Tue. Apr 30th, 2024

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. கொளுத்தும் வெயிலில் அரசியல் கட்சித்தலைவர்கள் முனைப்புடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆளும்கட்சியான திமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, திமுக தலைவரும் திராவிடமாடல் ஆட்சியின் முதல்வருமான மு.க.ஸ்டாலின், கடந்த 10 நாட்களாக தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், அதிமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தனியொருவராக சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். 1967 ல் இருந்து தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்கும் திராவிட இயக்கங்களின் பிரசாரத்திற்கு இணையாக, நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பிரசாரமும் சூட்டை கிளப்பிக் கொண்டிருப்பதுதான், தமிழகத்தை கடந்தும் கடல் கடந்து வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்களிடம் மிகப்பெரிய அளவில் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் விசித்திரமாக இருந்து வருகிறது.

புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் மொத்தம் உள்ள 40 எம்பி தொகுதிகளிலும் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சூறாவளி பரப்புரையை மேற்கொண்டு வருகிறார். ஒவ்வொரு தொகுதியிலும் மாநில கட்சிகள், மத்தியில் ஆளும் கட்சிகள் என பட்டியல் போட்டு வெளுத்து வாங்குவதை வாக்காளப் பெருமக்கள் ஆரவாரமாக வரவேற்று வருகிறார்கள். நல்லரசுவின் இன்றைய சிறப்பு செய்தி தொகுப்பில், சீமானின் நவரச பிரசாரத்தை பற்றி விரிவாக பார்ப்போம்..

நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் போட்டியிடுகிறார்கள். ஒரே ஒரு தொகுதி கொண்ட புதுச்சேரியை உள்ளடக்கி, 40 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி வழக்கம் போல தனித்து களம் காண்கிறது.

2019 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தலின் நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டது. 2019 பொதுத்தேர்தலில் 37 எம்பி தொகுதிகளில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி, 4 சதவீத வாக்குகளை பெற்றது.
2021 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி 7 சதவீத வாக்குகளைப் பெற்றது. சீமான் என்ற தனிமனிதரின் பரப்புரை மட்டுமே 234 தொகுதிகளிலும் ஒலித்திருந்தாலும், நாம் தமிழர் கட்சிக்கு கிடைத்த வாக்குசதவீதம், தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை உருவாக்கியது.
எம்பி தேர்தலாக இருந்தாலும் சரி, சட்டப்பேரவை தேர்தலாக இருந்தாலும் சரி, நாம் தமிழர் கட்சி பெறும் வாக்குகளால், அதிமுகவிற்கும் பல தொகுதிகளில் தோல்வி கிடைத்தது. அதேபோல, திமுகவுக்கும் பல தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி போட்டியிட்டதால் வெற்றி வாய்ப்பு பறிபோனது.


ஆட்சி பீடத்தில் இருக்கும் ஆளும் கட்சியை மட்டுமல்ல, பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் வெற்றி வாய்ப்பையும் ஒருசேர பறிக்கும் சக்தி கொண்டதாக நாம் தமிழர் கட்சி, ஒவ்வொரு தேர்தலின் போதும் பரிணாம் அடைந்து வருகிறது. 50 ஆண்டுகளுக்கு மேலாக திராவிட இயக்க ஆட்சிகளுக்கு மிகப்பெரிய சவாலாக இன்றைக்கு மாறியிருப்பது நாம் தமிழர் கட்சிதான்.
கடந்த 2019 மற்றும் 2021 ஆகிய இரண்டு பொதுத்தேர்தல்களிலும் திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்களில் பலரை நிம்மதியிழக்க செய்து கொண்டிருப்பவர் சீமான் என்ற குரல், தமிழகத்தை கடந்து இந்தியா முழுவதும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

இப்படிபட்ட பின்னணி கொண்ட நாம் தமிழர் கட்சியின் 40 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் சீமான் அறிமுகப்படுத்திய நேரத்தில், நாம் தமிழர் கட்சியின் சின்னம் எது என்று பகிரங்கமாக அறிவிக்க முடியாத நிலைதான் நிலவியது.

