Sun. May 5th, 2024

சேலம் மாநகராட்சி மன்றக் கூட்டம் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் இன்று காலை நடைபெற்றது.

மாதத்திற்கு ஒருமுறை என்ற வழக்கப்படி இன்று காலை மாநகராட்சி மன்றக் கூட்டம் தொடங்கிய சில நொடிகளிலேயே அனல் காற்று வீசியதைக் கண்டு மாநகராட்சி ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பதற்றத்தில் ஆழ்ந்தனர்.

அரசியல் ரீதியான கருத்து மோதல்கள் இருக்கும்.. சுடச்சுட பிரேக்கிங் நியூஸ் கொடுக்கலாம் என்று ஆர்வமாக காத்திருந்த காட்சி ஊடகவியலாளர்களுக்கு பெருத்த ஏமாற்றமே ஏற்பட்டிருக்கிறது.

வழக்கம் போல அச்சு ஊடகவியலாளர்கள், மாமன்ற உறுப்பினர்களின் ஆவேச வாதங்களை குறிப்பு எடுத்து கொண்டிருந்தாலும் ஊடகவியலாளருக்கு விடுத்த மிரட்டல்களை பதிவு செய்து, பொதுமக்களின் பார்வைக்கு கொண்டு வருவார்களா? என்பதும் சந்தேகமே…

கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி சேலம் மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் நடைபெற்ற விவாதத்தை நல்லரசு யூ டியூப்பில் விரிவாக வெளியிட்டிருந்தோம்.

அதை இதுவரை பார்க்காதவர்களுக்காக மீண்டும் ஒருமுறை பதிவேற்றுகிறோம்..

சேலம் மாநகராட்சி மன்ற கவுன்சிலர்களில் மானம்,ரோஷம், மாண்பு என அனைத்து நற்பண்புகளையும் ஒருங்கே பெற்றிருப்பவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாமன்ற உறுப்பினர் இமயவரம்பன்தான். இவர், வழக்கறிஞரும் கூட..

அண்மையில், சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு கொடூர நிகழ்வான தீண்டாமை கொடுமை பற்றி, இன்றைய தினம் நடைபெற்ற மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் ஆவேசமாக முழங்கவுள்ளார் வி.சி.க கவுன்சிலருமான வழக்கறிஞருமான இமயவரம்பன் என்று வி.சி.க நிர்வாகிகள் நல்லரசுக்கு அதிகாலையிலேயே தகவல் தெரிவித்து இருந்தனர்.

குறிப்பு: தயவுசெய்து பெண்கள், குழந்தைகள் கீழே உள்ள வீடியோ பதிவை பார்க்க வேண்டாம்.. ஆபாசமான வார்த்தைகள் நிரம்பி இருக்கின்றன…

குறிப்பு: தயவுசெய்து பெண்கள், குழந்தைகள் கீழே உள்ள வீடியோ பதிவை பார்க்க வேண்டாம்.. ஆபாசமான வார்த்தைகள் நிரம்பி இருக்கின்றன…

சேலம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட திருமலைகிரி கிராமத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கோயிலுக்குள் நுழைந்துவிட்டார் என்பதற்காக, திருமலைகிரி ஊராட்சி திமுக தலைவரும் சேலம் தெற்கு ஒன்றிய செயலாளருமான மாணிக்கம் என்பவர், பொதுவெளியில் அநாகரிகமாக நடந்து கொண்ட நிகழ்வு, வீடியோவாக சமூக ஊடகங்களில் தீயாக பரவி, சமூக ஆர்வலர்களை கொந்தளிக்க வைத்தது.

திராவிட மாடல் ஆட்சியை உயிர் மூச்சாக கொண்டிருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, மாணிக்கத்தின் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து விட்டது.

