தாரை இளமதி., சிறப்புச் செய்தியாளர்..
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கஞ்சா சங்கரை, எத்தனை நாட்கள் கடந்தாலும் தமிழக மக்கள் மறந்துவிடவே கூடாது என்ற எண்ணத்தில், யூ டியூப் பிரபலம் மாரிதாஸ் நாள்தோறும் வெளுத்து வாங்கி வருகிறார்.
திமுகவின் ஜென்ம விரோதியாக காட்சி தரும் மாரிதாஸ், யூ டியூப்பில் பேச ஆரம்பித்த நாள் முதலாகவே மறைந்த திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி குடும்பத்தையும் அவரது வாரிசுகளையும் அனல் வார்த்தைகளால் சுட்டெரித்து வருகிறார். தமிழ்நாட்டை விட தேசியத்தின் மீது அதிகளவு பாசம் கொண்டிருக்கும் மாரிதாஸ், பாரதிய ஜனதாவின் அதிதீவிர ஆதரவாளராகவே வாழ்ந்து வருகிறார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசை ஆதரித்து கடந்த பல ஆண்டுகளாக பேசி வரும் மாரிதாஸுக்கும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் ஏழாம் பொருத்தம் என்பதும் பார்வையாளர்கள் அறிந்த ஒன்றாகும். சட்டவிரோத செயல்களில் துணிந்து ஈடுபட்டு வரும் அமர் பிரசாத் ரெட்டியை, அண்ணாமலை பினாமியாக வைத்துக் கொண்டு சட்டவிரோதமாக பல நூறு கோடி ரூபாய் சம்பாதித்துவிட்டார் என்பதுதான் மாரிதாஸின் அதிரடியான குற்றச்சாட்டாகும்.
அண்ணாமலையையும், அமர் பிரசாத் ரெட்டியையும் கடும் சொற்களால் தோலுரித்த மாரிதாஸ், அதைவிட நூறு மடங்கு அதிகமாக சவுக்கு சங்கரை நேரம் கிடைக்கும் போதெல்லாம் வெளுத்து வாங்கி வருவதைப் பார்த்து, பாஜக மூத்த நிர்வாகிகளே அதிர்ந்து போய் இருக்கிறார்கள் என்பதை மறைப்பதற்கு இல்லை.
தமிழ்நாடு காவல்துறை சட்டம் ஒழுங்கு கூடுதல் இயக்குனர் அருண் ஐபிஎஸ்ஸோடு பெண் காவல் அதிகாரிகளை தொடர்புபடுத்தி தரக்குறைவாக விமர்சனம் செய்த சவுக்கு சங்கரின் இன்றைய நிலையை கண்டு சென்னையில் வசித்து வரும் பிரபல ஊடகவியலாளர்கள் ரொம்பவே பரிதாபடுகிறார்கள். சவுக்கு சங்கரின் கைதை நியாயப்படுத்தி பிரபல தொலைக்காட்சி செய்தியாளர்கள் ஒரு வார்த்தை கூட பேசவே இல்லை என்கிற போது, சவுக்கு சங்கர் கைது செய்யப்படுவதற்கு முன்பு இருந்தே மாரிதாஸ், சங்கரின் குரூர முகத்தை துணிந்தே அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறார் என்கிறார் என்பதால், அவரின் ஆளுமை குணத்தை ஜனநாயகவாதிகள் ஆரவாரமாக வரவேற்கவே செய்கிறார்கள்.
சங்கரை எந்தளவுக்கு விமர்சனம் செய்கிறாரோ அதற்கு இணையாகவே சங்கருக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்து ஆதரித்து வரும் அதிமுகவையும் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமியையும் நாக்கை பிடுங்கி கொள்ளும் அளவுக்கு திட்டிக் கொண்டிருக்கிறார் மாரிதாஸ். சவுக்கு சங்கரை திட்டினால் திமுக அரசுக்கு நல்ல பெயர் கிடைக்கும் என்ற உண்மை தெரிந்திருந்த போதும், சவுக்கு சங்கர் கைதையும், சிறை தண்டனையையும், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ததையும் பெண் போலீசார் பாதுகாப்பில் நீதிமன்றங்களுக்கு சங்கரை அழைத்து செல்வதையும் நியாயப்படுத்தி பேசியிருக்கிறார் மாரிதாஸ். சவுக்கு சங்கருக்கு எதிராக மாரிதாஸ் பேசும் ஒவ்வொரு வீடியோவுக்கும் வைக்கும் தலைப்புகள் கூட அட்டகாசமாகவே இருக்கிறது.
பேரம் பேசி வாயை விற்கும் சங்கர்.. நேற்று திமுக…இன்று எடப்பாடி..நாளை? ரெட் பிக்ஸ் பெலிக்ஸ் லீலைகள்.. கதை கட்டும் சவுக்கு சங்கர்.. 6 வது வழக்குப்பதிவு.. அய்யா எப்போ விடுவீங்க.. டயரை கழட்டிய சவுக்கு..எடப்பாடி சொன்ன பிரமாண்ட கூட்டனி கனவு காலி..சவுக்க எடுத்து சங்கர வெளுக்கனும்.. 25 லட்சம் மாதம் எப்டிடா.. இபிஎஸ் கூலிப்படையான சவுக்கு..பெலிக்ஸ் மீதும் குண்டாஸ். பெண் போலீஸ் அடிக்கறாங்க.. சவுக்கு கதறல்.. சவுக்கு மனைவி புகார். துணைவிக்கு வீடு..மனைவிக்கு டாட்டா.சவுக்கு இறுதி வழக்கு.
சவுக்கு சங்கருக்கு எதிராக மாரிதாஸின் ஒவ்வொரு வீடியோவும், தமிழக அரசியலில் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. திமுக அரசுக்கு எதிராக எடப்பாடியாரால் அரசியலே செய்ய முடியாத அளவுக்கு, சங்கரையும் எடப்பாடியாரையும் இணைத்து மாரிதாஸ் பேசியிருக்கும் விஷயங்கள், திமுக அரசுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் பெருமளவில் நிம்மதியை ஏற்படுத்தியிருக்கிறது என்கிறார்கள் காவல்துறை உயரதிகாரிகள்.
மாரிதாஸ் போல எண்ணற்ற யூ டியூப்பர்களின் பேட்டிகள், தமிழ்நாடு காவல்துறைக்கு ஆதரவாக இருப்பதால், சவுக்கு சங்கருக்கு மேலும் மேலும் பல வழக்குகளை போடுவதற்கு கோவை மாநகர போலீசாருக்கு உற்சாகத்தை தந்துள்ளது.
மாரிதாஸின் பேட்டிகள் மூலம் சவுக்கு சங்கரும், பிலிக்ஸ் ஜெரால்டும் ஆறு மாதத்திற்கு சிறையில் இருந்து வெளியவே வர முடியாது என்பது உறுதியாகிறது.
2024 ம் ஆண்டில் 6 மாதத்திற்கு மேல் சிறையில் இருக்க நேரிட்டால், ஒருவருடம் கழித்து 2025 ஆம் ஆண்டில் தான் சங்கரும், பிலிக்ஸும் வெளியுலகத்தையே பார்க்க முடியும். நீதித்துறையிலும் காவல்துறையிலும் பணியாற்றும் பெண்களை கண்ணியக்குறைவாக விமர்சனம் செய்தால் தண்டனை கடுமையாக இருக்கும் வகையில் ஒட்டுமொத்த காவல்துறையும் அதிரடி காட்டிக் கொண்டிருக்கிறது.
2022ம் ஆண்டில் நீதித்துறை பெண்களுக்கு எதிராக பேசி 6 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட போது சவுக்கு சங்கருக்கு சமூக ஆர்வலர்கள் தரப்பிலும், தமிழகத்தில் ஒன்றிரண்டு அரசியல் கட்சியினரும் கூட ஆதரவாக நின்றார்கள். சங்கர் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும், கருத்து சுதந்திரத்திற்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது என்றெல்லாம் முழக்கங்களை எழுப்பினார்கள். ஆனால், இன்றைய தேதியில் சவுக்கு சங்கருக்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்களை பூதக்கண்ணாடியை வைத்துதான் தேட வேண்டியிருக்கிறது.
கஞ்சா சங்கர் விவகாரத்தில், பொதுமக்களில் பெரும்பான்மையானோர் காவல்துறைக்கும் திமுக அரசுக்கும் ஆதரவாகவே நிற்கிறார்கள் என்பதை வெளிப்படையாகவே பார்க்க முடிகிறது.
