Sat. Jun 3rd, 2023

சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி நினைவிடத்திற்கு அருகில் கடலில் பேனா நினைவுச்சின்னம் அமைப்பதற்கான நடவடிக்கைகளில் தமிழ்நாடு அரசு தீவிரமா உள்ளது.

இதன் ஒருபகுதியாக அண்மையில் சென்னையில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பொதுமக்களின் எதிர்ப்பை மீறி பேனா நினைவுச்சின்னம் அமைத்தால், அதை உடைத்தெறிவேன் என ஆவேசமாக கூறினார்.

சீமானின் கருத்தை எதிர்த்தும் ஆதரித்தும் சமூக ஊடகங்களில் ஏராளமானோர் கருத்துகளை முன் வைத்து வருகின்றனர்.

இந்த வரிசையில், சென்னை பழைய கிழக்கு கடற்கரைச் சாலையைச் சேர்ந்த பாஜக பிரமுகர் நீலாங்கரை முனுசாமியும், திருவள்ளூவரை விட கலைஞர் மு.கருணாநிதி பெரிய சாதனை புரிந்தவரா? திருவள்ளூவர் சிலையை விட அதிக உயரத்தில் மு.கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் அமைக்க வேண்டுமா? என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.

நீலாங்கரை முனுசாமி, பாஜகவில் இணைவதற்கு முன்பாக அதிமுகவில் முக்கிய நிர்வாகியாக இருந்தார். சென்னை மாநகராட்சி முன்னாள் கவுன்சிலராகவும் பதவி வகித்தவர்.

மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கு நேரடியாக அறிமுகமானவரும் கூட. இவருக்கு திமுக எதிர்ப்பு என்பது ரத்தத்தில் ஊறிய ஒன்று. அரசியல் ரீதியாக முனுசாமி எந்த நிலைப்பாட்டை எடுத்தாலும் அது தனி மனிதருக்கு உரிய சுதந்திரமாகிவிடும்.

வாழ்நாள் முழுவதும் திமுக எதிர்பாளராக உள்ள முனுசாமியின் புதல்வருக்கு தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினின் அலுவலகத்திற்கு பணி மாறுதல் வழங்கப்பட்டுள்ளதால்தான் தற்போது சர்ச்சையாக வெடித்து இருக்கிறது.

பாரதிய ஜனதா கட்சியின் மாநில மீனவரணித்தலைவர் முனுசாமி புதல்வர் எம்.பரத்குமார், உதவி மக்கள் தொடர்பு அலுவலராக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அலுவலகத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளார் என்றும், செய்தித்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதனின் கவனத்திற்கே கொண்டு செல்லாமல் பரத்குமாருக்கு பணி மாறுதல் வழங்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள் செய்தித்துறையில் உள்ள திமுக ஆதரவு அதிகாரிகள்.

தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் செய்தித்துறை மிகவும் சீரழிந்துக் கொணடிருக்கிறது என்றும் இது போன்ற செயல்கள் மறைந்த முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா ஆட்சியிலோ எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலோ நடைப்பெற்றிருக்குமா ? என்று ஆவேசமாக கேள்வி எழுப்புகிறார்கள் செய்தித்துறையில் உள்ள உயர் அதிகாரிகள்.

செய்தித்துறையில் இதற்கு முன்பு எந்த காலத்திலும் இல்லாத அளவுக்கு, பணி மாறுதலுக்கு பணம் பெற்றுக் கொண்டு, செய்தித்துறை அலுவலர்களின் பின்னணி, கடந்த கால செயல்பாடுகள், நிர்வாகத்திறன் ஆகியவற்றை பற்றியெல்லாம் ஆராய்ந்து பார்க்காமல், தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் வகையில் உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகிறது என்றால், செய்தித்துறை யாருடை கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதும் அவர்களுடையே ஆவேசமாகும்.

முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில், திமுக பின்னணி கொண்ட செய்தித்துறை அதிகாரிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த அலுவலகங்களில் பணியாற்றும் வாய்ப்பே வழங்கப்பட்டதில்லை. அதைவிட கொடுமையாக, செய்தித்துறையில் பணியாற்றும் திமுக குடும்பத்து அதிகாரிகளின் பெற்றோர் அல்லது உறவினர்கள் அதிமுக ஆட்சியை விமர்சனம் செய்து பேசினாலே, அவர்களது வாரிசுகளான செய்தித்துறை அலுவலர்களை பணியிட மாற்றம் செய்வது, தற்காலிக பணியிடை நீக்கம் செய்வது என அராஜகம் எல்லாம் நடைபெற்று இருக்கிறது.

அதிமுக ஆட்சியில் செய்தித்துறையில் தலைமை பணிகளில் பணியாற்றியவர்கள், அவர்களது ஆட்சித்தலைமைக்கு மிகவும் விசுவாசமாக இருந்து வந்தார்கள். ஆனால், இன்றைய திமுக ஆட்சியில், கடந்த 20 மாதங்களுக்கு மேலாக திமுக குடும்பத்தைச் சேர்ந்த செய்தித்துறை அதிகாரிகளுக்கு அநீதி இழைக்கப்படுவது தொடர்கதையாக இருக்கிறது என்று வேதனையை பகிர்ந்து கொள்கிறார்கள்.

ஆனால், அதிமுக குடும்பத்து பின்னணி கொண்ட செய்தித்துறை அலுவலர்கள், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் உரிய அங்கீகாரம் பெறுவதும் செல்வாக்கு மிகுந்த பிரிவுகளில் உயர் பதவிகளில் அமர்வதும் சர்வசாதாரணமாக நடந்து கொண்டிருக்கிறது.

செய்தித்துறையில் நடந்து கொண்டும் குளறுபடிகளை, முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்ல முடியாத அளவுக்கு, முதல் அமைச்சர் அலுவலக செயலாளர்களாக பணியாற்றிக் கொண்டிருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் தடுப்புச் சுவராக நின்றுக் கொண்டிருக்கிறார்கள்.

பூனைக்கு யார் மணி கட்டுவார்கள் என்ற எதிர்ப்பை போல, முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் செய்தித்துறையில் பணியாற்றும் திமுக ஆதரவு அதிகாரிகளுக்கும் இடையே உள்ள தடுப்புச்சுவர் எப்போது உடைக்கப்படும்? கடந்த பத்தாண்டு அதிமுக ஆட்சியில் பாதிக்கப்பட்ட திமுக குடும்பத்து செய்தித்துறை அதிகாரிகளுக்கு இனி வரும் காலங்களிலாவது உரிய முக்கியத்துவம் கிடைக்குமா? என்று கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்கள்.

நீதிக்காக குரல் கொடுப்பவர்களுக்காக மணியை ஓங்கி ஒலிக்கிறது நல்லரசு.