஞர் அண்ணா மறையும் காலம் வரை அறிவகம் மற்றும் அன்பகம் என்று இரண்டு திமுக அலுவலகங்கள் தான் தொண்டர்களோடு தொடர்பில் இருந்து வந்தன.
தமிழகத்தின் முதல் அமைச்சராக எம்ஜிஆர் பதவி வகித்த காலத்தில், சென்னை அண்ணா சாலையில் உள்ள ராஜாஜி கட்டத்தின் பின்பக்கம் திமுகவின் கட்டுப்பாட்டில் இருந்த அலுவலகத்தை காலி செய்ய அன்றைய அதிமுக அரசு உத்தரவிட்டது.
எம்ஜிஆரின் அதிரடி அரசியலை கண்டு திகைத்த திமுக தலைமை, அதிமுகவினர் பொறாமை படும் வகையில் புதிய திமுக அலுவலகத்தை கட்ட கால்கோள் விழா நடத்தியது.
இன்றைக்கு தேனாம்பேட்டையில் கம்பீரமாக காட்சியளித்துக் கொண்டிருக்கும் அண்ணா அறிவாலயத்தின் கட்டுமானப் பணிகள் 1980 காலகட்டத்தில் தொடங்கியது.
கட்ட நிதிக்காக, தமிழகம் முழுவதும் ஒன்றிரண்டு ஆண்டுகள் சுற்றுப்பயணம் செய்து நிதி திரட்டினார் திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி.
கொஞ்சம் கொஞ்சமாக அறிவாலயம் உயர்ந்தாலும் கூட, முழுமையாக கட்டுமானப் பணி முடிவடைய அதிக நிதி தேவைப்பட்டதை கண்டு அயர்ச்சி அடைந்தார் கலைஞர் மு.கருணாநிதி.
திமுகவில் உள்ள ஒவ்வொரு தொண்டர்களும் நிதி கொடுத்தால் தான் அண்ணா அறிவாலயம் உயிர் பெறும் என்று உருக்கமாக உடன்பிறப்புகளுக்கு மடல் எழுதினார் கலைஞர் மு.கருணாநிதி.
திமுக தலைவரின் உணர்ச்சி மிகுந்த வார்த்தைகள் உடன்பிறப்புகளிடம் புதிய எழுச்சியை உருவாக்கிய அதேநேரத்தல், திமுக மாவட்டச் செயலாளர்களும் அண்ணா அறிவாலயத்திற்கு நன்கொடை திரட்டும் பணியில் முழு வீச்சில் குதித்தனர்.
அறிவாலய கட்டுமான பணிக்கு நிதி திரட்டுவதற்காக, திமுக தலைமைக் கழகம் சென்னையில் நன்கொடை ரசீது புத்தகங்கள் அச்சடித்து , திமுக மாவட்டச் செயலாளர்களுக்கு அனுப்பி வைத்தது.
திமுக ஆட்சியில் இல்லாத கால கட்டத்தில் தொழில் நிறுவன உரிமையாளர்கள், பஸ் முதலாளிகள், நகைக் கடை உரிமையாளர்கள், திரையரங்கு அதிபர்கள், அரிசி ஆலை உரிமையாளர்கள், சிறு வணிகர்கள் என அனைத்து தரப்பினரிடமும் திமுக மாவட்டச் செயலாளர்கள் நிதி திரட்டி கலைஞர் மு.கருணாநிதியிடம் பல தவணைகளாக வழங்கினார்கள்.
அன்றைய தேதியில் சேலம் மாவட்ட திமுக செயலாளராக பதவி வகித்து வந்த வீரபாண்டி ஆறுமுகமும், அறிவாலயம் கட்டுவதற்கு லட்சக்கணக்கான ரூபாய் திரட்டி கொடுத்தார்.
1987 ல் அண்ணா அறிவாலயம் திறப்பு விழா கண்டது. அந்த விழாவில் அண்ணா அறிவாலயத்திற்கு நிதி திரட்டி தந்த மாவட்ட செயலாளர்களுக்கு வெகுமதிகள் வழங்கப்பட்டன.
