Sat. Apr 27th, 2024

தாரை இளமதி., சிறப்புச் செய்தியாளர்…

ஜனவரி 30 ஆம் தேதி இரவு, விழுப்புரம், கிருஷ்ணகிரி, விருதுநகர், நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஆட்சியராக பணிபுரிந்த இளம் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடம் மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு ஐஏஎஸ் அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனராக பணியாற்றி வந்த முனைவர் V.P..ஜெயசீலன் ஐஏஎஸ்ஸும் பணியிட மாற்றல் பட்டியலில் இடம் பிடித்திருப்பது ஊடகத்துறையில் அதிர்வலைகளை உருவாக்கியிருக்கிறது. 

இளம் ஐஏஎஸ் அதிகாரிகளின் பணியிட மாற்றத்தில், இரண்டு அதிகாரிகளின் பணியிட மாற்றம் ஊடகவியலாளர்களிடம் சூடான விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் இயக்குனரான முனைவர் ஜெயசீலன் ஐஏஎஸ், விருதுநகர் மாவட்ட ஆட்சியராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசில் ஏறக்குறைய 2 ஆண்டுகள் தலைமைச் செயலகத்திலேயே பணியாற்றியவர் ஜெயசீலன் ஐஏஎஸ். இளம் ஐஏஎஸ் அதிகாரிகள் பெரும்பாலும், ஆட்சி தலைமைக்கு நெருக்கமாக இருக்கும் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் தலைமை பதவிக்கு நியமனம் செய்வது என்பது நடைமுறையில் இருந்தது இல்லை.

ஆனால், முதல் அமைச்சரின் செயலாளர்களில் நெம்பர் 1 ஆக இந்த நிமிடம் வரை பணியாற்றி வரும் முதன்மைச் செயலாளர் அந்தஸ்திலான  உதயச்சந்திரன் ஐஏஎஸ்ஸின் அன்பிற்கு பாத்திரமானவர் என்பதால், கோட்டையில் பணியாற்றும் வாய்ப்பு வி.பி.ஜெயசீலன் ஐஏஎஸ்ஸுக்கு கிடைத்தது என்று கூறுவோரும் உண்டு.

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் பத்திரிகையாளர்களுடன் தொடர்பு உடையது என்பதால், இயக்குனரின் செயல்பாடுகளை ஊடகவியலாளர்கள் ஆராய்ந்து பார்ப்பது வழக்கம்.

திராவிட மாடல் ஆட்சி , இரண்டாம் ஆண்டை நிறைவு செய்யும் இந்த நேரத்தில், முந்தைய ஆட்சிக்காலங்களில் இல்லாத வகையில் தமிழ்நாடு அரசின் மக்கள் செய்தித்தொடர்பு துறை புதிய பரிமாணத்தை எட்டியிருக்கிறது என்பது 100 சதவீதம் உண்மை.

ஆட்சியாளர்களின் வெறுப்பை சம்பாதித்து விடக் கூடாது என்ற எண்ணத்திலேயே செய்தி மக்கள் தொடர்புத்துறையின் உயரதிகாரிகள் முதல் கீழ்நிலை அதிகாரிகள் வரை அனைவருமே மிகுந்த எச்சரிக்கையுடன் பணியாற்றுவார்கள்.  

ஆளும்கட்சிக்கு எதிரான விமர்சனங்கள் எழும் நேரங்களில் எல்லாம் செய்தி மக்கள் தொடர்புத்துறை அதிகாரிகள் பதற்றத்தில் ஆழ்ந்துவிடுவது வாடிக்கை.

பொது தளங்களிலும், ஊடக துறைகளிலும் ஒருசேர நற்பெயரை பெறுவது என்பது செய்தி மக்கள் தொடர்புத்துறையினருக்கு  சாத்தியமில்லாத ஒன்றுதான்.

ஆட்சியாளர்களை, முதல் அமைச்சர் அலுவலக செயலாளர்களிடம் நற்பெயரை பெற்ற முனைவர் ஜெயசீலன் ஐஏஎஸ், செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலர்களுக்கும், ஊடகத்துறையைச் சேர்ந்த ஒரு சிலருக்கும் சிம்ம சொப்பனமாகவே இருந்து வந்தார்.

