Fri. Mar 29th, 2024

பிரதமர் மோடிக்கு ஒன்பது கிரகங்களும் உச்சத்தில் இருக்கிறது.

ஒருவரின் ஜாதகத்தில் ஒன்பது கிரகங்களும் உச்சத்தில் இருந்தால் அவரின் வாழ்க்கையே கொண்டாட்டமாக தான் இருக்கும்.

சனிப் பெயர்ச்சியோ, குரு பெயர்ச்சியோ, ராகு கேது பெயர்ச்சியோ, ஒன்பது கிரகங்களும் உச்சத்தில் இருப்பவரை ஒன்றும் செய்து விட முடியாது என்று ஜோதிடர்கள் உரக்க கூறுவதை கேட்டிருப்போம்.

அறிவியல் பூர்வமாகவோ, பகுத்தறிவின் அடிப்படையிலோ ஜோதிடர்களின் கூற்றை நம்ப மறுப்பவர்களையும் வாழ்நாளில் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

ஆனால் நாட்டில் நடப்பதை வைத்து பார்க்கும் போது ஜோதிடர்கள் கூற்றை நம்பாமலும் இருக்க முடியவில்லை.

ஒன்பது கிரகங்களும் உச்சத்தில் இருப்பவராக இன்றைய இந்தியாவில் இருக்கும் ஒரே நபர், நம்முடைய பிரதமர் மோடியாகதான் இருக்க முடியும்.

இந்தியா சுதந்திரமடைந்து 75 ம் ஆண்டு விழாவை கொண்டாடி கொண்டிருக்கும் இந்த நேரத்தில், கடந்து போன 75 ஆண்டுகளிலும் பிரதமர்களாக பதவி வகித்தவர்களில் ஒருவர் கூட பிரதமர் மோடி போல ராஜ வாழ்க்கை வாழ்ந்திருக்க மாட்டார்கள் என்றே சொல்லலாம்.

பிரதமர் அலுவலகத்திலும் நாடாளுமன்ற கூட்டத் தொடர்களிலும்தான் நரேந்திர மோடிக்கு முன்பிருந்த பிரதமர்கள் பெரும்பான்மையான நாட்களை, நேரத்தை பயன்படுத்தி இருப்பார்கள்.

ஆனால், இரண்டாயிரத்து 14 ஆம் ஆண்டில் பிரதமர் பதவியில் அமர்ந்த நரேந்திர மோடி, தேர்தல் பிரசாரங்கள், பாஜக பொதுக் கூட்டங்கள், ரிஷிகள், சாமியார் மாநாடுகள், கோயில் தரிசனம் என

கடந்த 8 ஆண்டுகளில் பெரும்பான்மையான நேரத்தை செலவழித்து இருக்கிறார் பிரதமர் மோடி என்பதுதான் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளவர்களின் பெரும் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.

இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மைதான் என்றுசொல்லும் அளவிற்கு தான் கடந்த 8 ஆண்டு ஆட்சி காலம் அமைந்திருக்கிறது. இதற்கான ஆதாரங்களை தேடி, கடந்த 8 ஆண்டுகளையும் ஆராய்ந்து பார்ப்பதற்கு பதிலாக இரண்டாயிரத்து 22 ஆம் ஆண்டில் கரைந்து போன நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பிரதமர் மோடியின் தினசரி நடவடிக்கைகளை ஆராய்ந்தாலே போதும்.

பிரதமர் மோடி, டெல்லியில் தமது அலுவலகத்தில் அமர்ந்து நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்டதை விட அதிக நாட்கள், அதாவது மாதத்தின் பெரும்பான்மையான நாட்கள், பாஜக பொதுக்கூட்டங்களிலும், மாநில தேர்தல் பிரசாரங்களிலும் தான் செலவழித்திருக்கிறார் என்பது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது.

