Fri. Apr 19th, 2024

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக பாஸ்கர பாண்டியன் ஐஏஎஸ், பிப்ரவரி ரி 8 ஆம் தேதி பதிவு ஏற்றுக் கொண்டார். ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு மூன்று ஆண்டுகளை நிறைவு செய்வதற்கு முன்பாக ஆட்சியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டது, ஏன் என்ற கேள்வியை எழுப்பினால், வழக்கம் போல அரசியல் தலையீடுகள் தான் காரணமாக அமைந்திருக்கின்றன என்கிறார்கள் தலைமைச் செயலகத்தில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள்..

பணியிட மாற்றத்திற்குள் மறைந்து கிடக்கும் மர்மத்தை தோண்டி எடுத்திருக்கிறது நல்லரசு..


ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக பாஸ்கர பாண்டியன் ஐஏஎஸ் பணியாற்றிக் கொண்டிருந்தார். மனிதநேயமிகுந்தவர் பாஸ்கர பாண்டியன் ஐஏஎஸ்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக அவர் பணியாற்றிக் கொண்டிருந்த போதே,
நல்லரசு தமிழ் செய்திகள் இணையதளத்தில் பாஸ்கர பாண்டியன் ஐஏஎஸ்ஸை பற்றி செய்தி வெளியிட்டிருந்தோம்.
தமிழ்நாடு அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறையின் இயக்குனர் பதவிக்கு
பணியிடம் மாற்றம் செய்யப்பட்டால், மிகச் சிறப்பாக பணியாற்றுவார் என்று சுட்டிக்காட்டியிருந்தது நல்லரசு. ஆட்சி நிர்வாகத்தில் பொதுமக்களிடம் நல்ல பெயர் எடுப்பது எளிதான விஷயம். ஆனால், ஆளும்கட்சியைச் சேர்ந்த பிரபலகளிடம்
நல்ல பெயர் எடுப்பதை விட, அவர்களின் கோபத்திற்கு ஆளாகாமல் இருப்பதே சாதனையான ஒன்றுதான்.


ஆளும்கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகளிடம் மோதல் போக்கே வேண்டாம். பணியிடம் மாற்றம் கிடைத்தால் சந்தோஷமாக புதிய பதவியில் அமர்த்து விடலாம் என்ற மனநிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார் பாஸ்கர பாண்டியன் ஐஏஎஸ்..
பாஸ்கர பாண்டியன் ஐஏஎஸ் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டிருப்பதின் பின்னணியில் உள்ள மர்மம் என்ன?
விரிவாக பார்க்கலாம் …
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்தவுடன்
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக பதவியேற்றவர் பாஸ்கர பாண்டியன் ஐஏஎஸ்.
15 மாதங்களுக்கு மேலாக ஆட்சியர் பொறுப்பில் நீடித்த பாஸ்கர பாண்டியன் ஐஏஎஸ்,
சிறப்பாக நிர்வாகத்தை கட்டமைத்து பொதுமக்களிடம் நற்பெயரை சம்பாதித்து இருக்கிறார். ஆனால், ஆளும்கட்சி பிரமுகர்களின் அபிலாஷைகளை சட்டத்திற்குட்பட்டு அனுமதித்த ஆட்சியர், விதிகளை மீறி செயல்பட முனைந்த போது கண்டிப்பு காட்டியிருக்கிறார் பாஸ்கர பாண்டியன் ஐஏஎஸ்.
ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் தான், கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் ஆர்.காந்தி மூத்த அரசியல்வாதி. திமுகவில் நெடிய பயணத்தை மேற்கொண்டு வருபவர்.
ஆளும்கட்சியான திமுகவுக்கும் தான் வகிக்கும் அமைச்சர் பதவிக்கும்
களங்கம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து வருபவர் அமைச்சர் ஆர். காந்தி.


ஆனால், தந்தைக்கு இருக்கும் நற்குணங்கள் மனப்பக்குவம், அவர்களின் புதல்வர்களுக்கு இருக்க வேண்டும் என்ற நியதியும் இல்லை தானே.
அமைச்சர் ஆர்.காந்திக்கு வினோத், சந்தோஷ் ஆகிய இரண்டு புதல்வர்கள் உண்டு.
தான் உண்டு.. தன் வேலை உண்டு இருந்து வருபவர் சந்தோஷ்..
ஆனால், வினோத்திற்கு அரசியல் ஆசையும் ஆட்சி அதிகாரத்தை அனுபவிக்க வேண்டும் என்பது வெறும் ஆசை மட்டுமல்ல, வெறியாகவும் இருந்து கொண்டிருக்கிறது.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் போது வினோத்தின் ஆட்டம் அதிகமாக இருந்தது.
அமைச்சர் காந்திக்கு நெருக்கமான திமுக முன்னணி நிர்வாகிகளே வினோத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய அவலமெல்லாம் அரங்கேறியது.

