டிசம்பர் 31 ஆம் தேதி இரவு திமுக பொதுக்கூட்டத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த திமுக இளைஞரணி நிர்வாகிகள் இரண்டு பேரை, 3 நாட்கள் கடந்த பிறகுதான் சென்னை மாநகர காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்திருக்கின்றனர். அதுவும், முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த விவகாரத்தில் தலையிட்ட பிறகுதான், தமிழகத்தின் தலைநகரான சென்னையில், பெண் காவலருக்கு ஏற்பட்ட அநீதிக்கே சென்னை போலீசார் நீதி தேடி இருக்கிறார்கள் என்றால் தமிழக காவல்துறையின் கடமையுணர்வு எந்தளவுக்கு தரம் தாழ்த்திருக்கிறது என்பதை வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறது….
இதன் பின்னணியை விரிவாக வாசிப்போம்…
சாலையில ஒரு குற்றம் நடந்தால், பாதசாரியாக செல்கிற ஒரு நபர், குற்றம் செய்பவரை தட்டி கேட்பதை எல்லோருக்கும் அனுபவமாக இருந்திருக்கலாம்.
அடுத்து என்ன நடக்கும் என்று அவருக்கு தெரியாது.
ஆனாலும் கண் முன்பு நடக்கும் அநியாத்தை அந்த நபர் தட்டிக் கேட்பார்.
கண் முன்பு நடக்கிற அராஜகத்தை பார்க்கிற போது சாதாரண மனிதருக்கே கோபம் வருகிறது.
தன்னுடைய மனதில் எழும் கோபத்தை அந்த நபர் துணிந்து வெளிப்படுத்துகிறார்.
ஆனால், சகல அதிகாரமும் வைத்து இருக்கிற காவல்துறை அதிகாரிகள், குற்றச் செயல்களில் ஈடுபடுகிறவர்களை பார்த்து பயப்பட்டால், தமிழ்நாட்டில பொதுமக்கள் நிம்மதியாக நடக்க முடியுமா ?
காவல்துறையில பணியாற்றுகிற சாதாரண காவலருக்F 60 ஆயிரம் ரூபாய்க்கு மேல் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், குடியிருப்பதற்கு அரசாங்க வீடும் குறைந்த வாடகையில் வழங்கப்படும் நடைமுறையும் இருக்கிறது.
கடைநிலை ஊழியரான காவலருக்கே அரசாங்கம் பல சலுகைகளை வழங்குகிற போது, அடுத்தடுத்த நிலையில் உள்ள உயரதிகாரிகளாகிய
துணை ஆய்வாளர்,
காவல் ஆய்வாளர்,
உதவி ஆணையர்,
துணை ஆணையர்,
இணை ஆணையர்,
கூடுதல் ஆணையர்,
என்ற நிலையிலும் அதற்கு மேல் உச்சபட்ச பதவியாக, சென்னை மாநகர காவல்துறை ஆணையராக இருக்கிற காவல் அதிகாரிக்கு இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பளம், தனி பங்களா, இல்லம் மற்றும் அலுவலகத்திற்கு அனைத்து விதமான உதவிகளையும் செய்வதற்கு பணியாளர்கள், நினைத்த நேரத்தில் விமானத்தில் செல்லலாம் என எத்தனையோ சலுகைகள் கிடைத்து வருகின்றன.
குறிப்பாக, சட்டம் ஒழுங்கு பிரிவில் ஒரு காவல்துறை அதிகாரி, தொடர்ந்து பணியாற்றி வருகிறார் என்றால், நேர்மையான அதிகாரி என்று பெயர் எடுத்திருந்தாலும்கூட ஓய்வு பெறும் காலத்தில பல கோடி ரூபாய் அளவுக்கு அந்த அதிகாரி சொத்து சேர்த்து வைத்திருக்கிறார் என்ற செய்தியை எல்லாம் வாசிக்க முடிகிறது.