விவசாயி சின்னத்தையே வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் முறையிட்ட போதும், நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னத்தை ஒதுக்க இந்திய தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. உச்சநீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் முட்டி மோதிய நாம் தமிழர் கட்சிக்கு நீண்ட போராட்டத்திற்குப் பிறகு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டது. தூய தமிழ்ச் சொல்லை பயன்படுத்த வேண்டும் என்பதற்காக வாக்கு சேகரிப்பு கூட்டங்களிலும் சீமானும் அவரது தம்பிமார்களான நாம் தமிழர் கட்சியினரும் ஒலிவாங்கி என்ற சொல்லையே பெரிதும் பயன்படுத்தி வருகிறார்.

மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும்கட்சியாக உள்ள பாரதிய ஜனதா கட்சி மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளையும் சகட்டு மேனிக்கு வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார் சீமான்.

மறைந்த திமுக கலைஞர் மு.கருணாநிதி பற்றியும் அவரது புதல்வரும் தற்போதைய முதல்வருமான மு.க.ஸ்டாலினை பற்றியும், கலைஞரின் பேரனும், மு.க.ஸ்டாலினின் புதல்வருமான விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பற்றியும், அடர்ந்த வனத்தில் நடந்து செல்லும் வழிப்போக்கனிடம் நடைபெறும் வழிப்பறி பற்றி சீமான் பேசிய பேச்சுகள், திமுக தலைமையை மட்டுமின்றி, திராவிட சித்தாந்தவாதிகளையும் கொதிப்படை வைத்துள்ளது.

திமுகவை கடுமையாக தாக்கிய அதே நேரத்தில் மத்திய பாஜக அரசையும், பிரதமர் மோடியையும் கடுமையாக தாக்கி பேசி வரும் சீமான், கச்சத்தீவு விவகாரத்தை தேர்தல் ஆயுதமாக்கியிருக்கும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை சுடுசொற்களால் காய்ச்சி எடுத்தார்.

திமுக மற்றும் பாஜக மீது வழக்கத்திற்கு மாறாக கடுமையான சொற்களை பயன்படுத்தி சீமான், அதேஅளவுக்கான சீற்றத்தை தேனியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மீதும் ஏவினார் சீமான். இரட்டை இலைச் சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுத்ததாக எழுந்த புகாரில், தினகரனை கைது செய்து திகார் சிறையில் அடைத்தது, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசும், பாஜகவும்தான். அப்படிபட்ட கட்சியுடன் தான் டிடிவி தினகரன் கூட்டணி அமைத்திருக்கிறார். இரண்டு தொகுதிகளில் ஒன்றில் வெற்றி கிடைத்தால் கூட போதும் என்ற பேராசையால், அமமுகவையே பிரதமர் மோடியிடம் அடகு வைத்துவிட்டார் தினகரன் என்று அக்னி குஞ்சுகளை வீசினார் சீமான்.

சசிகலா,டிடிவி தினகரன் ஆகிய இருவருமே அரசியலில் மீண்டும் தலையெடுக்க கூடாது என்று நயவஞ்சகத்தோடு செயல்பட்ட பாஜகவையும், பிரதமர் மோடியையும் தான் இன்றைக்கு புகழ்ந்து கொண்டிருக்கிறார் தினகரன் என்று கடுமையாக சாடினார் சீமான். ஒரே ஒரு எம்பி சீட்டுக்காக ஒட்டுமொத்த மானத்தையும் பிரதமர் மோடியிடமும், பாஜகவிடமும் அடகு வைத்துவிட்டார் தினகரன் என்று சீமான் ஆவேசம் காட்டிய நேரத்தில், சீமானின் பேச்சை கேட்பதற்கு ஆர்வமாக கூடியிருந்த வாக்காளர்கள் ஒட்டுமொத்தமாக ஆரவாரம் செய்து கைதட்டி ரசித்தார்கள்.