முனைவர் ஜெயசீலன் ஐஏஎஸ்ஸை பணியிடம் மாற்றம் செய்தால்தான் செய்தி மக்கள் தொடர்புத்துறையே மேம்படும் என்ற கோரிக்கை, துறை அதிகாரிகள் மட்டுமின்றி, ஊடகவியலாளர்கள் சிலரும் பகிரங்கமாகவே குரல் கொடுத்தனர்.  

இப்படிபட்ட பின்னணியில், முனைவர் வி.பி. ஜெயசீலன் ஐஏஎஸ், விருதுநகர் மாவட்ட ஆட்சியராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் புதிய இயக்குனராக இளம் ஐஏஎஸ் அதிகாரி டி.மோகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்தவர் டி.மோகன் ஐஏஎஸ்.

ஆளுநரை வரவேற்கும் ஆட்சியர் டி.மோகன் ஐஏஎஸ்…

சென்னையில் இருந்து 160 கிலோ மீட்டர் தொலைவில் விழுப்புரம் மாவட்டம் அமைந்திருந்தாலும், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தோடு நெருங்கிய தொடர்புடைய மாவட்டமாக இருந்து வருகிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசில் விழுப்புரம் மாவட்டத்திற்கு இரண்டு அமைச்சர்கள் கிடைத்திருக்கிறார்கள்.

அரசியல் மற்றும் அரசு நிர்வாகம் ஆகிய இரண்டு துறைகளிலும் பழுத்த அனுபவம் பெற்றவரான முனைவர் க.பொன்முடி, உயர்கல்வித்துறை அமைச்சர்.

மற்றொருவர் சிறுபான்மை சமுதாயத்தின் பிரதிநிதியும் திமுகவின் மூத்த முன்னோடியுமான கே.எஸ்.மஸ்தான், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.

இரண்டு அமைச்சர்களோடு நட்புறவு பாராட்டி, அவர்களின் மனம் கோணாமல் மாவட்ட நிர்வாகத்தை வழி நடத்துவது என்பது அரசு நிர்வாகத்தில் அனுபவம் மிகுந்த ஐஏஎஸ் அதிகாரிகளுக்கே சவாலான ஒன்று.

அதுவும், சராசரி மனிதரின் இயல்பான நிலைக்கு மாறான குணத்தை கொண்டவர் என்று திமுக நிர்வாகிகளே கவலையோடு கூறும் அளவுக்கு புகழ் பெற்று இருக்கும்  அமைச்சர் க.பொன்முடியை சமாளிப்பது என்பது ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எப்போதுமே போராட்டமாக தான் இருந்து வந்திருக்கிறது.

அமைச்சர் க. பொன்முடி, எப்போது கனிவாக பேசுவார்.. எப்போது அனல் கக்குவார் என்பதை புரிந்து கொள்ள முடியாத நிலையில்,

அவரது சொந்த மாவட்டமான விழுப்புரத்தில் ஏறக்குறையாக இரண்டு ஆண்டுகளை எந்தவிதமான சச்சரவும் இல்லாமல் மாவட்ட நிர்வாகத்தை செம்மையாக வழி நடத்தியவர் D.மோகன் ஐஏஎஸ் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

சீனியர் அமைச்சரான க.பொன்முடிக்கு எந்தளவுக்கு மரியாதை வழங்கி வந்தாரோ, அதே அளவுக்கு மற்றொரு அமைச்சரான கே.எஸ்.மஸ்தானுக்கும் உரிய மரியாதையை வழங்கியவர் விழுப்புரம் ஆட்சியர் டி.மோகன் ஐஏஎஸ் என்கிறார்கள் அரசியலுக்கு அப்பாற்பட்ட பொதுமக்கள்.

டி.மோகன் ஐஏஎஸ் அதிகாரியின் குடும்பம் சென்னையில் வசித்து வருவதால், கடந்த ஆறுமாத காலமாக சென்னைக்கு பணிமாறுதல் போராடி வந்துள்ளார்.  

டி.மோகன் ஐஏஎஸ்ஸை விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து மாற்றக் கூடாது என்று க.பொன்முடி, கே.எஸ்.மஸ்தான் ஆகிய இரண்டு அமைச்சர்களுமே முதல்வர் மு.க.ஸ்டாலினிடமும், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு ஐஏஎஸ்ஸிடம் கறாராக கூறியவர்கள் என்கிறார்கள் விழுப்புரம் மாவட்ட அரசு அதிகாரிகள்.

ஆட்சி நிர்வாகத்தை மேம்படுத்தி, பொதுமக்களின் கோரிக்கைக்கு உடனடியாக தீர்வு காண்பதில் முழு மூச்சாக பணியாற்றியவர் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் டி.மோகன் என்பதால்தான், இரண்டு அமைச்சர்களுமே, விழுப்புரம் மாவட்டத்திலேயே ஆட்சியர் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்று விரும்பினார்கள். அதுவும் மூத்த அமைச்சர் க.பொன்முடி, தனது அன்பு பிடியில் ஆட்சியர் மோகன் ஐஏஎஸ்ஸை வைத்திருந்தார்.

விழுப்புரம் மாவட்டத்திலேயே தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் குடும்பச் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, சென்னைக்கு மாறுதலாகி செல்லும் மனநிலையிலேயே இருந்திருக்கிறார் மோகன் ஐஏஎஸ்.

முதல்வர் மு.க.ஸ்டாலினின் அன்பிற்குரிய இரண்டு மூத்த அமைச்சர்களிடம் முழுமையான பாராட்டுகளைப் பெற்ற டி.மோகன் ஐஏஎஸ்ஸை, தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் இயக்குனராக நியமனம் செய்து தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ் பிறப்பித்த உத்தரவு பாராட்டுதலுக்கு உரியது என்கிறார்கள் விழுப்புரம் மாவட்ட ஊடகவியலாளர்கள்.

மூத்த அமைச்சர் க.பொன்முடியின் டார்ச்சரை யாராலையும் தாங்க முடியாது என்று அரசு அதிகாரிகள் மட்டத்தில் உள்ள விமர்சனத்தை முதல்முறையாக உடைத்திருக்கிறார் க.பொன்முடி.

அவரது மனதிற்கு பிடித்த ஐஏஎஸ் அதிகாரியான மோகன், விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து மாறுதலாகி செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனராகி இருப்பது வரவேற்கத்தக்கது என்கிறார்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள மூத்த ஊடகவியலாளர்கள்.

இரண்டு அமைச்சர்களின் எண்ணவோட்டத்திற்கு ஏற்ப விழுப்புரம் மாவட்ட அரசு நிர்வாகத்தை சிறப்பாக நடத்தி வந்த டி.மோகன் ஐஏஎஸ்ஸுக்கு, செய்தி மக்கள் தொடர்புத்துறையின் இயக்குனர் பதவி என்பது முள்கிரீடம் போன்றதுதான்.

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் செயல்பாடுகளை பொதுமக்களின் பார்வைக்கு கொண்டு செல்வது என்பது டி.மோகன் ஐஏஎஸ்ஸுக்கு சிரமமான ஒன்றாக இருக்காது.

ஆனால், செய்தி மக்கள் தொடர்புத்துறையில் திமுக மற்றும் அதிமுக குடும்ப பின்னணியோடு இருக்கும் அதிகாரிகளை, அலுவல் ரீதியாக வழிநடத்துவது என்பது சவாலான ஒன்றாகதான் இயக்குனர் டி.மோகன் ஐஏஎஸ்ஸுக்கு இருக்கும் என்கிறார்கள்.

முதல்வரை வரவேற்கும் ஆட்சியர் டி.மோகன் ஐஏஎஸ்..

செய்தி மக்கள் தொடர்புத்துறையில் கூடுதல் இயக்குனர்கள், இணை இயக்குனர்கள், துணை இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள், மக்கள் தொடர்பு அலுவலர்கள் என நூற்றுக்கணக்கில் இருப்பவர்களை, ஒரே சிந்தனையில் செயலாற்ற வைக்க வேண்டிய மாபெறும் பொறுப்பு, இயக்குனர் டி.மோகன் ஐஏஎஸ்ஸுக்கு மிகப்பெரிய சவாலான பணிதான்.  

மாவட்ட நிர்வாகத்தை செம்மையாக வழிநடத்தி, பொதுமக்களிடம் நற்பெயரை பெற்ற இளம் ஐஏஎஸ் அதிகாரி D.மோகன், செய்தி மக்கள் தொடர்புத்துறையில் நடைபெறும் உள்ளடி வேலைகளை எல்லாம் தகர்த்து, திராவிட மாடல் ஆட்சியின் புகழுக்கு மேலும் புகழ் சேர்க்கும் வகையில் செயலாற்றி வெற்றி காண வேண்டும் என நல்லரசு தமிழ் செய்தி மனதார வாழ்த்துகிறது…