அதிகளவில் நிதி திரட்டிய மாவட்டங்களில் சென்னை முதலிடமும், சேலம் மாவட்டம் இரண்டாம் இடமும் பிடித்தது.
அறிவாலய திறப்பு விழாவில் பேசிய கலைஞர் மு.கருணாநிதி, கட்டட நிதி திரட்டுவதில் சேலம் மாவட்டம் தான் முதலிடத்திற்கு வந்திருக்க வேண்டும்.
சென்னையில் திமுக தலைவர்கள் நிறைய பேர் இருப்பதால் நிதி திரட்டுவதில் சென்னை மாவட்டம் பின்தங்கினால் அசிங்கமாகிவிடும் என்று
சென்னை மாவட்ட திமுக நிர்வாகிகளை விரட்டி விரட்டி நிதி திரட்ட வைத்ததால்,
சென்னை மாவட்டம் முதல் இடத்தை பிடித்து, மானத்தை காப்பாற்றிவிட்டது என்று பெருமிதத்தோடு கூறினார்.
எதிர்க்கட்சியாக திமுக இருந்த காலங்களில் அறிவிக்கப்பட்ட போராட்டங்களாக இருந்தாலும் சரி..
அண்ணா அறிவாலயம் கட்டட நிதி திரட்டி வழங்குவதாக இருந்தாலும் சரி..
சேலம் மாவட்டச் செயலாளர் வீரபாண்டி ஆறுமுகம் துடிப்புடன் இருந்ததால்,
கலைஞர் மு.கருணாநிதியின் பேரண்பிற்கு உரியவராக மாறியிருந்தார்.
தலைமை கழக நிர்வாகிகளை எதிர்த்து கேள்வி கேட்கிற அளவுக்கு வளர்ந்து நின்ற வீரபாண்டி ஆறுமுகம்,
சேலம் மாவட்டத்தில் குறுநில மன்னராகவே வாழ்ந்தார்.
கலைஞர் மு.கருணாநிதியிடம் தனிப்பட்ட முறையில் மிகுந்த அன்பை பெற்றிருந்த வீரபாண்டி ஆறுமுகத்தை எதிர்த்து
குரல் கொடுக்க சேலம் மாவட்ட திமுகவில் ஆட்களே இல்லாத நிலைதான் அன்று இருந்தது.
வீரபாண்டி ஆறுமுகம் வைத்ததுதான் சட்டம் என்று இருந்த நேரத்தில், வீரபாண்டி கோட்டையை சிதிலமாக்க போர் வீரராக ஒருவர் அறிமுகமானார்.
அவர் பெயர் க. அர்ச்சுனன்.
காவல்துறையில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய வந்த க.அர்ச்சுனன்,
1980 ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில்
திமுக வேட்பாளராக தர்மபுரி தொகுதியில் களம் இறக்கப்பட்டார்.
முதன்முதலில் தேர்தலை சந்தித்த போதே,அபார வெற்றி பெற்று வரலாறு படைத்தார் க.அர்சுணன்.
காவல்துறையில் பணியாற்றியவர் என்பதால், தவறுகளை பொறுத்துக் கொள்ளும் குணம் இல்லாதவராகவே வலம் வந்தார் க.அர்ச்சுணன்.
க.அர்ச்சுணனின் செயல்பாடுகளால் கவரப்பட்ட திமுக இளைஞர்கள், அர்ச்சுணனை தலையில் தூக்கி வைத்து கொண்டாட தொடங்கினார்கள்.
சேலம் மாவட்ட திமுகவில் அசைக்க முடியாத சக்தியாக
நடமாடிக் கொண்டிருந்த வீரபாண்டி ஆறுமுகத்திற்கு உதறல் எடுக்க தொடங்கிவிட்டது.
வீரபாண்டி ஆறுமுகத்தின் சாதி அரசியலை கண்டு மனம் வெறுத்துப் போயிருந்த திமுக ஒன்றிய செயலாளர்கள்,
மூத்த நிர்வாகிகள் வெளிப்படையாகவே க.அர்ச்சுணனுக்கு ஆதரவுக் கரம் நீட்ட தொடங்கினார்கள்.