மத்திய பாஜக அரசின் மிரட்டலுக்கு பயந்து போய்விட்டார் டிடிவி தினகரன் என்று கிண்டலடித்தத சீமான், நாம் தமிழர் கட்சியை கூட தான் மத்திய பாஜக அரசு மிரட்டியது. பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் மிரட்டலுக்கு அடிபணிந்து போகிறவர் சீமான் இல்லை என்பதை இன்றைக்கு தமிழகத்தில் உள்ள பாஜக தலைவர்கள் மட்டுமல்ல, டெல்லியில் உள்ள பாஜக தலைவர்களும் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்று பேசி கம்பீரமாக நின்றார் சீமான்.

பல நூறு கோடி ரூபாயை வழங்குவதாக ஆசை காட்டிய போதும் சீமானை விலைக்கு வாங்க முடியாது என்று பாஜக மேலிடத் தலைவர்கள் உணர்ந்து கொள்ளும் வகையில், தன்மானத்துடன் சீமான் நின்றார் என்றபோது, நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ஆரவாரமாக கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

2016 இறுதியில் செல்வி ஜெயலலிதா காலமானபோது, ஒட்டுமொத்த அதிமுக எம்எல்ஏக்களின் ஏகோபித்த ஆதரவோடு, முதல் அமைச்சர் பதவியை ஏற்க தயாரானார் வி.கே.சசிகலா. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் மோடியா.. லேடியா என்று முழங்கிய செல்வி ஜெயலலிதா, வடமாநிலங்களில் மோடி அலை அபரிதமாக வீசிய நேரத்திலும், தமிழகத்தில் 37 தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களே அமோகமாக வெற்றி பெற்றார்கள். மோடிக்கு இணையான போட்டியாளராக ஜெயலலிதா நின்றதால், அவரது மறைவுக்குப் பிறகு அதிமுகவையும், அதிமுக ஆட்சியையும் மோடி, தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர காய் நகர்த்தினார்.

வி.கே.சசிகலாவையோ, டிடிவி தினகரனையோ முதல் அமைச்சராக பதவியேற்பதற்கு முட்டுக்கட்டைப் போட்ட பிரதமர் மோடியும் பாஜக மேலிட தலைவர்களும், பாஜகவின் சொல் பேச்சுக்கு தலையை ஆட்டுகிற ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வர் பதவியில் அமர்த்தினார்கள். பாஜகவின் கைப்பாவையான ஓபிஎஸ் மாறி போனதை பார்த்து அதிர்ச்சியடைந்த விகே சசிகலா, முதல் அமைச்சர் பதவி தனக்கு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. மோடி, அமித்ஷாவின் கட்டுப்பாட்டிற்குள் சென்றுவிடக் கூடாது என்று எடப்பாடியாரை முதல் அமைச்சர் பதவியில் அமர வைத்தார்.

வி.கே.சசிகலா, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவராக தேர்வு செய்யப்பட்டு பல நாட்கள் கடந்துவிட்ட பிறகும் கூட முதல் அமைச்சராக பதவியேற்க சசிகலாவை அழைக்காமல் அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவ் காலம் தாழ்த்தி வந்தார். செல்வி ஜெயலலிதாவின் உற்ற தோழியாக நடமாடிய சசிகலாவை பழிவாங்கும் நோக்கத்துடனேயே ஜெயலலிதாவுக்கு எதிராக சொத்து குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு தீர்ப்பை அவசரமாக வழங்கி, சசிகலாவை 4 ஆண்டு சிறை தண்டனையில் பெங்களூர் சிறையில் அடைத்தார்கள் பாஜக தலைவர்கள்.

டிடிவி தினகரனுக்கு துரோகம் செய்த போதும் நாம் தமிழர் கட்சிதான் மத்திய பாஜக அரசுக்கு எதிராக குரல் கொடுத்தது. அதுபோலவே, விகே சசிகலாவை 4 ஆண்டு சிறையில் அடைக்க நீதித்துறையை மத்திய பாஜக அரசு தூண்டிய போதும் நாம் தமிழர் கட்சிதான் பகிரங்கமாக குரல் கொடுத்தது.


