தாரை.வே.இளமதி, சிறப்புச் செய்தியாளர்..
2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதாவுடன் கைகோர்த்து களத்தில் அதிமுக நிற்காது என்று வைராக்கியத்துடன் அதன் பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி எடுத்த தீர்க்கமான முடிவை, அதிமுகவில் இருந்து தூக்கியெறிப்பட்ட பச்சோந்திகளின் ஆதரவாளர்களும், மூத்த ஊடகவியலாளர்களும் துளியும் மனசாட்சியின்றி இன்றைக்கும் கடுமையாக விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று குமறுகிறார்கள் இபிஎஸ்ஸின் தீவிர விசுவாசிகள்.
சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகியவற்றின் மிரட்டல்களுக்கு எல்லாம் பயப்படாமல், தனித்துப் போட்டி என்று எடப்பாடியார் எடுத்த துணிச்சலான முடிவால்தான், தமிழ்நாட்டின் சுயமரியாதை, இந்தியாவை கடந்து உலகம் முழுவதும் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது என்று உருக்கமாக கூறுகிறார்கள் மறைந்த புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி செல்வி ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசிகள்.
பதவிக்காக அதிமுக ஒருபோதும் சோரம் போகாது என்பதை எடப்பாடியார் நிரூபித்துள்ளதால், அவரை வாழ்நாள் முழுவதும் எதிர்த்துக் கொண்டிருக்கும் அற்பர்களும் புரிந்துகொள்ளும் அருமையான தரூணமாக அமைந்துவிட்டது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் என்கிறார்கள் இபிஎஸ்ஸின் தீவிர விசுவாசிகள்.
இதுதென்ன கலாட்டா? குப்புற விழுந்துவிட்ட பிறகும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று கெத்து காட்டுவது எந்தவகையில் நியாயம்? இபிஎஸ்ஸின் விசுவாசிகளிடம் கேள்வியை முன்வைத்த போது பொரிந்து தள்ளிவிட்டார்கள்.
370 தொகுதிகளில் உறுதியாக வெற்றி பெறுவோம். 400 தொகுதிகளை கைப்பற்றுவோம் என கடந்த ஓராண்டுக்கு மேலாக முழங்கிய அகில இந்தியா பாஜக தலைவர்கள், மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பதற்கு தனிப் பெரும்பான்மைகூடகிடைக்காததால், தெலுங்கு தேச தலைவரையும், ஐக்கிய ஜனதா தலைவரையும் சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்றுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் முன்வைக்கும் நிபந்தனைக்கு எல்லாம் செவிமடுத்தால்தான் மூன்றாவது முறையாக பிரதமர் பதவியில் அமர முடியும் என்ற பரிதாப நிலையில் இருக்கிறார் பிரதமர் மோடி.
ஆந்திராவுக்கும் பீகாருக்கும் இன்றைக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் முக்கியத்துவம் எடப்பாடியார் கொஞ்சம் சமரசம் செய்து கொண்டிருந்தால் தமிழ்நாட்டிற்கும் கிடைத்திருக்கும்.
இந்திய அரசியல் வரலாற்றில் அழிக்கவே முடியாத அளவுக்கு பொன் எழுத்துகளால் அதிமுகவின் செல்வாக்கு பதிவாகியிருக்கும் என்றாலும்கூட, காலத்திற்கும் நிலை நிற்க கூடிய பொன்னான வாய்ப்பை தான் தூக்கியெறிந்திருக்கிறார் எடப்பாடியார் என்று பாராட்டுவதற்கு மூத்த ஊடகவியலாளர் உள்பட யாருக்குமே மனம் வரவில்லையே என்பதுதான் வேதனையை தருகிறது என்கிறார்கள் பதவி, பணத்திற்கு இன்றைக்கும் விலை போகாத அதிமுக நிர்வாகிகள்.
பேரறிஞர் அண்ணாவை பற்றி செல்வி ஜெயலலிதாவைப் பற்றி, கூட்டணி தர்மத்திற்கு விரோதமாக தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை முன்வைத்த விமர்சனத்தைப் பற்றி கவலைப்படாமல், நாஞ்சில் சம்பத் சொல்வதைப் போல, அவமானங்களை துடைத்தெறிந்துவிட்டு, தேசிய ஜனநாயக கூட்டணியில் நாடாளுமன்றத் தேர்தலை அதிமுக எதிர்கொண்டிருந்தால், தேர்தல் முடிவுகளின்படி 18 தொகுதிகளில் அதிமுக பாஜக கூட்டணி உறுதியாக வாகை சூடியிருக்கும். மைனார்ட்டி பாஜகவுக்கு தமிழ்நாட்டில் இருந்து 18 எம்பி தொகுதிகள், உயிர் மூச்சுப் போல அசுர பலத்தை கொடுத்திருக்கும்.
புதுடெல்லியில் இன்றைய தேதியில் சந்திரபாபு நாயுடுவுக்கும், நிதிஷ்குமாருக்கும் என்ன மரியாதை கிடைத்துக் கொண்டிருக்கிறதோ, அந்த மரியாதை எடப்பாடி பழனிசாமிக்கும் கிடைத்திருக்கும். இந்தியாவில் மட்டுல்ல, உலக முழுவதும் கூட எடப்பாடி பழனிசாமியின் பெயரும், அதிமுகவின் செல்வாக்கும், தமிழ்நாட்டின் சுயமரியாதையும் விவாதப் பொருளாக மாறியிருக்கும்.
தமிழகம் நீங்கலாக, இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பாஜகவின் வெற்றிக்கொடி பறந்து கொண்டிருக்கும்போது, தமிழ்நாட்டின் தனித்த மாண்பை அகிலமே உணர்வதற்கும், சனாதனத்திற்கும் சர்வாதிகாரத்திற்கும் அடிபணியாதவர்கள் தமிழர்கள் என்ற வரலாற்று பெருமையை தேடி தருவதற்கும் எடப்பாடியாரிடம் மிதமிஞ்சியிருக்கும் தன்மான உணர்வுதான் என்பதை பாராட்டுவதற்கு கூட அதிமுக முன்னணி தலைவர்களில் ஒருவர் கூட வெளிப்படையாக பாராட்டுகளை தெரிவிக்காததுதான் தேர்தல் தோல்வியை விட அதிக துயரத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்கிறார்கள் அதிமுகவின் மூத்த நிர்வாகிகள்.
நீலகிரி,கோவை,பொள்ளாச்சி, திருப்பூர், நாமக்கல்,சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ஆரணி, கடலூர்,சிதம்பரம், மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம்,தென்காசி ஆகிய தொகுதிகளில் அதிமுக பாஜக கூட்டணி வெற்றி பெற்றிருக்கும் என்பதை தேர்தல் முடிவுகள் உறுதிபடுத்தியுள்ள நிலையில், 2019 கூட்டணி, அப்படியே நீடித்திருந்தால், பாஜகவுக்கு 4, பாமகவுக்கு 4, தேமுதிகவுக்கு 2 என்ற கணக்கில் இன்றைய தேதியில் எம்பிக்கள் இருந்திருப்பார்கள்.
அதிமுகவின் செல்வாக்கு மீது நம்பிக்கை வைக்காதது மட்டுமல்ல, அதிமுகவின் தன்மானத்தையும் உரசிப் பார்த்ததால்தான், டெல்லியில் அனைத்து மாநில பாஜக தலைவர்களும், கூட்டணிக் கட்சித் தலைவர்களும் கொண்டாட்டத்தில் திளைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில், தமிழக பாஜக தலைவர்களும், அதன் கூட்டணிக் கட்சித்தலைவர்களும் டெல்லியை கண்டு பயந்து நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
மூத்த ஊடகவியலாளரும் பிரபல யூ டியூப்பருமான ரங்கராஜ் பாண்டே, கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக ஆரூடமாக சொல்லி வந்தது நடந்துவிட்டதே என்று வியக்கும் அளவிற்கு பத்து எம்பிக்களுடன் டெல்லி சென்று இரண்டு மூன்று கேபினேட் அமைச்சர்களுன் வெற்றித்திருமகனாக தமிழகம் திரும்பியிருப்பார் எடப்பாடியார் என்று ஒருவித விரக்தியுடனேயே கூறுகிறார்கள் அதிமுக முன்னணி தலைவர்கள்.
அதேசமயம், திமுக ஆட்சிக்கு எதிரான அதிருப்தி அலை, எதிர்க்கட்சிகளுக்கு மகத்தான வெற்றியை தேடி தரும் என்பதை உணர்ந்துகொண்டவராகவே தன்னை வெளிப்படுத்திய எடப்பாடியார், தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை நீக்காத வரை பாஜகவை மீண்டும் தோளில் சுமப்பதற்கு தயாராக இல்லை என்பதை சர்வதிகாரம் படைத்த காபந்து பிரதமர் மோடி, அவரது தலைமையிலான உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரிடம் துணிச்சலோடு கூறியதை, ஆளுமைமிகுந்த தலைவருக்கு உரிய குணமாகவே பார்த்து மகிழ்ச்சியடைந்து கொள்கிறோம் என்கிறார்கள்.
அதைவிட கூடுதல் மகிழ்ச்சியை தரக்கூடிய அம்சம் என்றால், ஆளும்கட்சி தலைமையிலான கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றிந்தாலும் கூட கடந்த 2019 போல வரும் ஐந்தாண்டுகளுக்கும் நாடாளுமன்றத்தில் குட்டி தூக்கம் போடுவதற்குதான் டெல்லி சென்று வருவார்கள் என்பதை நினைக்க, நினைக்க, தங்களின் சோகம் கூட காணாமல் போய்விடுகிறது என்கிறார்கள் எடப்பாடியாருக்கு மிகமிக நெருக்கமான அதிமுக தலைவர்கள்.