திருமலைகிரி போல, வேங்கைவயல் போல, தமிழகத்தின் பல பகுதிகளில் தலை தூக்கிக் கொண்டிருக்கும் தீண்டாமை கொடுமைக்கு எதிராக இன்றைய சேலம் மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் (ஜன.31) ஆவேசமாக வி.சி.க. கவுன்சிலர் இமயவரம்பன் முழங்குவார் என்ற எதிர்பார்ப்புடன் நல்லரசு இணையதளத்தின் ஊடகவியலாளர் இன்று மாநகராட்சி மன்றக் கூட்டத்திற்கு நேரில் சென்றிருந்தார்.

இன்று காலை கூட்டம் தொடங்கியவுடனேயே, வழக்கம் போல முதல் நபராக எழுந்த வி.சி.க.கவுன்சிலர் இமயவரம்பன்., தமிழகத்தில் தலை தூக்கிக் கொண்டிருக்கும் தீண்டாமை கொடுமைகளுக்கு விசிக சார்பில் கண்டனம் தெரிவித்து பேசுவார் என்று நல்லரசு காத்திருந்த நேரத்தில், நல்லரசு யூ டியூப் சேனலையே குற்றவாளி கூண்டில் ஏற்றும் வகையிலும், நல்லரசு ஊடகவியலாளருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்றும் வழக்கறிஞர் இமயவரம்பன் ஆவேசம் காட்டியதை கண்டு நல்லரசு ஊடகவியலாளர் அதிர்ச்சியடைந்துவிட்டார்.

ஆவேசம் காட்டிய விசிக கவுன்சிலர் இமயவரம்பன்…

மேயரின் மாண்பிற்கு இழுக்கு வந்துவிட்டது. சேலம் மாநகராட்சிக்கு அவமானம் ஏற்பட்டு விட்டது என்று பொங்க தொடங்கினார் இமயவரம்பன். அதை கேட்ட நல்லரசு ஊடகவியலாளருக்கு வியர்த்துவிட்டது. (களத்திற்கு புதியவர்). வாத்து போல நடந்து அரங்கிற்கு வெளியே வந்து ஊடகவியலாளர் தகவலை தெரிவிக்க, அங்கேயே காத்திருந்து, கூட்டம் நிறைவுற்றவுடன் வெளியே வரவும் என்று அறிவுரை கூறப்பட்டது.

திமுக மேயரின் ஆணாதிக்கத்தை எதிர்க்கும் ஒற்றை மனுஷி என்ற தலைப்பில் நல்லரசு வீடியோவில் விமர்சனம் செய்யப்பட்டிருப்பதை தனக்கு ஏற்பட்ட அவமானமாக கருதியிருக்கிறார் கவுன்சிலர் இமயவரம்பன் என்பதை அவர் வெளிப்படுத்திய ஒவ்வொரு வார்த்தைகளும் வெளிப்படுத்துகிறது.

திமுக கவுன்சிலர்களுக்கு ஏற்படாத மனவருத்தம் விசிக கவுன்சிலர் இமயவரம்பனுக்கு ஏற்பட்டிருப்பதுதான் ஆச்சரியமான ஒன்று..

மனித பிறப்பில் ஏற்றத்தாழ்வு இல்லை என்பதை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்து, விழிப்புணர்வு ஏற்படுத்த கிடைத்த அரிய வாய்ப்பை தவறவிட்டுவிட்டு, நல்லரசுவில் ஒரு மாதத்திற்கு முன்பு வெளியான செய்தி ஒன்றை, அனைத்து கவுன்சிலர்களே மறந்திருந்த நேரத்தில், திமுக மேயர் ராமச்சந்திரன் மீதான தனது அதீத விசுவாசத்தை வெளிப்படுத்தி கொள்ளும் வகையில் விசிக கவுன்சிலர் இமயவரம்பன், மன்றக் கூட்டத்தை பயன்படுத்திக் கொண்டதை கண்டு சேலம் மாவட்ட விசிக நிர்வாகிகளே மனம் நொந்து போய்விட்டார்கள்.