2024 ஆம் ஆண்டு முடிவதற்குள் திமுகவே இருக்காது என்று வாய் சவடால் விட்ட சங்கரின் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் முடித்துவிட்டார்கள் காவல்துறை அதிகாரிகள்.
சவுக்கு சங்கரின் ஒட்டுமொத்த அராஜகமும் முடிவுக்கு கொண்டு வருவதற்கு திமுக ஆதரவு பத்திரிகையாளர்களை விட யூ டியூப்பர் மாரிதாஸ்தான் முழுவீச்சில் செயலாற்றிக் கொண்டிருக்கிறார். சங்கருக்கு எதிராக பேசினால் திமுகவுக்கு ஆதரவு கூடும் என்று பாஜக மூத்த நிர்வாகிகள் எச்சரித்த போதும், சவுக்கு சங்கர் விவகாரத்தில் மாரிதாஸ் பின்வாங்கவே இல்லை.
திமுக எதிர்ப்பு நிலையில் இருந்து மாரிதாஸ் சமரசம் செய்து கொண்டாரா என்ற சந்தேகம் பாஜக ஆதரவாளர்களிடம் எழுந்திருக்கும் நேரத்தில், சவுக்கு சங்கருக்கு எதிராக ஆயுள் முழுவதும் பேசுவேன் என வைராக்கியத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கும் மாரிதாஸை, திராவிட மாடல் அரசும், முதல்வர் மு.க.ஸ்டாலினும் கொண்டாட வேண்டும் என்று திமுகவின் உண்மையான விசுவாசிகள் வெளிப்படையாகவே குரல் கொடுக்கிறார்கள்.
மாரிதாஸ் அளவுக்கு சென்னையில் வசிக்கும் திமுக ஆதரவு ஊடகவியலாளர்களுக்கு தைரியம் இல்லாமல் போனது ஏன் என்பதுதான் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
சிறையில் இருந்து வெளியே வந்தால், ஊடகவியலாளர்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றியும் சவுக்கு சங்கர் தரக்குறைவாக பேசுவார் என்ற பயத்தின் காரணமாகவே, ஊடகவியலாளர்கள் மௌனமாகிவிட்டார்கள் என்ற விமர்சனமும் ஒருபுறம் இருக்க, தொலைக்காட்சிகளில் செய்தி ஆசிரியர்களாக உள்ள பிரபலங்களும்கூட, கஞ்சா சங்கருக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசாமல் தவிர்த்து வருவது, திராவிட சித்தாந்தவாதிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இத்தனைக்கும் பிரபல ஊடகவியலாளர்கள் அனைவருமே திமுகவையும் திராவிட மாடல் அரசையும் வெகுவாக பாராட்டி கொண்டிருப்பவர்கள்தான்.
சவுக்கு சங்கர் கைதும் கஞ்சா வழக்குப்பதிவும் சிறை தண்டனையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டிருப்பதும், மகளிர் காவலர்கள் பாதுகாப்பில் அழைத்து செல்லப்படுவது பற்றியும் குறிப்பிட்ட ஒருபிரிவினர் சமூக ஊடகங்களில் ஆவேசமாக பொங்கியவாறே , திமுக அரசையும், தமிழ்நாடு காவல்துறையையும் கடுமையாக விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
இப்படி சவுக்கு சங்கருக்கு மறைமுகமாக ஆதரவாக நிற்கும் ஒன்றிரண்டு பிரபல பத்திரிகையாளர்கள் மத்தியில், யூ டியூப்புகளுக்கு பேட்டி கொடுத்து பிரபலமாக இருக்கும் பத்திரிகையாளர்கள் பத்துக்கு மேற்பட்டவர்களும் கூட சவுக்கு சங்கர் கைதுயை நியாயப்படுத்தி ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்பதுதான் வியப்பிற்குரிய ஒன்று. இவர்கள் அனைவருமே திமுக அரசின் நிழலில் பாதுகாப்பாகவும் இருப்பவர்கள்தான் என்பதுதான் வெட்கக்கேடானது.
சவுக்கு சங்கர் சிறைக்கு சென்ற பிறகும் கூட, சிறை தண்டனையை முடித்துவிட்டு வெளியே வருவதற்கு குறைந்தது ஓராண்டு ஆகும் என்ற போதும் கூட பிரபல பத்திரிகையாளர்கள் மௌனமாக இருக்கும் நேரத்தில், ஊடகப் பயணத்தை பற்றி மட்டுமல்ல, தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி துளியும் கவலைப்படாமல் 10க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் சவுக்கு சங்கர் கைதை நியாயப்படுத்தி பேசிக் கொண்டே இருக்கிறார்கள்.