திமுக எம்பி என்பதால், தருமபுரி, பென்னாகரம், அரூர்,மேட்டூர், தாரமங்கலம், மொரப்பூர் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் அர்ச்சுணனுக்கு அமோக வரவேற்பு கிடைத்ததால், சேலம் மற்றும் தருமபுரி ஆகிய இரு மாவட்டங்களிலும் க.அர்ச்சுணனின் புகழ் கொடி கட்டி பறந்தது.
இளம் வயதில் அரசியலுக்கு நுழைந்து எம்பியாகி டெல்லிக்கும் அடிக்கடி சென்று வந்ததால், இரண்டு மாவட்ட அரசியலிலும் முக்கியத்துவம் செலுத்த தொடங்கினார் க.அர்ச்சுணன்.
க.அர்ச்சுணனை இளைஞர் கூட்டம் சுற்றி வரும் தகவல் சென்னை வரை பரவ, கலைஞர் மு.கருணாநிதி, அர்ச்சுணனின் கட்சி பணிகளை உற்சாகப்படுத்த தொடங்கினார்.
குறுகிய காலத்தில் க.அர்ச்சுணன் அசுர வளர்ச்சி அடைந்ததை கண்டு கொதித்து போன வீரபாண்டி ஆறுமுகம்,
சேலம் மாவட்ட திமுகவில் அர்ச்சுணனின் முக்கியத்துவத்தை குறைக்கும் காரியங்களில் ஈடுபட்டார்.
அரசியலில் தனக்கு கிடைக்கும் செல்வாக்கை சிதைக்கப் பார்க்கிறார் என்ற கோபம் க.அர்ச்சுனிடம் தலை தூக்கிய நேரத்தில்
1984 சட்டமன்றத் தேர்தலில் தாரமங்கலம் தொகுதியில் போட்டியிட்டார் க.அர்ச்சுணன்.
எம்.பி. பதவியை ராஜினாமா செய்து விட்டு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்ட க.அர்ச்சுணனுக்கு தேர்தல் முடிவு பயங்கர அதிர்ச்சி தந்தது.
அதிமுக சார்பில் போட்டியிட்ட எஸ்.செம்மலை, கே.அர்ச்சுணனின் வெற்றி வாய்ப்பை பறித்தார்.
தாரமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் வீரபாண்டி ஆறுமுகத்தின் நிர்வாகிகள் குழிபறிப்பு வேலை செய்ததால்தான் தோல்வியை சந்திக்க நேர்ந்தது என்பதை அறிந்து கொதித்துப் போனார் க.அர்ச்சுணன்.
சட்டமன்றத் தேர்தலில் தனக்கு துரோகம் இழைத்த வீரபாண்டி ஆறுமுகத்திற்கு சரியான பாடம் புகட்டுவேன் என்று சபதமெடுத்த க.அர்ச்சுணன், சேலம் மாவட்ட திமுக அரசியலில் வீரபாண்டி ஆறுமுகத்திற்கு எதிரான நிர்வாகிகளை, ஒன்றியச் செயலாளர்களை ஓரணியில் திரட்ட தொடங்கினார்.
துடிப்புமிக்க இளைஞராக இருந்த க.அர்ச்சுணன்,
வீரபாண்டி ஆறுமுகத்தின் எதிர்ப்பு அரசியலை பொடி பொடியாக்கிவிட்டு,
சேலம் மாவட்ட திமுக செயலாளர் பதவியை கைப்பற்ற, சேலம் மாவட்டத்திற்குள்ளேயே சுற்றி சுற்றி வந்து ஆதரவை பெருக்கினார்.
சேலம் மாவட்ட திமுகவில் வீரபாண்டி ஆறுமுகமும் க.அர்ச்சுணனும் எதிரும் புதிரும் நின்றுக் கொண்டிருந்த நேரத்தில்தான்,
அண்ணா அறிவாலயம் கட்டுவதற்கான நன்கொடை திரட்டும் வேலை முனைப்புடன் நடந்து கொண்டிருந்தது.
வீரபாண்டி ஆறுமுகத்திடம் நன்கொடை கொடுத்த பஸ் முதலாளிகள், தங்க நகை கடை உரிமையாளர்கள் என பலர்,
திமுகவுக்கு எவ்வளவு நிதி கொடுத்தோம் என்பதை க.அர்ச்சுணனிடம் கூறியிருக்கிறார்கள்.