நவம்பர் மாதத்தில் ஹிமாச்சல் பிரதேச மாநில சட்டசபைக்கும், டிசம்பர் மாதத்தில் குஜராத் மாநில சட்டசபைக்கும் தேர்தல் நடந்தது.

2022 நம்பர் மாதம் 5 ஆம் தேதி ஹிமாச்சல் மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் பிரதமர் மோடி.

மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஹிமாச்சல் மாநிலத்தில் நவம்பர் 9 ஆம் தேதி பிரதமர் மோடி வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

 மாநிலத்தில் சட்டசபை தொகுதிகளின் மொத்தம் எண்ணிக்கையே 68 தான். இந்த மாநிலத்திற்கு இரண்டு முறை சென்ற பிரதமர் மோடி, முக்கியமாக பல்வேறு நகரங்களில் தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டார்.

நவம்பர் 5 ஆம் ஹிமாச்சல் மாநிலத்திற்கு தேர்தல் பிரசாரத்திற்காக சென்ற பிரதமர் மோடி, அடுத்த நாள் குஜராத் மாநிலத்திலும் பிரசாரம் மேற்கொண்டார்.

நவம்பர் 11 மற்றும் 12 ஆகிய நாட்களில் கர்நாடகம், தமிழ்நாடு, ஆந்திரம், தெலுங்கானா என 4 மாநிலங்களில் அரசு மற்றும் பாஜக பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.

நவம்பர் 14 ஆம் இந்தேனேசியா சென்ற பிரதமர் மோடி, நான்கு நாட்களுக்குப் பிறகு டெல்லி திரும்பினார்.

நவம்பர் 19 ஆம் அருணாசல பிரதேசம், மீண்டும் குஜராத் என பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அதே நாளில் உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசிக்கு சென்று காசி தமிழ் சங்கமம விழாவை துவைக்கி வைத்தார்.

  நவம்பர் 20 ல் மீண்டும் குஜராத் மாநிலத்திற்குச் சென்ற பிரதமர் மோடி, சோமநாத் கோயில் விழா மற்றும் பாஜக தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்றார்.

நவம்பர் 21 ஆம் தேதியும் குஜராத் மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டார் பிரதமர் மோடி.

நவம்பர் 23, 24, 27, 28 என குஜராத் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்ற பிரதமர் மோடி, பாஜக தேர்தல் பிரசாரக் கூட்டம், பேரணி என குஜராத் மாநில தலைவர்கள் ஊர் ஊராக சுற்றுவார்களே, அந்த மாதிரி பிரதமர் மோடி, குஜராத் மாநிலத்தில் ஒரு நகரை கூட விட்டுவிடாமல் பாஜக வெற்றிக்காக சூறாவளி சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டார்.

டிசம்பர் ஒன்றாம் தேதி குஜராத் மாநிலத்திற்கு மீண்டும் சென்றார் பிரதமர் மோடி. டிசம்பர் 2, 3 ஆகிய தேதிகளில் ஊர் ஊராக சென்று பாஜக வெற்றிக்காக நாள் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபட்டார் பிரதமர் மோடி. தமது சொந்த மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு ஆபத்து வந்து விடக் கூடாது என்பதற்கு எந்தவொரு அரசியல் தலைவரும் ஈடுபடாத சாகசத்தில் துணிந்து குதித்தார் பிரதமர் மோடி.

பாதுகாப்பு அதிகாரிகளை சாலையில் ஓட விட்டு, திறந்த காரில் 50 கிலோ மீட்டர் தொலைக்கு மேல் பவனி சென்று பாஜக வேட்பாளர்களுக்காக இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் பிரதமர் மோடி.  

டிசம்பர் 5 ஆம் தேதி குஜராத் மாநிலத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அன்றைக்கும் குஜராத்திற்கு சென்று வாக்குப்பதிவு செய்தார் பிரதமர் மோடி.

டிசம்பர் 7 ஆம் தேதி நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது.