அரசு அதிகாரிகள் இடம் மாற்றம், அதிக கமிஷன் கொடுக்கும் கான்ட்ராக்டர்களுக்கு
கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான டெண்டர்களை ஒதுக்கீடு செய்வது என
தனி ஆவர்த்தனம் செய்து வருகிறார் வினோத். ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனிம வளங்கள் அதிகளவில் உள்ளன.


கற்கள் வெட்டியெடுக்கும் குவாரி தொழிலிலும் குதித்திருக்கிறார் வினோத்.
பெயரளவுக்கு அரசின் உரிமத்தை வைத்துக் கொண்டு
சட்டத்திற்கு புறம்பாக கற்களை வெட்டி எடுத்துக் கொண்டிருந்திருக்கிறார்.
வினோத்தின் சட்டத்திற்கு புறம்பான செயல்கள் பற்றி புகார்கள், ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகத்திற்கு வந்த போது, ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் ஐஏஎஸ், உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்திருக்கிறார்.


அமைச்சரின் மகன் என்று அதிகாரத்தை காட்டியிருக்கிறார் வினோத்.
சட்டத்திற்கு புறம்பான செயல்களை அனுமதிக்க முடியாது என்று கறார் காட்டியிருக்கிறார் ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் ஐஏஎஸ்.
கல் குவாரி விவகாரத்தில் அமைச்சர் காந்தியின் மகன் வினோத், வில்லனாக நிற்க,
கனிம வளத்துறையை தன் வசம் வைத்திருக்கும் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் எம்பியும் இரண்டாவது வில்லனாக மாறியிருக்கிறார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கதிர் ஆனந்த் எம்பிக்கு சொந்தமான கல் குவாரிகளும் செயல்பட்டு வருகின்றன.
கதிர் ஆனந்த் எம்பிக்கு சொந்தமான கல் குவாரிகள் சட்டத்திற்கு புறம்பாக கற்களை வெட்டி எடுக்கிறார்களே…


கதிர் ஆனந்த்தை தட்டி கேட்க தைரியம் உண்டா என்று வினோத், மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் ஐஏஎஸ்ஸிடம் முறைப்பு காட்டியிருக்கிறார்.
பதிலுக்கு கதிர் ஆனந்த் எம்பியும், வினோத்துக்கு சொந்தமான கல் குவாரிகளில் அரசின் அனுமதிக்கு மாறாக கற்கள் வெட்டி எடுக்கிறார்கள் என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் ஐஏஎஸ்ஸிடம் போட்டுக் கொடுத்திருக்கிறார்.
இரண்டு அமைச்சர்களின் மகன்கள், சட்டத்திற்கு புறம்பாக கல் குவாரிகளை நடத்தி, அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்துகிறார்களே என்ற வேதனை ஒருபக்கம் இருக்க, ஒருத்தனை அழிக்க மாவட்ட நிர்வாகத்தை பயன்படுத்திக் கொள்ள பார்க்கிறார்களே என்ற வருத்தம் ஆட்சியர் பாஸ்கர பாண்டியனை நிம்மதியிழக்க செய்திருக்கிறது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆட்சியராக நீடிப்பதை விட தண்ணியில்லாத காட்டிற்கு பணியிடம் மாற்றம் கிடைத்தாலும் நிம்மதியாக பணியாற்றலாம் என்ற மனநிலைக்கு சென்றிருக்கிறார் பாஸ்கர பாண்டியன் ஐஏஎஸ்.

இதற்கு மேலாக, கிராம உதவியாளர் பணி நியமனத்திலும் நேர்மையை கடைப்பிடித்தார் ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் ஐஏஎஸ். இதனால், அமைச்சர் ஆர். காந்தியின் ஆதரவாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். கிராம உதவியாளர் வேலையை பெற்று தருவதாக கூறி அமைச்சரின் ஆதரவாளர்கள் லட்சக்கணக்கில் பணம் வசூலித்துள்ள நிலையில், நேர்மையான முறையில் கிராம உதவியாளர் நியமனம் நடைபெற்றதால், ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் ஐஏஎஸ் மீது அமைச்சர் ஆர்.காந்தியின் ஆதரவாளர்கள் கடும் கோபத்தில் இருந்து வந்துள்ளார்கள்.