இப்படி சகல அதிகாரம், செல்வாக்கு காவல்துறையில் இருக்கும் அதிகாரிகளுக்கு கிடைத்து கொண்டிருக்கிற போது கண் முன்பாக நடக்கிற அநியாயத்தை தட்டிக் கேட்கிற தைரியம் அவர்களுக்கு இல்லை என்றால், அவர்கள் எதுக்காக காவல்துறையில் ஒட்டிக் கொண்டு இருக்க வேண்டும்.
இப்படிபட்ட கேள்வி, பொதுமக்கள் மத்தியில் இருந்து மீண்டும் ஆவேசம் பொங்க எழும் வகையில் ஒரு நிகழ்வு, சென்னையில் நடந்திருக்கிறது.
சென்னை விருகம்பாக்கத்தில் டிசம்பர் 31 ஆம் தேதி இரவு திமுக சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா நிறைவுக் கூட்டம் நடைபெற்றது. இதில், திமுக மகளிரணி செயலாளர், துணை பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்பி, தமிழச்சி தங்க பாண்டியன் எம்பி உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.
இதனையொட்டி, பெண் காவலர்கள் உள்பட நூற்றுக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அப்போது, மேடையின் அருகே பெண்கள் பகுதியில் பாதுகாப்பிற்காக நின்றுக் கொண்டிருந்த பெண் காவலர்களில் ஒருவருக்கு திமுக நிர்வாகிகள் பிரவீன், ஏகாம்பரம் ஆகிய இருவரும் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார்கள். அவர்களின் அராஜகத்தை கண்டு அதிர்ச்சியடைந்த பெண் காவலர், கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததுடன் அங்கிருந்து அகன்று சென்று இருக்கிறார். அப்போதும் விடாமல் இரண்டு நிர்வாகிகளும் தொடர்ந்து பாலியல் வன்முறையில் ஈடுபட, அந்த பெண் காவலர் கூச்சல் போட்டிருக்கிறார்.
அதை கேட்டு அருகில் இருந்த ஆண் காவலர்கள் இருவரையும் பிடிக்க முயன்ற போது, அவர்கள் தப்பி ஓட்டம் பிடித்திருக்கிறார்கள். இருப்பினும் விரட்டிச் சென்ற காவலர்கள், ஒருவரை பிடித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்திற்கு துணிச்சலாக அழைத்துச் சென்று விசாரணை நடத்தியிருக்கிறார்கள்.
புத்தாண்டு கொண்டாட்டத்தில் சென்னை மாநகரமே திளைத்துக் கொண்டிருந்த டிசம்பர் 31 ஆம் தேதி நள்ளிரவில் விருகம்பாக்கம் காவல்நிலையத்தில், விருகம்பாக்கம் திமுக எம்எல்ஏ பிரபாகர் ராஜா மற்றும் திமுக நிர்வாகிகள், குற்றவாளிகளுக்கு ஆதரவாக நின்று காவல்துறையினரிடம் சண்டை போட்டு காவல்துறை பிடியில் இருந்த ஒருவரை அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.
மறுநாள் ஜனவரி 1.
புத்தாண்டு வழிபாடு, பிரமுகர்களுக்கு மரியாதை செலுத்துதல் போன்ற நிகழ்வுகளால் இரண்டு திமுக பிரமுகர்களின் அராஜகம், வெளியுலகிற்கு கசியவில்லை. ஆனால், மறுநாளான ஜனவரி 2 ஆம் தேதி ஊடகவியலாளர்களுக்கும், சமூக ஊடகங்களில் துடிப்பாக இருப்பவர்களுக்கும் பெண் காவலருக்கு இழைக்கப்பட்ட கொடுமை பற்றிய தகவல் கிடைக்கிறது.
இந்த செய்தி, உடனடியாக சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்டவுடன், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்எல்ஏ, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள், திமுக அரசையும் முதல்வர் மு.க.ஸ்டாலினையும் கடுமையாக சாடி அறிக்கை வெளியிட்டார்கள்.