2016 ஆண்டு முதலாக பாஜகவை பகிரங்கமாகவே எதிர்த்து வருகிறது நாம் தமிழர் கட்சி. பிரதமர் மோடியின் எந்தவொரு உருட்டல்களுக்கும் பயப்படாதவன் தான் சீமான். நாம் தமிழர் கட்சிக்கு இருக்கும் துணிச்சல், சீமானுக்கு இருக்கும் தன்மான உணர்வு டிடிவி தினகரனுக்கு இல்லாமல் போனதுதான் நகைப்புக்கு உரியது.

8 ஆண்டுகளாக டிடிவிதினகரனின் அரசியல் செயல்பாட்டுகளை முடக்கிய பிரதமர் மோடியைதான் இன்றைக்கு சிறந்த பிரதமர், இந்தியாவை வழிநடத்துகிற ஆற்றல் மிகுந்த தலைவர் என்றெல்லாம் டிடிவி தினகரன் பாராட்டு மழை பொழிந்து கொண்டிருக்கிறார்.

தமிழகத்திற்கு தமிழ் இனத்திற்கு துரோகம் செய்து கொண்டிருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவே மூன்றாவது முறையாகவும் மத்தியில் ஆட்சியில் அமர வேண்டும் என்று டிடிவி தினகரன் பிரசாரம் செயவது, தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய அவமானம் என்றெல்லாம் பொளுந்து கட்டினார் சீமான்.

தேனியில் நின்று கொண்டு டிடிவி தினகரனுக்கு எதிராக சுடுச் சொற்களால் சீமான் திட்டி தீர்த்ததை வாக்காளப் பெருமக்கள் ஆரவாரமாகவே வரவேற்றார்கள். சீமானைப் போல தில்லான மனிதராக டிடிவி தினகரன் இல்லாமல் போனதற்கு முக்கிய காரணம் பதவி ஆசைதான் என்று அமமுக நிர்வாகிகளே மனம் நொந்து கூறினார்கள்.

திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக என சகட்டுமேனிக்கு வெளுத்து வாங்கிய சீமான், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தையும் தினகரனையும் கடுமையாக விமர்சனம் செய்தது, நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளிடமும், தேனி நாடாளுமன்ற தொகுதி மக்களிடமும் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்திவிட்டது.

ஒவ்வொரு நாள் விடியலிலும், இரவு நேரத்திலும் சீமான், யாரை எதிர்த்து கடுமையாக தேர்தல் பரப்புரையை மேற்கொள்கிறார் என்பதை கேட்பதற்கு தமிழகத்தில் மட்டுமல்ல, கடல் கடந்தும் தமிழர்கள் ஆர்வமாக இருப்பது, சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்படும் கருத்துகள் மூலம் வெட்ட வெளிச்சமாகி கொண்டிருக்கிறது.

நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி வெற்றி பெறுகிறதோ இல்லையோ, நாம் தமிழர் கட்சிக்கு கடந்த தேர்தல்களில் கிடைத்த வாக்குகளை விட கூடுதலாக 2024 தேர்தலில் நிச்சயம் கிடைக்கும் என்று பூரிப்போடு கூறி வருகிறார்கள் சீமானின் போர்ப்படை தளபதிகள்…

வாக்குப்பதிவுக்கு இன்னும் 17 நாட்கள் தான் எஞ்சி இருக்கின்றன. சீமானின் ஆவேச பிரசாரம், இன்னும் யாரை யாரை எல்லாம் பதம் பார்க்குமோ.. ஏப்ரல் 16 ஆம் தேதி மாலை வரை தமிழகத்தில் சீமானின் பட்டாசுகளின் சத்தம், லெட்சுமி வெடியை விட பலமடங்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் துளியும் ஐயமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *