தாரை.வே.இளமதி, சிறப்புச் செய்தியாளர்..
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. வெற்றிக் கோட்டை நெருங்குவதற்காக 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் முழுவீச்சில் களமாடி வருகிறார்கள். திமுக கூட்டணியிடமிருந்து வெற்றிக்கனியை பறிப்பதற்காக 10க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும் பந்தயக் குதிரைப் போல பாய்ச்சல் காட்டிக் கொண்டிருக்கிறது.
அதேநேரத்தில், திமுகவுக்கு நேரடி எதிரி பாரதிய ஜனதா கட்சி தான் என்று ஓராண்டுக்கு மேலாக முழங்கிக் கொண்டிருந்த தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை, கூட்டணி விவகாரத்தில் அதிமுகவுக்கே அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துவிட்டு, பலமான கூட்டணி அமைத்திருந்தாலும் கூட, பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி வேட்பாளர்கள் ஒரே ஒரு தொகுதியிலாவது வாகைக் சூடுவார்களா என்ற சந்தேகம், பாஜக மேலிடத் தலைவர்களிடம் அதிகமாக காண முடிகிறது என்கிறார்கள் டெல்லியில் வசிக்கும் மூத்த ஊடகவியலாளர்கள்.
முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, திமுக மகளிரணித் தலைவர் கனிமொழி கருணாநிதி எம்பி ஆகியோரின் பரப்புரை, திமுக வேட்பாளர்களுக்கும், அந்தக் கூட்டணி வேட்பாளர்களுக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்களிடம் ஒருங்கிணைப்பு இருந்தாலும் கூட, கடந்த மூன்றாண்டு கால திமுக ஆட்சியில் தனிப்பட்ட முறையில் பயனடையாத அடிமட்ட தொண்டர்கள், திமுக ஆட்சி மீது வருத்தத்திலேயே இருந்து வருகிறார்கள் என்று வெளிப்படையாகவே கூறுகிறார்கள் அரசியல் திறனாய்வாளர்கள்.
இதன் காரணமாக, வாக்குப்பதிவு நாள் அன்று, முழுவீச்சில் வாக்காளர்களை திமுக கூட்டணி வெற்றிக்கு ஆதரவாக திரட்டி வரும் அளவுக்கு அடிமட்ட திமுக தொண்டர்களின் களப்பணி உற்சாகமாக இருக்குமா என்ற சந்தேகம், மாவட்ட, மாநில அளவிலான திமுக மூத்த நிர்வாகிகளுக்கு இன்றைய தேதியிலும் கூட அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்கிறார்கள்.
திமுக கூட்டணியின் அச்சத்தை அதிமுகவின் வெற்றிக்கு சாதகமாக்கிக் கொள்ள துடிக்கும் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 2019 மற்றும் 2021 ஆகிய இரண்டு பொதுத் தேர்தல்களிலும் தலைமைப் பதவிக்கு நெருக்கடி கொடுத்துக் கொண்டிருந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இன்றைய தேதியில் செல்வாக்கு இழந்து தனித்து விடப்பட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமி தனது ஆளுமையை நிரூபிக்கும் வகையில், 39 தொகுதிகளிலும் முனைப்பான பரப்புரையை மேற்கொண்டு வருகிறார். கடந்த சில நாட்களாக எடப்பாடி பழனிசாமியின் பொதுக்கூட்டங்களில் அதிமுகவினருடன் பொதுமக்களும் அதிகளவில் கலந்து கொள்வது அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாநிலத்தில் ஆளும்கட்சி மீதான அதிருப்தி அதிகரிக்கும் போதுதான், பொதுமக்கள் எதிர்க்கட்சிக்கு ஆதரவாக திரண்டு வருவார்கள் என்பது தமிழக அரசியலின் கடந்த கால வரலாறாக பதிவாகியுள்ளது என்று கூறப்படும் அதிமுக தலைமைக் கழக நிர்வாகி ஒருவர், மக்களிடம் ஏற்பட்டுள்ள மனமாற்றத்தை வைத்து பார்க்கும்போது, திமுகவுக்கு மாற்று பாரதிய ஜனதா என்று அண்ணாமலை கூறியதெல்லாம் வெறும் கண்கட்டு வித்தைதான் என்று உற்சாகமாக கூறுகிறார்கள்.
வாக்குப்பதிவுக்கான நாள் நெருங்க, நெருங்க அதிமுக தலைவர்களிடம் ஏற்பட்டிருக்கும் உற்சாகத்தைப் போல, பாரதிய ஜனதா கட்சி மூத்த தலைவர்களிடம் இருக்கிறதா என்று பாஜக மூத்த தலைவர் ஒருவரிடம் நல்லரசு கேள்வியை முன்வைத்தார்.
திருநெல்வேலி, கன்னியாகுமரி, வேலூர் ஆகிய மூன்று தொகுதிகளில் மட்டும் தாமரை மலருவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்று கூறிய பாஜக மூத்த தலைவர், தொடர்ந்து மனம் திறந்து கூறிய தகவல்கள் அனைத்தும் அதிர்ச்சிக்குரியவை.
பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக அகில இந்திய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ஆகியோர் பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்த போதும் பாஜக நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்களிடம் எழுச்சியைக் காண முடியவில்லை என்று கூறிய தலைவர், தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலைக்கு உண்மையிலேயே, தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற வேண்டும் என்ற வெறித்தனம் இருக்கிறதா என்றே தெரியவில்லை.
பிரதமர் மோடியை தொடங்கி அனைத்து மேலிட தலைவர்களின் பிரச்சாரமும், திமுக மற்றும் அதிமுக கூட்டணியை எதிர்த்து வெற்றி பெறுவதற்காக முனைப்புடன் போராடி கொண்டிருக்கும் பாஜக கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த டிடிவி தினகரன் (தேனி) ஓ.பன்னீர்செல்வம் (ராமநாதபுரம்) நடிகை ராதிகா (விருதுநகர்) மற்றும் பாஜக வேட்பாளர்கள் போட்டியிடும் திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட தொகுதிகளிலும் பிரசாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் வகையில் எந்தவொரு ஏற்பாட்டையும் அண்ணாமலை முன்னெடுக்காததால், தமிழக பாஜகவில் உள்ள இரண்டாம் கட்ட தலைவர்கள் முதல் மாவட்ட நிர்வாகிகள் வரை ஒட்டுமொத்தமாகவே அதிருப்தியிலேயே இருந்து வருகின்றனர்.
நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையில்தான் கூட்டணி என்பதில் விடாப்பிடியாக இருந்து, அதிமுகவை வெளியேற்றி விட்டு பாட்டாளி மக்கள் கட்சியை உள்ளடக்கி கூட்டணி அமைத்த விவகாரத்தில் அண்ணாமலையின் ஆளுமைக்குணம் வெளிப்பட்டாலும் கூட, பாஜக நேரடியாகப் போட்டியிடும் பல தொகுதிகளில் அண்ணாமலைப் பரிந்துரைத்த வேட்பாளர்கள் பலருக்கு மாற்றாக வேறு நிர்வாகிகளை வேட்பாளராக அறிவித்துவிட்டு பாஜக மேலிடம் அறிவித்ததால் கடும் அதிருப்தியில் இருந்து வருகிறார் அண்ணாமலை என்கிறார்கள். விசுவாசிகள்.
அண்ணாமலையே கோவையில் வேண்டா வெறுப்பாகதான் போட்டியிடுகிறார். நாடாளுமன்றத் தேர்தலில் அவருக்கு விருப்பம் இல்லாத போதும் மேலிட தலைவர்களின் வற்புறுத்தலினால்தான் கோவையில் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார் கே.அண்ணாமலை. அவருக்கு ஆதரவாக கோவை மாவட்ட பாஜக நிர்வாகிகள் முனைப்பாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தாலும் கூட, அவர்கள் மீது முழு நம்பிக்கை கொள்ளாமல், பாஜகவுக்கு புதிய வரவான திருச்சி சூர்யா, அமர்பிரசாத் ரெட்டி போன்றவர்களின் ஆலோசனைகளை தான் அதிகமாக கேட்கிறார் அண்ணாமலை என்ற மனக்குறை கோவை மாவட்ட பாஜக மூத்த நிர்வாகிகளிடம் கடந்த சில நாட்களாக அதிகமாக பார்க்க முடிகிறது.
வெளிமாவட்டங்களைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகள், வெளிமாநிலங்களைச் சேர்ந்த அண்ணாமலையின் நலம் விரும்பிகள் என 2 ஆயிரம் பேர், கோவை எம்பி தொகுதிக்குட்பட்ட ஆறுத் தொகுதிகளிலும் வாக்கு சேகரிப்பு, பொதுமக்களை மூளைச் சலவை செய்வது என தீவிரம் காட்டி வருகின்றனர். இப்படி களமாடி வரும் வெளிநபர்களுக்கும் உள்ளூர் பாஜக நிர்வாகிகளுக்கும் இடையே ஒருங்கிணைப்பு முழுமையாக இல்லாததால், அண்ணாமலையின் அனைத்து உழைப்பும் வீணாகிக் கொண்டிருக்கிறது என்பதுதான் மனதிற்கு மிகவும் வேதனையைத் தருகிறது என்கிறார் மூத்த தலைவர் ஒருவர்.
தமிழக பாஜக தலைவராக பொறுப்பு ஏற்ற நாளில் இருந்தே, அவருக்கு முன்பாக தமிழக பாஜகவில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த பிராமணர்களை குறி வைத்து ஓரம் கட்டினார் அண்ணாமலை. பாஜக மேலிட தலைவர்களுக்கு நன்கு அறிமுகமான கே.டி.ராகவன் மீதான அவதூறு விவகாரத்தை கிளப்பி விட்டதே அண்ணாமலைதான் என்ற கோபம், கே.டி.ராகவனின் ஆதரவாளர்களிடம் மட்டுமின்றி பிராமணர்கள் ஏராளமானோரிடம் இன்றைய தேதியிலும் கனன்று கொண்டேதான் இருக்கிறது.
இந்து மதத்தின் காவலர்களாக காலம் காலமாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் நகைசுவை நடிகர் எஸ்.வி.சேகர், நடிகை காயத்ரி ரகுராம் போன்ற வெளியுலகில் பிரபலமான பிராமணர்கள் மட்டுமல்ல, மாநிலம் முழுவதும் பரவியிருக்கும் பாஜக பிராமணர்களும் கூட, கோவையில் அண்ணாமலை வெற்றி பெற்றுவிடக் கூடாது என்ற ஒரே குறிக்கோளோடு, கோவையில் பல்லாண்டு காலமாக வாழ்ந்து வரும் பிராமணர்களை, இந்துத்துவா ஆதரவாளர்களை மூளைச் சலவை செய்து கொண்டிருக்கிறார்கள்.
பிராமணர்களின் கட்சி பாஜக என்றிருந்த நிலையை மாற்றி, பிற்படுத்தப்பட்டோரின் ஆதிக்கத்தின் கீழ்தான் பிராமணர்களான பாஜக நிர்வாகிகள் செயல்பட வேண்டும் என்ற சூழலை உருவாக்கிவிட்ட அண்ணாமலையை பழிவாங்குவதற்கு நாடாளுமன்றத் தேர்தல்தான் சரியான தருணம் என்று வெளிப்படையாகவே பேசி வருகிறார்கள்.
அண்ணாமலைக்கு எதிரான மனநிலையில்தான் பிராமணர்கள் அதிமுகமாக இருக்கிறார்கள் என்பதை வெட்டவெளிச்சமாக்கும் வகையில் பிரபல பாஜக ஆதரவு யூ டூயூப்பர் மாரிதாஸும், அண்ணாமலையின் தனிப்பட்ட அராஜக குணங்களை பகிரங்கமாகவே தோலுரித்துக் கொண்டிருக்கிறார்.
எஸ்.வி.சேகர், காயத்ரி ரகுராம் உள்ளிட்ட பிராமணர்கள் மற்றும் மாரிதாஸ் ஆகியோர் அண்ணாமலைக்கு எதிராக முன்வைக்கும் பகிரங்கமான குற்றச்சாட்டுகளை உண்மையென நம்பும் அளவுக்குதான் அண்ணாமலையின் அன்றாட நடவடிக்கைகளும் அமைந்திருக்கின்றன என்று கூறுகிறார் பாஜக மூத்த தலைவர். அண்ணாமலையின் அராஜகத்தை பகிரங்கமாகவே கண்டித்துவிட்டு, பாஜகவில் இருந்து வெளியேறி அதிமுகவில் இணைந்துவிட்ட காயத்ரி ரகுராம், இந்த நிமிடத்திலும் கூட அண்ணாமலை வெற்றி பெற்று விடக் கூடாது என்பதற்காகவே, 24 மணிநேரத்தையும் செலவழித்துக் கொண்டிருக்கிறார் என்கிற போது, அண்ணாமலை மீதான வெறுப்பு எந்தளவுக்கு இருக்கிறது என்பதை உள்வாங்கிக் கொள்ள வேண்டும் என்கிறார்கள்.