டிசம்பர் 8 ஆம் தேதி குஜராத் மற்றும் ஹிமாச்சல் மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகின. குஜராத்தில் பாஜகவுக்கு கிடைத்த வரலாறு காணாத வெற்றியை அடுத்து, அன்று பிற்பகலில் டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற வெற்றி விழா கூட்டத்தில் உரையாற்றினார் பிரதமர் மோடி.

டிசம்பர் 11 ஆம் தேதி மகாராஷ்டிரா மற்றும் கோவா மாநிலங்களில் அரசு விழாக்களில் கலந்துகொண்டார் பிரதமர் மோடி. அப்போது நாடாளுமன்றக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

டிசம்பர் 12 ஆம் தேதி குஜராத் மாநிலத்தில் பாஜக அரசு மீண்டும் பதவியேற்றது. அமைச்சரவை பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.

டிசம்பர் 15 ஆம் தேதி மீண்டும் குஜராத் மாநிலத்திற்கு பயணமானார் பிரதமர் மோடி.

டிசமபர் 18 ஆம் தேதி மேகாலயா, திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கு சென்றார் பிரதமர் மோடி.

டிசம்பர் 28 ஆம் தேதி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமது தாயாரை பார்க்க குஜராத் சென்றார் பிரதமர் மோடி.

ஒருநாள் இடைவெளியில், டிசம்பர் 30ல் தாயார் மறைந்ததையடுத்து, அன்று காலை டெல்லியில் இருந்து மீண்டும் குஜராத்திற்கு பயணமானார் பிரதமர் மோடி.

நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் பிரதமர் மோடி, டெல்லியில் இருந்த நாட்களை விட மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்ததும், வெளிநாட்டிற்கு சென்று வந்ததும் தான் அதிகமாக இருக்கிறது.

பிரதமர் மோடி மாதிரி இதற்கு முன்பு இருந்த பிரதமர்கள் ஒருவர் கூட வெளிநாட்டுப் பயணம், மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல் பிரசாரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்ததே இல்லை என்பதுதான் வரலாறாக உள்ளது.

தேர்தல் பிரசாரங்களிலும் வெளிநாட்டு பயணங்களிலும் கலந்து கொள்வதையே பிரதமரின் வாழ்நாள் கடமையாக கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி என்பதற்கு, நவம்பர் மற்றும் டிசம்பர் மாத நிகழ்வுகளே போதுமானதாக இருக்கிறது.

2022 ஆம் ஆண்டை பொறுத்தவரை பிரதமர் மோடிக்கு கொண்டாட்டமாகவே அமைந்திருக்கிறது.

2023 ஆம் ஆண்டு எப்படியிருக்கும் என்று ஆராய்ந்து பார்ப்போமா..

புதிய ஆண்டில் 9 மாநிலங்களில் சட்டமன்றங்களுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.

பிப்ரவரி மாத இறுதியில் அல்லது மார்ச் மாத முதல் வாரத்தில் 3 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலை நடத்துவதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் முனைப்புடன் ஈடுபட்டு வருகிறது.

நாகாலாந்து

திரிபுரா

மேகாலயா ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் தேர்தல் நடைபெறுவதால், ஆண்டின் முதல் மாதமான ஜனவரியிலேயே பிரதமர் மோடி, தேர்தல் பிரசாரங்களில் பிஸியாகி விடுவார்.

அடுத்ததாக, ராஜஸ்தான், மிசோரம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய மாநிலங்களிலும் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.

ஏப்ரலில் துவங்கி 2023 ஆம் ஆண்டின் இறுதி மாதமான டிசம்பருக்குள் 6 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என்பதால், நடப்பாண்டில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்வதற்குதான் முக்கியத்துவம் தருவார் பிரதமர் மோடி என்கிறார்கள் டெல்லியில் உள்ள மூத்த அரசியல் தலைவர்கள்.

கர்நாடக சட்டப்பேரவையின் பதவிக் காலம் மே மாதத்தின் முதல் வாரத்தில் நிறைவடைவதால், ஜனவரி மாதமே அங்கு தேர்தல் பிரசாரங்கள் சூடு பிடித்துவிடும்.