அதன் பிறகும் கூட சென்னை மாநகர காவல்துறை விழித்துக் கொண்டோ, உஷாராகியோ, அராஜக செயலில் ஈடுபட்ட ஆளும்கட்சியைச் சேர்ந்த திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் பிரவீன், ஏகாம்பரம் ஆகிய 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைக்க துணிவு காட்டவில்லை.
ஜனவரி 3 ஆம் தேதியும் பெண் காவலருக்கு எதிராக நடத்தப்பட்ட கொடூரம் பற்றி சமூக ஊடகங்களில், பொது தளங்களில் சூடான விவாதம் நடத்தப்பட்டு வந்தது.
பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூர நிகழ்வு நடந்து 40 மணி நேரம் ஆன பிறகும் கூட குற்றவாளிகள் இரண்டு பேரையும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று துளியளவு ஆத்திரம்கூட, சென்னை காவல்துறையில் பணியாற்றி வருகிற பத்துக்கும் மேற்பட்ட உயர் அதிகாரிகளுக்கு வரவில்லை.
இதனைப் பார்த்து ஆத்திரமடைந்த சமூக போராளிகள்,
அநாகரிகமாக நடந்து கொண்டவர்களை கைது செய்ய முடியவில்லை என்றால், எதுக்கு காக்கிச் சட்டை போடனும், மக்கள் வரிப்பணத்தை சம்பளமாக எதுக்கு வாங்கனும்.. ஆளும்கட்சி எம்எல்ஏக்களுக்கும், அமைச்சர்களுக்கும் பிரைவேட் செக்யூரிட்டியாக போயிட வேண்டியதுதானேன்னு என்று சமூக ஊடகங்களில் சூடாக சாடினார்கள்.
அவற்றை ஒருமுறை வாசிக்க நேர்ந்தாலே, அவர்களுக்கு ரத்தம் நிச்சயம் கொதிக்கும்..
ஆனால், தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் காவல்துறையில் பணியாற்றுகிற காவல்துறை ஆய்வாளர் முதல் காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் ஐபிஎஸ் வரைஒருவருக்கும் ரோஷம் வரவில்லை. இந்த நேரத்தில், போராளிகளின் கோபத்தை மேலும் அதிகரிக்க செய்யும் வகையில், ஒட்டுமொத்த காவல்துறைக்கே தலைமை தாங்கி கொண்டிருக்கும் டிஜிபி சைலேந்திரபாபு ஐபிஎஸ், காவல்துறையில் பணியாற்றுகிறவர்கள் சவால்களை எதிர்கொள்கிற மனவலிமை பெற்று இருக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கிய செய்தி, ஜனவரி 4ம் தேதி நாளிதழ்களில் வெளியானது. .
இன்னும் 6 மாதத்தில் காவல்துறை பணியில் இருந்து ஓய்வு பெற போகிறார் சைலேந்திரபாபு ஐபிஎஸ். இந்த நேரத்தில் கூட அவருக்கு துணிச்சல் வரவில்லை என்றும் கடமையை செய்யாத காவல்துறை அதிகாரிகளை தண்டித்து, குற்றவாளிகளை சிறையில் தள்ளாமல் அவருமே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது, பொதுமக்களிடம் கோபத்தை அதிகமாக்கிவிட்டது.
காவல்துறை அதிகாரிகள் வீட்டில் பெண் குழந்தைகளே இருக்க மாட்டார்களா? ஒவ்வொரு வீட்டிலும் மனைவி என்ற அந்தஸ்தில் பெண்கள் இருப்பார்கள் தானே? காவலர்கள் வீட்டில் இருக்கும் ஒருத்தருக்கு இப்படியொரு பாலியல் சீண்டல் கொடூரம் நடந்து இருந்தால், அதை பார்த்துக்கிட்டு சும்மா தான் இருப்பார்களான்னு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருப்பது தமிழக காவல்துறைக்கு அவமானம் இல்லையா?
இன்றைக்கு திமுக ஆட்சியில இருக்குது. முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றவாளிகளை காப்பாத்துறாருன்னு ஒரு பக்கம் பேச்சு எழுந்திருக்கிறது.
இதற்கு முன்பு அதிமுக ஆட்சியில இருந்துது.. அப்ப இருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றத்தில் ஈடுபட்ட அதிமுககாரங்களை காப்பாற்துறாருன்னு பேச்சு வந்தது.
எந்த ஆட்சி நடைபெற்றாலும், கண் முன்னே நடக்கிற குற்றத்தை தட்டிக் கேட்கிற துப்பு போலீஸாருக்கு இருக்க வேண்டுமா, வேண்டாமா..
அஸிஸ்டென்ட் கமிஷனர், டெப்புடி கமிஷனர், ஜாயின்ட் கமிஷனர், அடிஷனல் கமிஷனர், சிட்டி போலீஸ் கமிஷனர்னு இத்தனை அதிகாரிகள் இருக்கிறார்கள்..
இவர்களில் ஒரு அதிகாரிக்கு கூடவா துணிச்சல் இருக்காது.. என்னடா பண்ணுவாங்க.. டிரான்ஸ்பர்தானே செய்வாங்கன்னு சொல்லிட்டு, பெண் போலீஸ் மீது கை வைத்த பிரவீனையும், ஏகாம்பரத்தையும் உடனே ஜெயில்ல போட்டு இருந்தால் அந்த போலீஸ் அதிகாரியை நாட்டு மக்கள் கொண்டாடி இருக்க மாட்டார்கள்.
அதைவிட பெருமையாக, பாதிக்கப்பட்ட பெண் போலீஸும், ஒட்டுமொத்த பெண் போலீசாரும், ரோஷத்தோடு நடவடிக்கை எடுத்த போலீஸ் அதிகாரியை கடவுள் அளவுக்கு வாழ்நாள் முழுவதும் வணங்கி வருவார்கள். .
கண் முன்னால், காவல்துறையில் வேலை பார்க்கிற பெண் போலீசுக்கு ஒரு அசிங்கம் நடக்கிறது.. பொதுமக்கள் மத்தியில தப்பு செய்யறவனை உதைச்சு ஜெயிலில் தள்ள முடியவில்லை என்றால், இவர்கள் எல்லாம் யாருக்கான அதிகாரிகள்.. பொதுமக்களை பாதுகாக்கிற அதிகாரிகளாக இவர்கள் இல்லை என்றால் எதுக்கு காவல்துறை இருக்கிறது?.
மானம், ரோஷத்தை எல்லாம் தள்ளி வைத்துவிட்டு, கடமையை பற்றி எல்லாம் யோசிக்காமல், ஆட்சியாளர்களுக்கு சல்யூட் அடிக்கிறவங்கதானேன்னு சூடாக மக்கள் கேட்கிற கேள்வி எல்லாம் போலீஸ் அதிகாரிகள் காதிலேயே விழாது போல.
ஆளும்கட்சி எம்எல்ஏவை பார்த்து நடுக்குறது. அமைச்சர் முன்னால் அடிமை போல நிக்கிறது.. இப்படியெல்லாமா காவல்துறை பயிற்சியில் சொல்லி கொடுத்திருக்கிறார்கள். ..
ஆட்சிக்கு வருகிறவர்கள் 5 வருடம் கடந்தால், திரும்பி வீட்டுக்கு போயிடுவார்கள். .
ஆனால், பணியில் சேர்ந்த நாள் முதலாக 30 வருடங்களுக்கு மேலாக மக்கள் வரிப்பணத்தை சம்பளமாக வாங்கி, அதிகாரத்தையும் சொத்தையும் அனுபவிக்கிற காவல்துறையில் இருக்கிற அதிகாரிகளில் ஒருத்தருக்கு கூட மனசாட்சியும், துணிச்சலும் இல்லை என்றால், இவர்களை நம்பி எப்படி பெண் பிள்ளைகள் ரோட்டில் நடப்பார்கள் என்று பொதுமக்கள் கேட்கிற ஆவேச கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை.