திமுக மீதான ஜென்ம பகை என்று அர்த்தப்படுத்திக் கொள்ளக்கூடாது என்று கனிவாக கூறும் அதே அதிமுக தலைவர்கள், பீகாரில் நிலவும் அரசியல் நாகரிகம் போல, எடப்பாடியார் ஒருவேளை பாஜக மேலிட தலைவர்களின் அழைப்பை ஏற்று டெல்லி செல்லும்நிலை ஏற்பட்டிருந்தால், ஆளும்கட்சித் தலைவர் தன்னுடனே எதிர்க்கட்சித்தலைவரும் பயணம் செய்யும் அளவிற்கு அரசியல் பகையை மறந்து இருப்பாரா என்பதை கற்பனை கூட செய்து பார்க்க முடியாத நிலையில்தான் தமிழக அரசியல் கவலையளிக்கிறது என்றார்கள்.
பெரும்பான்மையில்லாத மத்திய பாஜக அரசில் இடம் பெற்று செல்வாக்குமிகுந்த துறைகளின் அமைச்சர்களாக அதிமுக எம்பிகள் வலம் வரும் காட்சிகள் கண் முன்னே நிழலாடினாலும் கூட, அதிமுகவின் தன்மான உணர்வை தட்டிப் பார்த்ததால், பாஜகவுக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பை, மோடியும், அமித்ஷாவும் வரும் 5 ஆண்டுகளுக்கும் சமானதானப்படுத்திக் கொள்ளவே முடியாத அளவுக்கு நிலைத்த துன்பத்தை ஏற்படுத்திவிட்டவர் எடப்பாடியார் என்று நினைக்கும் போது, ஆளுமைமிகுந்த தலைவர்தான், அதிமுகவை வழிநடத்திக் கொண்டிருக்கிறார் என்ற பெருமிதம் ஏற்படுகிறது என்கிறார்கள் அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள்.
இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மையினரை நம்பி ஏமாந்துவிட்டார் எடப்பாடியார் என்று வசைபாடுபவர்களுக்கு ஒரு உண்மை புலப்படாது, பத்து எம்பியோ, ஐந்து எம்பியோ அதிமுகவுக்கு இன்றைய தேதியில் கிடைத்திருந்தால், மைனாரிட்டி அரசை நிலைநிறுத்திக் கொள்ள அதிமுகவின் அனைத்து எம்பிக்களையும் பாஜக எம்பிக்களாகவே, ஆட்சி அதிகாரத்தை வைத்து மோடியும், அமித்ஷாவும் சுவீகரித்துக் கொண்டுவிடுவார்கள் என்பதும், திருவள்ளுவருக்கே காவி சாயம் பூசம் கயமைத்தனம் நிறைந்தவர்களுக்கு, அதிமுகவை அடையாளம் இல்லாமல் செய்வதற்கு கொஞ்சம் கூட தயக்கம் காட்டமாட்டார்கள்.
தேர்தல் தோல்வியை விட விலை போய்விட்டார்கள் அதிமுக எம்பி என்ற அவப்பெயரில் இருந்து தடுத்து நிறுத்தியிருக்கிறார் எடப்பாடியார் என்பதும், இன்றைய தேதியில் மோடியை மூன்றாவது முறையாக பிரதமர் பதவியில் அமர வைப்பதற்கு தனித்த ஆர்வம் காட்டும் நிதிஷ்குமாருக்கும், சந்திரபாபு நாயுடுவுக்கும் பாஜகவின் துரோகங்கள், மட்டற்ற மகிழ்ச்சியையா தந்து கொண்டிருக்கும்.
உள்ளே அழுகிறேன்.. வெளியே சிரிக்கிறேன். நல்ல வேடம்தான் வெளுத்து வாங்குகிறேன் என்பதை போல, எடப்பாடியாரும் டெல்லி திருவிழா கூட்டத்தில் ஐக்கியமாகிவிடும் ஆபத்தில் இருந்து அதிமுக தப்பித்திருக்கிறதே என்பதும், அண்ணாமலையின் அரைவேக்காட்டு அரசியலால் தெரிந்தோ, தெரியாமலோ சட்டப்பேரவைக்கு பாஜக உறுப்பினர்களை அனுப்பி வைத்ததைப்போல, நாடாளுமன்ற மக்களவையில் பாஜகவின் புகழை பாடி, தமிழகத்திற்கு என்று தனித்த பெருமையாக இருக்கும் சுயமரியாதைக்கு இழுக்கு தேடி தராத வகையில் அமைந்துவிட்டது எடப்பாடியாரின் தேர்தல் வியூகம் என்பதை நினைக்கும் போதெல்லம் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை உற்சாகத்தோடு எதிர்கொள்வதற்கு இன்றைய தேதியிலேயே ஆற்றல் பிறந்துவிட்டது என்று உணர்ச்சிக் கொந்தளிப்பில் உரைக்கிறார்கள் எடப்பாடியாரின் தீவிர விசுவாசிகள்..
இது எப்படியிருக்கு…..