வி.சி.க. கவுன்சிலர் இமயவரம்பன், வழக்கறிஞர் தொழிலில் நன்கு அனுபவமிக்கவராக இருந்து வரும் நிலையில், ஊடகவியலாளர்களுக்கு எதிராக மாநகராட்சி மன்றக் கூட்டங்களிலோ, சட்டப்பேரவையிலோ பேசுவது, எச்சரிக்கை விடுப்பது போன்ற அறமற்ற செயல்களை அனுபவம் மிகுந்த, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட எந்தவொரு நாணயமிக்க அரசியல் பிரமுகர்களும் செய்யமாட்டார்கள் என்பதை உணர்ந்திருப்பவராக தெரியவில்லை.

உருட்டல், மிரட்டல்களுக்கு எல்லாம் ஊடகத்துறையை மட்டுமே வாழ்வியலாக கொண்ட ஊடகவியலாளர்கள் ஒருபோதும் பயப்படமாட்டார்கள் என்பதை வழக்கறிஞர் இமயவரம்பனுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

விமர்சனங்களை உள்வாங்கி திருத்திக் கொள்ள வேண்டியிருப்பின் திருத்திக் கொள்வதற்குதான் முன்வருவார்களே தவிர, தனக்கோ, தாங்கள் சார்ந்திருக்கும் கட்சிக்கோ அவப்பெயரை தேடி தருவதாக இருந்தாலும் கூட, ஜனநாயகம் மிகுந்த மன்றங்களை ஒருபோதும் அறத்தின் பால் நடந்து கொள்ளும் அரசியல் பிரமுகர்கள் பயன்படுத்திக் கொள்ள மாட்டார்கள்.

ஆனால், வழக்கறிஞர் இமயவரம்பன் போல, விமர்சனங்களை கண்டு கொந்தளிக்கும் மாமன்ற உறுப்பினர்கள் சேலம் மாநகராட்சியில் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையிலும் தரமான ஒரு நிகழ்வை, தனது கடுமையான எதிர்ப்பின் மூலம் நிலைநாட்டியிருக்கிறார் ஆளும்கட்சி மன்றத் தலைவர் திரு.ஜெயகுமார்.

ஊடகங்கள் சுட்டிக்காட்டும் விமர்சனங்களை ஆராய்ந்து, சுட்டிக்காட்டப்படும் குறைகளை திருத்தி கொள்ள வேண்டும். அதைவிட முக்கியமாக, பொதுசேவையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அரசியல் நிர்வாகிகள், தங்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகளே வராத வகையிலும் நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறிய திரு.ஜெயகுமார், ஆளும்கட்சியான திமுகவுடன் தோழமையில் இருந்து கொண்டிருக்கிறது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. அந்த கட்சியின் முக்கிய நிர்வாகியாக சேலத்தில் இருக்கும் கவுன்சிலர்- வழக்கறிஞர் இமயவரம்பன், திமுக தலைவருக்கு எதிராக பேசிய அவதூறு கருத்துகள் அனைத்தும் தன்னிடம் ஆதாரமாக இருப்பதாகவும் கூறி சேலம் மாநகராட்சி மன்ற கூட்டத்தில் அனல் தெறிக்க ஆவேசம் காட்டினார்.

ஜனநாயகத்தை காப்பாற்றிய திமுக ஆளும்கட்சி மன்றத் தலைவர் திரு.ஜெயகுமார்.

நல்லரசு வெளியிட்ட வீடியோ குறித்தே 10 நிமிடத்திற்கு மேலாக காரசாரமாக விவாதம் நடைபெற்றிருக்கிறது.

வி.சி.க கவுன்சிலர் இமயவரம்பனுக்கு ஆதராக, எஞ்சிய கவுன்சிலர்கள் குரல் கொடுக்காததால், நல்லரசு இணையதளத்திற்கு எதிராக விசிக கவுன்சிலர் இமயவரம்பன் முன்வைத்த கருத்துகள், நீர்க்குமிழி போல, அற்ப சந்தோஷமாகி மரணித்துவிட்டது.

நல்லரசுவிற்காக பேசாமல், ஜனநாயகத்தை காப்பாற்றும் வகையில் ஓங்கி குரல் கொடுத்த மாநகராட்சி ஆளும்கட்சித் தலைவர் திரு.ஜெயகுமார் அவர்களுக்கு நல்லரசு தமது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது…