தாரை.வே.இளமதி., சிறப்புச் செய்தியாளர்..
உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், அகில இந்திய பாஜக தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோருக்கு இல்லாத நம்பிக்கை, பிரதமர் மோடிக்கு அதிகமாக இருப்பதால்தான், தமிழகத்தில் பாஜகவின் வெற்றியை உறுதி செய்வதற்காக அடிக்கடி தமிழகத்திற்கு வருகை தருகிறார் என்கிறார்கள் அரசியல் திறனாய்வாளர்கள். தமிழகத்தில் தாமரையை மலரச் செய்வதற்காக செலவிடும் நேரத்தில் வடமாநிலங்களில் மோடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டால் கூட, பாஜகவின் வெற்றி அதிகரிக்கும் என்று கிண்டலடிக்கிறார்கள் திராவிட சித்தாந்தவாதிகள்.
பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராஜ்நாத்சிங்கும், ஜே.பி.நட்டாவும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது தமிழக மக்கள் அளித்த ஆதரவை பார்த்துதான், அமித்ஷா தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் திட்டத்தையே அடிக்கடி தள்ளி போட்டுக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள் பாஜகவுக்கு எதிராக களமாடி வரும் அரசியல் தலைவர்கள்.
நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே, கடந்த ஜனவரி மாதம் முதல் மாதந்தோறும் தமிழகத்திற்கு வந்துக் கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி. ஆனால், அவரின் பரப்புரையும் கோயம்புத்தூரில் நடைபெற்ற ரோடு ஷோ என்கிற வாகன பேரணியும் தமிழகத்தில் ஒரு தொகுதியிலாவது தாமரையை மலர செய்துவிடும் என்ற அளவுக்கு களத்தில் எந்தவொரு மாற்றத்தையும் பார்க்க முடியவில்லை என்கிறார்கள் பாஜகவின் மூத்த தலைவர்கள்.
தமிழகத்தில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் தலைவர்களான ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், ஏ.சி.சண்முகம், பச்சமுத்து, ஜான்பாண்டியன், தேவநாதன் மற்றும் ஜி.கே.வாசன் தலைமையிலான தமாகா வேட்பாளர்கள் முனைப்பான பரப்புரையை மேற்கொண்டு வரும் நேரத்திலும், பொதுமக்களிடம் வரவேற்பே கிடைக்கவில்லை. இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தை பெறுவதற்கே, ஆளும்கட்சியான திமுக தலைமையிலான கூட்டணியுடன் பாஜக கூட்டணி தலைவர்கள் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை என்கிறார்கள் பாஜகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள்.
வடமாவட்டங்களில் கட்சி ரீதியாக பரவலான, பலமான கட்டமைப்பைக் கொண்ட பாமகவின் முனைப்பான வாக்குசேகரிப்புகூட அக்கட்சியின் வேட்பாளர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்திவிடவில்லை என்பதுதான் இன்றைய தேதியில் கள யதார்த்தமாக உள்ளது.
தர்மபுரி தொகுதியில் போட்டியிடும் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணியின் மனைவி சௌமியா, முதற்கட்டமாக தொகுதி முழுவதும் ஒருமுறை சுற்றுப்பயணம் செய்து முழுமையாக வாக்குசேரிப்பில் ஈடுபட்ட பிறகும், வெற்றி வாய்ப்பு எளிதாக இருக்காது என்பதை உணர்ந்து கொண்டிருக்கிறார் என்று கூறும் தருமபுரி மாவட்ட பாமக நிர்வாகிகள், திமுக வேட்பாளரிடம் தோல்வி அடைந்துவிட்டால், அன்புமணி மத்திய அமைச்சர் ஆகும் கனவு தகர்ந்து போய்விடும் என்பதால்தான், அன்புமணி, சௌமியாவின் மகள்களை கூட வாக்குசேகரிப்பில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள் ராமதாஸ் குடும்பத்தினர் என்கிறார்கள்.
பாஜக வேட்பாளர்களாக களத்தில் உள்ள தமிழக மூத்த தலைவர்களான பொன் ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன் ஆகியோர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருந்து வரும் நேரத்தில், இருவரும் வெற்றி பெற்றால் நிச்சயமாக மத்திய அமைச்சர்களாகிவிடுவார்கள் என அவரது தீவிர விசுவாசிகள் மகிழ்ச்சியோடு கூறி வருகிறார்கள். அதேநேரத்தில், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட பாஜகவினரின் கடுமையான வாக்குசேகரிப்பு பணிக்கு வேட்டு வைக்கும் அளவுக்கு தரம்கெட்ட செயல்களை தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலையே செய்து கொண்டிருக்கிறார் என்று பாஜக நிர்வாகிகளே குமறுவதுதான் அதிர்ச்சிக்குரிய செய்தியாகும்.
தமிழகத்தில் தன்னை தவிர வேறு யாரும் வெற்றி பெற்றுவிடக் கூடாது என்ற தீய எண்ணத்துடனேயே அண்ணாமலை செயல்பட்டுக் கொண்டிருப்பதாக கூறும் தமிழக பாஜக மூத்த தலைவர்கள், பிரதமர் மோடியின் ரோடு ஷோ நிகழ்ச்சியை திருநெல்வேலியிலோ அல்லது கன்னியாகுமரியிலோ ஏற்பாடு செய்திருந்தால், நயினார் நாகேந்திரன் மற்றும் பொன் ராதாகிருஷ்ணனின் வெற்றி நிச்சயமாக உறுதி செய்யப்பட்டிருக்கும்.
வெற்றி கோட்டை நெருங்கிக் கொண்டிருக்கும் நெல்லை, குமரி ஆகிய இரண்டு எம்பி தொகுதிகளில் கூடுதலாக முக்கியத்துவம் தருவதற்குப் பதிலாக, தென் சென்னை தொகுதியில் வீதி வீதியாக பிரதமர் மோடி வாக்கு சேகரித்தாலும் கூட தமிழிசையை வெற்றி பெற வைக்க முடியாது என்று தெரிந்திருந்தும் மோடியின் பொன்னான நேரத்தை வீணடிக்கிறார் அண்ணாமலை என்று குமறுகிறார்கள் பாஜக இரண்டாம் கட்ட தலைவர்கள்.
பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான பொன் ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்பட மூத்த தலைவர்களுடன் மிகவும் நெருக்கம் காட்டி வருபவர்.
டெல்லி மேலிட தலைவர்களிடம் பொன் ராதாகிருஷ்ணுக்கு கிடைத்து வரும் முக்கியத்துவத்தை பார்த்து பொறாமைபடுபவராகதான் இருக்கிறார் அண்ணாமலை என்று கூறும் பாஜக இரண்டாம் கட்ட தலைவர்கள், தென் மாவட்டங்களில் செல்வாக்குமிகுந்த சமுதாயத்தைச் சேர்ந்த நயினார் நாகேந்திரனுக்கு தமிழக பாரதிய ஜனதா கட்சியில் கிடைத்து வரும் அட்டகாசமான வரவேற்பையும் கண்டு எரிச்சல் அடைந்திருக்கிறார் அண்ணாமலை என்பதுதான் வேதனையை தருகிறது என்கிறார்கள் நயினாரின் தீவிர விசுவாசிகள்.
தென் மாவட்ட அதிமுகவில் மிகுந்த செல்வாக்கு பெற்றிருந்தவர் என்பதுடன் அமைச்சராகவும் பணியாற்றியவர் நயினார் நாகேந்திரன் என்பதால், அனைத்து சமுதாய மக்களிடமும் மிகவும் பிரபலமாகியிருப்பவர்.
நயினாரின் சமுதாய மக்கள் மட்டுமல்ல, பிற சமுதாயத்தைச் சேர்ந்த மக்களும் கொண்டாடும் வகையில் நயினாரின் பழக்க வழக்கங்கள் மிகவும் கண்ணியத்துடன் இருப்பதால்தான், கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா வேட்பாளராக நெல்லையில் களமிறங்கிய நயினரால் எளிதாக வெற்றி பெற முடிந்தது என்கிறார்கள்.
ஜனவரி மாதம் வீசிய புயலால் தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்ட போது, உடனடியாக களத்தில் இறங்கி மீட்பு பணியில் ஈடுபட்டவர் நயினார் நாகேந்திரன். துயரில் துடித்த மக்களுக்கு பகல் இரவு பாராமல் உதவி புரிந்தவரும் அவரே.
பல லட்ச ரூபாய் சொந்த பணத்தை செலவழித்து நெல்லை மாவட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை செய்தவர் நயினார். எதிர்கால வாழ்க்கையே கேள்விக்குறியான நேரத்தில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக களத்தில் நின்றவர் நயினார் என்பதால்தான், நன்றிக் கடனாக, எம்பி தேர்தலில் நயினாரின் வெற்றிக்காக, அரசியலுக்கு அப்பாற்பட்ட அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். நயினாரின் வெற்றி கிட்டதட்ட உறுதி என்று தெரிந்துவிட்டதால்தான், அவரது அரசியல் எதிரிகள் தனிப்பட்ட காரணங்களுக்காக தொல்லைகள் கொடுக்க தொடங்கிவிட்டார்கள்.
சென்னையில் இருந்து நெல்லைக்கு ரயிலில் கொண்டு வரப்பட்ட 4 கோடி ரூபாய் குறித்து பறக்கும் படைக்கு தகவல் கொடுத்ததே அண்ணாமலைதான் என்று பாரதிய ஜனதாவின் இரண்டாம் கட்ட தலைவர்களே வெளிப்படையாக பேசும் அளவுக்கு அண்ணாமலையின் கோர முகம், அனைத்து தரப்பு மக்களுக்கும் தெரிந்தே இருக்கிறது. தமிழகத்தில் முதல்முறையாக பறக்கும் படையினரின் வேட்டையில் 4 கோடி ரூபாய் சிக்கியருப்பதும், தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரான செயலில் பாரதிய ஜனதா கட்சியினரே ஈடுபட்டிருக்கிறார்கள் என்ற செய்தியும், தமிழகத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதும் பாரதிய ஜனதா கட்சிக்கு மிகப்பெரிய அவப்பெயரை தேடி தந்திருக்கிறது என்று கொதிக்கிறார்கள் அண்ணாமலைக்கு எதிர் முகாமில் உள்ள பாஜக மூத்த நிர்வாகிகள்.
தமிழகத்தில் தாமரை மலரவே கூடாது என்ற தீய எண்ணத்துடனேயே நடமாடிக் கொண்டிருக்கும் அண்ணாமலையின் அராஜக நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல், பிரதமர் மோடி தமிழகத்தில் ஊர் ஊராக சுற்றினாலும் கூட பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது என்பதுதான் உண்மையான கள நிலவரம் என்று வேதனையோடு கூறுகிறார்கள் பாரதிய ஜனதாவின் உள்ள தர்மநியாயத்திற்கு கட்டுப்பட்ட மூத்த தலைவர்கள்.
திருப்பூரிலும், கோவையிலும் பிரதமர் மோடியின் ரோடு ஷோ நடைபெற்ற பிறகும் கூட கொங்கு மண்டலத்தில் பாஜக வேட்பாளர்கள் ஒருவர் கூட வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு மட்டுமல்ல, இரண்டாம் இடத்தை பெறுவதற்கான உத்தரவாதம் கூட இன்றைய தேதியில் இல்லை என்கிறார்கள் அரசியல் திறனாய்வாளர்கள்.
மோடியின் ரோடு ஷோவுக்கு வட மாநிலங்களில் தான் மக்கள் மயங்குவார்கள். தென் இந்தியாவில் உள்ள மக்கள் ஒருபோதும் மோடியின் ரோடு ஷோவை பார்த்து ஏமாற மாட்டார்கள் என்பதற்கு நிறைய நிகழ்வுகள் முன் உதாரணமாக இருக்கிறது என்று கூறும் தேர்தல் வியூக வகுப்பாளர்கள், தெலுங்கானா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின் போது மோடி நடத்திய ரோடு ஷோவை ஒட்டுமொத்தமாக இருமாநில மக்களும் உதாசீனப்படுத்திவிட்டார்கள் என்பதை தேர்தல் முடிவுகள் பட்டுவர்த்தனமாக வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது என்கிறார்கள்.
தெலங்கானா, கர்நாடகாவை போலவே, தமிழகத்தில் மட்டுமல்ல கேளர மாநிலத்திலும் மோடி நடத்திய ரோடு ஷோவுக்கு எந்தவொரு முக்கியத்துவமும் மக்கள் கொடுக்க மாட்டார்கள் என்பது எம்பி தேர்தல் முடிவுகள் வெளிச்சம் போட்டு காட்டும் என்று கூறும் பாஜகவை எதிர்த்து தேர்தல் களத்தில் நிற்கும் அரசியல் கட்சித்தலைவர்கள், சென்னையில், பிரதமர் மோடி மேற்கொள்ளும் ரோடு ஷோவால் மக்களுக்கு பெரியளவில் துன்பம்தான் ஏற்படுமே தவிர, பாஜகவை வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற உத்வேகம் சென்னை வாக்காளர்களுக்கு ஒருபோதும் ஏற்படாது என்று திட்டவட்டமாக கூறுகிறார்கள்.