கோயம்புத்தூரில் பாரதிய ஜனதாவுக்கு வெற்றி கிடைக்கவில்லை என்றால், வேறு எந்தவொரு தொகுதியிலும் தாமரை வெற்றி பெற்றுவிடக் கூடாது என்றளவுக்கு அண்ணாமலை உள்குத்து அரசியலில் ஈடுபட்டிருப்பதுதான் அதிர்ச்சியளிக்கிறது என்கிறார் அவர். நெல்லையில் நயினார் நாகேந்திரன் எளிதாக வெற்றி பெற்றுவிடுவார் என்ற நிலையிருந்த நேரத்தில், 4 கோடி ரூபாயை பறக்கும் படை கைப்பற்றிய விவகாரத்தில், மனம் நொந்து போய்விட்டார் நயினார். வாக்குப்பதிவுக்கு இன்னும் 9 நாட்களே எஞ்சியிருக்கம் நேரத்தில் தேர்தல் ரத்தாகிவிடுமோ என்ற அச்சத்திலேயே ஒவ்வொரு மணிநேரத்தையும் கடந்து கொண்டிருக்கிறார் நயினார்.
நெல்லையில் வெற்றி வாய்ப்பு கேள்விக்குறியாகிவிட்ட நேரத்தில், கன்னியாகுமரியில் வெற்றி பெற்றுவிட முடியும் என்ற நம்பிக்கையோடு களமாடி வரும் பாஜக மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணனுக்கு அண்ணாமலையிடம் இருந்து பெருமளவிலான ஆதரவோ, பாஜக மேலிட தலைவர்களின் உற்சாகமான அறிவுரைகளோ கிடைக்கவில்லை என்ற வருத்தம் கன்னியாகுமரி பாஜக நிர்வாகிகளுக்கு அதிகமாகவே இருந்து கொண்டிருக்கிறது.
நிறைவாக, இன்றைய தேதியில் அண்ணாமலையின் சுற்றுப்பயணத்திலோ, கோவையில் பரப்புரையின் போதோ, அவருடனேயே எப்போதும் இருக்கும் பத்து பேரில், ஒருவர் கூட அண்ணாமலைக்கு உண்மையான விசுவாசத்துடன் இல்லை. அதைப்போல, பாஜகவின் வெற்றி மீதும் அக்கறை கிடையாது. அண்ணாமலையை வைத்து நாலு காசு சம்பாதித்துக் கொள்வதும் பிரபலமாவதும் தான் முக்கியம் என சுயநலத்துடன் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் 100 சதவீதம் உண்மை. இன்றைய தேதியிலேயே 2024 தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, தமிழக பாஜக தலைவர் பதவியில் அண்ணாமலை நீடிப்பாரா என்பதே பாஜக தலைமை முதல் அடிமட்ட தொண்டர்கள் வரை எழுப்பிக் கொண்டிருக்கும் பிரதான கேள்வியாகும் என்று நீண்ட பெருமூச்சுடன் பேச்சை நிறைவு செய்தார் பாஜக மூத்த தலைவர்.
பாஜக உட்கட்சிக்குள் தலைதூக்கியிருக்கும் அண்ணாமலைக்கு எதிரான எதிர்ப்பு உணர்வை, தங்களுக்கு சாதமாக்கிக் கொள்ள நாம் தமிழர் கட்சியினர் அதீத ஆர்வம் காட்டி வருகின்றனர். அவர்களது கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை, படுகேவலமாக விமர்சனம் செய்வதையே வாடிக்கையாக கொண்டிருக்கும் அண்ணாமலைக்கு, சரியான பாடத்தை புகட்ட வேண்டும் என்று சபதம் எடுத்திருக்கும் நாம் தமிழர் கட்சியினர், அண்ணாமலையின் வேட்புமனுவையே ஏற்கக் கூடாது என சட்ட நுணுக்களை முன்வைத்து அழுத்தமாக வாதாடியதையும் போராடியதையும் கோவை எம்பி வாக்காளர்கள் நன்றாகவே உணர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
ஊழல் கட்சிகளை புறக்கணியுங்கள்… மதவாத சக்தியை விரட்டியடியுங்கள் என்ற முழக்கங்களை கோவை எம்பி தொகுதி முழுவதும் தெறிக்க விடும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும், பணவசதி உள்பட தாராளமாக செய்து வருகிறார்கள் பாஜகவைச் சேர்ந்த மூத்த பிராமணர்கள் என்கிற அளவுக்கு அண்ணாமலைக்கு எதிராக ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு அலை எழுந்துள்ள நேரத்தில், நாம் தமிழர் கட்சி வேட்பாளரைவிட அண்ணாமலைக்கு குறைவான வாக்குகள் தான் கிடைக்க வேண்டும் என்று வெறியோடு களமாடுகிறார்கள் நாம் தமிழர் கட்சியினர்.
2024 தேர்தல் முடிவு, அண்ணாமலையின் அரசியல் வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி வைத்தாலும் அதிர்ச்சியடைய தேவையில்லை என்பதுதான் இன்றைய தேதியில் கோவை கள யதார்த்தமாகும் என்கிறார் பாஜக மூத்த தலைவர்.