பிரபல ஊடகவியலாளர்களை கடந்து யூ டியூப் உலகத்தில் உச்சத்தில் இருந்து வரும் மாரிதாஸ், சாட்டை துரைமுருகன் ஆகியோர் சவுக்கு சங்கருக்கு எதிராக நாள்தோறும் பேசி வருவதுதான், திமுக அரசுக்கு நிம்மதியளிக்கும் அம்சமாகும்.
சாட்டை துரைமுருகனை விட சவுக்கு சங்கரின் மறுபக்கத்தை அக்குவேறு ஆணிவேராக கிழித்து தொங்கப்போட்டுக் கொண்டிருப்பவர் பாஜகவின் தீவிர ஆதரவாளரான மாரிதாஸ்தான்.
வெறும் பேச்சாக இல்லாமல், ஆசை நாயகி மாலதிக்கு 3 கோடி ரூபாய்க்கு பங்களா வாங்கி கொடுத்தது தொடர்பான ஆவணங்களை முதலில் வெளியிட்டவரும் மாரிதாஸ்தான். புலனாய்வு என்பது பத்திரிகையாளர்களுக்கு மட்டுமே கைவந்த கலை என்பதை உடைத்தெறிந்து, சங்கர் மற்றும் பெலிக்ஸ் ஆகிய இருவருமே மோசடி பேர்வழிகள்தான்.. திருட்டு கூட்டம்தான் என்பதை தகுந்த ஆதாரங்களோடு அம்பலப்படுத்தி வருபவர் மாரிதாஸ்.
மாரிதாஸின் அதிரடி பேட்டிகளால், சவுக்கு சங்கரை கண்டு எப்படியெல்லாம் ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் பயந்து கொண்டிருந்தார்களோ, அதற்கு மேலாக இன்றைக்கு சங்கரை திரைமறைவில் ஆதரித்த ஊடகவியலாளர்கள், அதிமுக நிர்வாகிகள், திமுக முன்னணி நிர்வாகிகள் என பல்வேறு தரப்பினரும் பயந்து நடுங்கி கொண்டிருக்கிறார்கள்.
பல ஆண்டுகளாக திமுகவை வசைபாடிய மாரிதாஸை கண்டு கோபத்தில் இருந்து வந்த திமுக பிரபலங்கள் நூற்றுக்கணக்கானோர், சவுக்கு சங்கர் விவகாரத்தில் மாரிதாஸின் ஆவேசத்தை மனம் திறந்து பாராட்டி வருகிறார்கள் என்பதுதான் 100க்கு 100 சதவீதம் உண்மையாகும்.
புதிதாக அரசியல் கட்சி தொடங்கி 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜயை தண்ணி குடிக்க வைப்பேன் என்று ஆணவத்தோடு பேசிய சங்கருக்கு ஆதரவாக எந்த ஊரிலும் பத்து பதினைந்து பேர் கூட ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை. வாய்ஸ் ஆப் சவுக்கு சங்கர் என்ற பெயரில் சமூக ஊடகங்களில் கம்பு சுற்றிய பத்து பதினைந்து பொடியர்களும் அட்ரஸ் இல்லாமல் மறைவாகிவிட்டார்கள்.
சவுக்கு சங்கர் ஊடகமே மூடுவிழா கண்டுவிட்டது.
சவுக்கு சங்கரின் முதல் மனைவியான நிலவுமொழி, விவகாரத்து பெற்ற பிறகும் கூட கஞ்சா சங்கரின் குரூர குணத்தை இப்போதும் அம்பலப்படுத்தி வருவதாலும், சங்கரின் சீடராக இருந்த பிரதீபும் சங்கரின் இருட்டு வாழ்க்கைக்கு டார்ச் லைட் அடித்துக் கொண்டிருப்பதாலும், பல நாள் திருடன் அகப்படுவன் என்ற கதையாக, சங்கரின் உண்மை முகத்தை பொதுமக்களும் தற்போது முழுமையாக உணர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் திராவிட மாடல் அரசுக்கும், தமிழக காவல்துறைக்கும் இன்றைய தேதியில் நிம்மதி தரக்கூடிய அம்சமாகும்..