கர்நாடகாவில் பாஜக ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் பிரதமர் மோடி மிகவும் உறுதியாக இருக்கிறார்.

இனி வரும் நாட்களில் பிரதமர் மோடியை கர்நாடகா மாநிலத்தில் அடிக்கடி பார்க்கலாம்.

ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை பிரதமர் மோடியை பொறுத்தவரை கர்நாடகாவுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பார்.

மே மாதம் பிறந்தவுடன் மிசோரம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் ஆண்டின் இறுதியில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான வியூகங்களை வகுப்பதற்கு நாட்களை செலவிடுவார் பிரதமர் மோடி.

2023 ஆம் ஆண்டில் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவுள்ள 9 மாநிலங்களில் 116 எம்பி தொகுதிகள் உள்ளன. சட்டமன்றத் தேர்தலில் மக்கள் வழங்கும் தீர்ப்பை போலதான் அடுத்த ஆண்டு, 2024 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் அமையும் என்பதால், 9 மாநில தேர்தல்களையும் வாழ்வா, சாவா போராட்டமாகதான் எடுத்துக் கொள்வார் பிரதமர் மோடி என்கிறார்கள் டெல்லியில் உள்ள மூத்த ஊடகவியலாளர்கள்.

ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸை வீழ்த்துவம், தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவை வீட்டுக்கு அனுப்புவதும் பிரதமர் மோடியின் சபதமாக இருக்கிறதாம்.

இந்த மூன்று மாநிலங்களிலும் ஆளும்கட்சியில் உள்ள முக்கிய அரசியல் தலைவர்களை, மூத்த அமைச்சர்களை, அமைச்சர் பதவியை குறி வைத்து ஏமாந்து இருக்கும் எம்எல்ஏக்களை பாஜகவுக்கு இழுக்கும் ராஜதந்திர செயல்கள் இனி வரும் நாட்களில் அதிகமாக பரபரப்பு செய்தி ஆகலாம்.

பிரதமர் மோடியின் லட்சியமான காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவதற்கு 2023 ஆம் ஆண்டு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்திருக்கிறது. ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஹிமாச்சல் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களில் மட்டுமே தற்போது காங்கிரஸ் அரசு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த ஆண்டு இறுதியில் ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸை ஆட்சியை வீட்டு அனுப்பி வைத்துவிட்டு, 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு ஹிமாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ் அரசை கவிழ்பது பிரதமர் மோடிக்கு மிகவும் எளிதான காரியமாகிவிடும் என்கிறார்கள் டெல்லி பாஜக தலைவர்கள்.

சட்டமன்றத் தேர்தல் தேர்தல் பிரசார கூட்டங்கள், மாநிலங்களில் சுற்றுப்பயணம் என்பது பிரதமர் மோடிக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி.

விருப்பமான ஒன்றை செய்வதற்கு பிரதமர் மோடிக்கு12 மாதங்கள் கிடைத்திருக்கிறது என்றால், 2023 ஆம் ஆண்டை பொறுத்தவரை பிரதமர் மோடிக்கு சுக்கிர திசை உச்சத்தில் இருக்கிறது என்றுதானே பொருள் என்கிறார்கள் தேர்தல் கள ஆய்வாளர்கள்.

வணக்கம் நண்பர்களே.,

2023 ஆம் ஆண்டு பிரதமர் மோடியின் அரசியல் ஆட்டம் உச்சத்திற்கு செல்லும் என்கிறார்கள்.

நடப்பாண்டில் நடைபெறவுள்ள 9 மாநில சட்டமன்றத் தேர்தல், அதற்காக பிரதமர் மோடி வகுத்துள்ள தேர்தல் வியூகம் குறித்து இன்றைய சிறப்பு செய்தித் தொகுப்பில் விரிவாக பார்க்க இருக்கிறோம்.