கடந்த 3, 4 மாதங்களாக மன உளைச்சலில் இருந்து வந்த பாஸ்கர பாண்டியன் ஐஏஎஸ்ஸுக்கு, ஜனவரி 30 ம் தேதி விடுதலை கிடைத்திருக்கிறது.
மாநிலம் முழுவதும் ஆட்சியர் உள்பட 30க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார்கள்.
தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு ஐஏஎஸ் பிறப்பித்த உத்தரவில், பாஸ்கர பாண்டியன் ஐஏஎஸ், ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருந்து பக்கத்தில் உள்ள திருப்பத்தூர் மாவட்டத்திற்கு இடம் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.
இரண்டு அமைச்சர்களின் மகன்கள் அட்டூழியத்தை யாரிடமே பகிர்ந்து கொள்ளாமல் மனதிலேயே புதைத்து வைத்திருந்திருக்கிறார் பாஸ்கர பாண்டியன் ஐஏஎஸ்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று காலை ஆட்சியர் பொறுப்பை பாஸ்கர பாண்டியன் ஐஏஎஸ் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து பாஸ்கர பாண்டியன் புறப்பட்டு சென்ற பிறகு, கனிம வளத்துறை அதிகாரிகள், இரண்டு அமைச்சர்கள் கொடுத்த தொல்லைகளை, இப்போது வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் ஐஏஎஸ் ஆற்றிய சேவையை, பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு., அவ்வப்போது அறிந்து வந்திருக்கிறார்.

ஆய்வுக்கூட்டங்களுக்காக ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு செல்லும் போதும், அரசுத்துறை தொடர்பான வளர்ச்சிப்பணிகளை துவக்கி வைப்பதற்காக சென்ற போதெல்லாம், ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் ஐஏஎஸ்ஸின் அர்ப்பணிப்பு உணர்வை நேரிலும் கண்டறிந்திருக்கிறார் அமைச்சர் எ.வ.வேலு.

இந்நிலையில், ஆட்சியர் மாற்றம் குறித்து முன்கூட்டிய தகவல் வெளியான நேரத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மூலம் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ்ஸிடம் பரிந்துரைத்திருக்கிறார் அமைச்சர் எ.வ.வேலு.

திருப்பத்தூர் மாவட்டத்திற்கு என்று தனி அமைச்சர் இல்லாததால், அந்த மாவட்டத்திற்கு பொறுப்பு வகித்து வரும் அமைச்சர் எ.வ.வேலுவின் வேண்டுகோளை ஏற்று, பாஸ்கர பாண்டியன் ஐஏஎஸ்ஸை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ் உத்தரவிட்டிருக்கிறார்.

ராணிப்பேட்டை மாவட்ட அமைச்சர் ஆர்.காந்தி மற்றும் அவரது மகன் வினோத் ஆகிய இரண்டு பேரின் அதிகார மிரட்டலுக்கும், நீர்வளம் மற்றும் கனிம வளத்துறை மூத்த அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் எம்பி ஆகியோரின் வரம்பு மீறிய செயல்களும்தான் ஆட்சியர் மாற்றத்திற்கு காரணம் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

ஆனால், அதே நேரத்தில் நேர்மையான மாவட்ட ஆட்சியர், மனம் நொந்து இருப்பதை அறிந்து, அதற்கு தீர்வு காணும் வகையில் அண்டை மாவட்டமான திருப்பத்தூர் ஆட்சியராக பாஸ்கர பாண்டியன் ஐஏஎஸ்ஸை நியமனம் செய்யும் வகையில் துரிதமாக செயல்பட்டிருக்கிறார் அமைச்சர் எ.வ.வேலு.


ஆட்சியராக இடம் மாற்றம் செய்யப்பட்ட இளம் ஐஏஎஸ் அதிகாரிகளை சென்னைக்கு அழைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கியிருக்கிறார்.
அரசியல் அழுத்தம் இன்றி மக்கள் பணியையும், மாவட்ட நிர்வாகத்தையும் செம்மையாக நடத்த வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாக சொல்லியிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..
முதல்வர் அவர்களே,
ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூறும் அறிவுரையை, திராவிட மாடல் ஆட்சியில் அங்கம் வகித்துக் கொண்டிருக்கும் திமுக அமைச்சர்களிடம் கண்டிப்புடன் கூறுங்கள்..
நாடு பிழைத்துப் போகட்டும்…