சேலம் மாவட்ட திமுக சார்பில் வசூல் செய்து கொடுத்த தொகை பற்றி
அண்ணா அறிவாலயம் திறப்பு விழா மேடையில்
கலைஞர் மு.கருணாநிதி அறிவித்த நேரத்தில்,
அதை கேட்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார் க.அர்ச்சுணன்.
சென்னையில் இருந்து சேலத்திற்கு அவசரமாக திரும்பிய க.அர்ச்சுணன், சேலம் தொழில் அதிபர்கள் பலரிடம் விசாரித்து தகவலை திரட்டினார்.
நன்கொடை கொடுத்ததற்காக வீரபாண்டி ஆறுமுகம் தரப்பில்கொடுக்கப்பட்ட நன்கொடை ரசீதுகளையும் வாங்கி ஆய்வு செய்தார் க.அர்ச்சுணன்.
க.அர்ச்சுணன் சந்தேகப்பட்டதற்கு ஏற்ப, அறிவாலய கட்டட நிதி வசூலுக்காக திமுக தலைமைக் கழகத்தால் கொடுக்கப்பட்ட ஒரிஜினல் ரசீதுக்கும், வீரபாண்டி ஆறுமுகத்தால் கொடுக்கப்பட்ட நன்கொடை ரசீதுக்கும் பெரும் வித்தியாசம் தெரிந்திருக்கிறது.
க.அர்ச்சுணன் தன்னுடைய போலீஸ் புத்தியை பயன்படுத்தி, விசாரணையை துரிதப்படுத்திய போது, அண்ணா அறிவாலயத்திற்கான கட்டட நிதி வசூலித்த விவகாரத்தில் பெருமளவில் மோசடி நடைபெற்றிருக்கிறது என்பதை கண்டுபிடித்தபோது ஆவேசமாகிவிட்டார்.
அண்ணா அறிவாலயம் கட்டுவதற்காக சேலம் மாவட்ட திமுகவிடம் இருந்து
ஒரு குறிப்பிட்ட அளவுக்கு நிதி வசூல் ஆனாலே பெரிய விஷயம் என்று திமுக தலைமை சொல்லியிருந்த நேரத்தில்,
அந்த தொகையை விட கூடுதலான நிதியை வசூலித்திருக்கிறார் வீரபாண்டி ஆறுமுகம்.
பணத்தின் மீது பேராசை கொண்ட வீரபாண்டி ஆறுமுகம்,
திமுக தலைமை கழகம் வழங்கிய ஒரிஜினல் நன்கொடை ரசீது போலவே,
சேலத்தில் டூப்ளிக்கேட் நன்கொடை ரசீதுகளை அச்சடித்து
பல லட்சம் ரூபாய் வசூலித்து மோசடியில் ஈடுபட்டிருக்கிறார் என்று ஆதாரங்களுடன் கலைஞர் மு.கருணாநிதியிடம் புகார் தெரிவித்திருக்கிறார், க.அர்ச்சுணன்.
வீரபாண்டி ஆறுமுகத்திற்கு எதிராக மிகவும் துணிச்சலுடன் கலைஞர் மு.கருணாநிதியிடம் நேரில் புகார் தெரிவித்த க.அர்ச்சுணனின்
போர்க்குணத்தை கேள்விபட்டு வியந்து போனார்கள் வீரபாண்டி ஆறுமுகத்தின் எதிர் தரப்பினர்.
வீரபாண்டி ஆறுமுகத்தை எதிர்த்து மாவட்டச் செயலாளர் பதவிக்கு போட்டியிடுமாறு க.அர்ச்சுணனை அதிருப்தியாளர்கள் தூண்டிவிட்டனர்.
இளங்கன்று பயமறியாது என்பதற்கு ஏற்ப, க.அர்ச்சுணனும் சேலம் மாவட்டத்தில் வீரபாண்டி ஆறுமுகத்திற்கு எதிராக தீவிர அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட தொடங்கினார்.