பத்துக்கு மேற்பட்ட உயர் அதிகாரிங்கள், ஆயிரத்திற்கு மேற்பட்ட போலீசார் இருக்கிற சென்னையிலேயே, அதுவும் காவல்துறையில் இருக்கிற பெண் போலீசாருக்கே பாதுகாப்பு இல்லை என்றால்., உங்கள் தலைமையில் எப்படி பெண் போலீசார் பாதுகாப்பாக வேலை பார்ப்பார்கள். நம்மை காப்பாற்றுகிற சக்தி, காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு இல்லை என்றால், கீழ்நிலையில் உள்ள காவல்துறை அலுவலர்கள், பெண் காவலர்கள் மனமுவந்து எப்படி மரியாதை கொடுப்பார்கள்.
இப்படி கலவையான கொந்தளிப்பு பெண் போலீசாரிடமும், பொதுமக்களிடமும் நிலவி கொண்டிருந்த நேரத்தில், ஜனவரி 4 ஆம் தேதி கிடைத்த தகவல் ஒன்று, இருதரப்பினர் மத்தியிலும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்தது.
ஜனவரி 3 ஆம் தேதி, போதைப் பொருட்கள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. அப்போது, போலீஸ் டிஜிபி சைலேந்திர பாபு ஐபிஎஸ், சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ஐபிஎஸ் ஆகியோரை பார்த்து, பெண் போலீஸுக்கு பாலியல் சீண்டல் கொடுத்த திமுக நிர்வாகிகளை ஏன் கைது செய்யவில்லை என்று மனம் வெறுத்துப் போய் கேட்டிருக்கிறார்.
அதன் பிறகுதான், திமுக இளைஞர் அணி நிர்வாகிகளான பிரவீன், ஏகாம்பரத்தை செவ்வாய் கிழமை (ஜனவரி 3) நள்ளிரவில் விருகாம்பாக்கம்போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து இருக்கிறாகள்.
இப்படி பின்னணியால் எழுகிற பொதுவான கேள்வி என்னவென்றால்,
சென்னையில், அதுவும் விருகம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனை நிர்வாகம் செய்யும் காவல்துறை அதிகாரிகளுக்கும் அவர்களுக்கு உத்தரவு போடுகிற உயர் அதிகாரிகளுக்கும் உண்மையிலேயே வீரம் இருக்கிறதா, இல்லையா என்பதுதான்…
ஏசி, டிசி, ஜேசி, அடிஷனல் கமிஷனர், போலீஸ் கமிஷனர் போட்டோவை எல்லாம் போட்டு கடமையை தவறிய அதிகாரிகள் இவர்கள்தான் என்று அடையாளப்படுத்தியிருக்க நல்லரசுக்கு தைரியம் இருக்கிறது. அதுதான் ஊடக தர்மமும் கூட. ஆனால், காவல்துறையினர் வீட்டிலும் பெண்கள் இருப்பார்கள்.. அவர்களுக்கு அவமானத்தை தேடி தந்திவிடுவோம் என்ற பொறுப்புணர்ச்சியோடு, தவிர்க்கிறோம்.
பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு கூட, காவல்துறை பணியில் உலகளவில் சிறந்து விளங்கி கொண்டிருக்கும் ஸ்காட்லாந்து போலீசாருக்கு இணையான புகழ், தமிழக காவல்துறைக்கு இருந்து கொண்டிருந்தது.
அதனை குழி தோண்டி புதைத்து மட்டுமல்லாமல், கடமையுணர்வே தங்களுக்கு இல்லை என்பதை பறைசாற்றும் விதமாகவே தமிழ்நாடு காவல்தறை தொடர்ந்து தன்னை வெளிப்படுத்திக் கொள்வது, கண்ணியமான காக்கிச்சட்டைக்கே மிகவும் அவமானத்தை தேடித்தரும் செயலாகும்.
தமிழக காவல்துறை அதிகாரிகளை பிடித்திருக்கும் அடிமை குணம் எப்போது விலகும்?
நாட்டின் எஜமானர்களான பொதுமக்களிடம் துளியளவு கூட நம்பிக்கை இல்லை…