அதுவரை வீரபாண்டி ஆறுமுகத்திற்கு ஆதரவாக இருந்து வந்த 10க்கும் மேற்பட்ட திமுக ஒன்றிய செயலாளர்கள் க.அர்ச்சுணனின் ஆதரவாளர்களாக மாறி போனார்கள்.
க.அர்ச்சுணனை எதிர்த்து போட்டியிட்டால் சேலம் மாவட்ட திமுக செயலாளர் தேர்தலில் தோற்றுவிடுவோம் என்று பயந்து போயிருக்கிறார் வீரபாண்டி ஆறுமுகம்.
1985 காலகட்டத்தில் உட்கட்சி தேர்தலை எதிர்கொண்டது திமுக.
அந்த நேரத்தில் வீரபாண்டி ஆறுமுகத்தை மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து அகற்றிவிட்டு ஜனநாயக முறைப்படி உட்கட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறும் வைராக்கியம் கொண்டிருந்தார் க.அர்ச்சுணன்.
மாவட்டச் செயலாளர் தேர்தலில் வெற்றிக்கு தேவையான ஒன்றிய செயலாளர்கள் எண்ணிக்கையை விட கூடுதலாக ஒன்றிரண்டு நிர்வாகிகளுடன் சென்னைக்கு புறப்பட்டு வந்தார் க.அர்ச்சுணன்.
சேலம் மாவட்ட திமுக செயலாளருக்கான தேர்தலை அண்ணா அறிவாலயத்தில்தான் நடத்த வேண்டும்.
அண்ணா அறிவாலய கட்டட நிதியிலேயே டூப்ளிக்கேட் டிக்கெட் அடித்து
வசூல் மோசடியில் ஈடுபட்ட வீரபாண்டி ஆறுமுகத்தை திமுக நிர்வாகிகள் மன்னிக்க தயாராக இல்லை.
ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தினால் வீரபாண்டி ஆறுமுகம் தோற்பது உறுதி என போர்க்குணத்தோடு முழங்கினார் க.அர்ச்சுணன்.
க.அர்ச்சுணனின் துணிச்சலை பார்த்து வியந்து போனார் கலைஞர் மு.கருணாநிதி..
மாவட்ட செயலாளர் தேர்தலில் வீரபாண்டி ஆறுமுகம் தோற்றுப் போவதை கலைஞர் மு.கருணாநிதி உண்மையில் விரும்பவே இல்லை.
க.அர்ச்சுணனனிடம் சமாதானம் பேசப்பட்ட போதும் விட்டுக் கொடுக்க மனம் இல்லாதவராகவும் பிடிவாதத்துடனும் இருந்தார் க.அர்ச்சுணன்.
அரசியலில், தேர்தலில் நேர்மையான குணத்திற்கு எப்போதுமே மதிப்பு, மரியாதை இருந்ததில்லை என்பது க.அர்ச்சுணன் விவகாரத்திலும் நடந்தேறியதுதான் அதிர்ச்சிக்குரிய ஒன்று.
க.அர்ச்சுணனுக்கு ஆதரவாக நின்ற ஒன்றிய திமுக செயலாளர்களிடம் திமுக தலைமைகழக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
திமுக தலைமையை பகைத்துக் கொண்டு க.அர்ச்சுணனை ஆதரிப்பதா..
தங்கள் அரசியல் எதிர்காலம் கேள்விகுறியாகிவிடும் என்று பயந்து போன திமுக ஒன்றிய செயலாளர்கள்
யூ டர்ன் போட்டு வீரபாண்டி ஆறுமுகத்திற்கு ஆதரவு தந்துவிட்டனர்.
போலீஸ் துறையில் எதிர்கொள்ளாத சூழ்ச்சிகளை அரசியலில் நேருக்கு நேர் சந்தித்த க.அர்ச்சுணன், மனமுடைந்து போனார்.
திமுக தலைமையிடம் நேர்மை இல்லை.. சேலம் மாவட்ட மக்களுக்கு கலைஞர் மு.கருணாநிதி துரோகம் இழைத்துவிட்டார் என்று கூறிவிட்டு, அதிமுகவில் ஐக்கியமானார் க.அர்ச்சுணன்.
1989 தேர்தலில் செல்வி ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவில் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்ட க.அர்ச்சுணன், ஆளும்கட்சியாக திமுக அமர்ந்த தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தார்.
அந்த காலகட்டத்தில்தான் முதல்முறையாக அமைச்சராக பதவியேற்றார் வீரபாண்டி ஆறுமுகம்.
அன்றைய தேதியில் இருந்து தான் சேலம் மாவட்ட திமுகவுக்கு, அராஜக பாதையிலேயே துணிந்து பயணிக்கும் தைரியம் பிறந்தது.
1987 காலகட்டத்தில் வீரபாண்டி ஆறுமுகம் உட்கட்சி தேர்தலில் தோற்கடிக்கப்பட்டிருந்தால், 35 ஆண்டுகளுக்கு முன்பு வீரபாண்டி ஆறுமுகத்தின் சரித்திரம் முடிந்திருக்கும்.
பிற்காலத்தில் திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதியை எதிர்த்தும் இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசியலில் தலை எடுப்பதை தடுக்கும் வகையில் வைகோவை ஆதரிப்பதற்கும், கலைஞர்களின் வாரிசுளுக்கு இடையே உருவாகியிருந்த பகையை அதிகரிக்கும் வகையில் மு.க.அழகிரியை தூண்டிவிட்டு தலைமைக்கு எதிராக அரசியல் செய்யும் தைரியமும் வீரபாண்டி ஆறுமுகத்திற்கு ஏற்பட்டிருக்காது.
அராஜகத்தையே அரசியல் பாடமாக கொண்ட ஒரு பெருங்கூட்டமும் அட்ரஸ் இல்லாமல் போயிருக்கும்.
சேலம் மாவட்ட திமுகவில் ஜனநாயகத்தை விரும்பும் நிர்வாகிகளுக்கு உயர்ந்த பதவிகள் கிடைத்திருக்கும்.
ரத்தம் பீறிட்ட கொடூரங்களையும் அபகரிப்புகளையும் கண்களில் பார்க்க வேண்டிய துயரம். சேலம் மாவட்ட பொதுமக்களுக்கும் உருவாகியிருக்காது.
1987 காலகட்டத்தில் கலைஞர் மு.கருணாநிதி தயங்கிய காரியத்தை இன்றைய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கச்சிதமாக நிறைவேற்றி விட்டார் என்று பழங்கால நினைவுகளை தொகுத்து கூறி நிம்மதி பெருமூச்சு விடுகிறார்கள் சேலம் திமுக முன்னணி நிர்வாகிகள்.
35 ஆண்டு காலமாக ஒரே குடும்பத்தின் கீழ் இருந்த சேலம் மாவட்ட திமுகவை, வீரபாண்டி ஆறுமுகத்தின் குடும்பத்தின் பிடியில் இருந்து மீட்டவர் இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் என்பதுதான் அறவழியில் அரசியலை எதிர்கொள்ளும் திமுக நிர்வாகிகளின் மிகுந்த சந்தோஷமாக இருந்து கொண்டிருக்கிறது.
அச்சு தொழிலிலில் நவீன தொழில் நுட்பம் அறிமுகமாகாத காலத்திலேயே டூப்ளிக்கேட் நன்கொடை டிக்கெட் அடித்து மோசடி வசூலில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்றால்,
இன்றைய தேதியில் ரிசர்வ் வங்கி அச்சடிக்கும் ரூபாய் நோட்டுகளை விட மிக துல்லியமாக அச்சடிக்கும் திறமை படைத்தவர்கள் நிறைந்த காலத்தில், அதுவும் ஆளும்கட்சியாக திமுக இருந்து வரும் நேரத்தில் பேனா நினைவுச்சின்னத்திற்கு நிதி திரட்ட தொடங்கினால், ஊர் ஊருக்கு மோசடிகாரர்கள் திமுகவின் பெயரையும் புகழையும் ஒரே நாளில் குழி தோண்டி விடுவார்கள் என்று எச்சரிக்கையோடு கூறுகிறார்கள் ஜனநாயக பாதையில் பயணித்துக் கொண்டிருக்கும் மூத்த திமுக முன்னோடிகள்…