Sat. Nov 23rd, 2024

இளமதி வேலாயுதம்., சிறப்புச் செய்தியாளர்.

வரலாற்று சாதனையாக 3 வது முறையாக பிரதமர் பதவியில் அமர்ந்திருக்கிறார் நரேந்திர மோடி. மத்திய பாஜக அரசு என்பதற்குப் பதிலாக தேசிய ஜனநாயக கூட்டணி அரசாக அமைந்ததிலேயே மோடி, அமித்ஷா ஆகியோருக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்கிறார்கள் பாஜக மேலிட தலைவர்கள்.
2014 முதல் 2024 வரை பத்தாண்டு காலம் மோடியும், அமித்ஷாவும் நினைத்தை எல்லாம் சாதித்து வந்த நிலையில், 3 வது முறையாக பிரதமர் பதவியில் அமர்வதற்கு கூட்டணிக் கட்சிகளின் நிபந்தனைகளை ஏற்று, அமைச்சரவை அமைப்பதற்கும், வழிநடத்துவதற்கும் ஒவ்வொரு நாளும் விழும் முட்டுக்கட்டைகளைப் பார்த்து மோடியும் அமித்ஷாவும் உண்மையிலேயே கவலையில் ஆழ்ந்துள்ளதாக கூறுகிறார்கள்.


இப்படிபட்ட பின்னணியில், தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட பாஜக வெற்றி பெறாத நிலையில், மத்திய அமைச்சர் பதவியை எதிர்பார்த்து, தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை, முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் டெல்லியில் முகாமிட்டு, பாஜக மேலிட தலைவர்களுக்கு கொடுத்த நெருக்கடி கொஞ்சம் நஞ்சமல்ல என்கிறார்கள் தமிழக பாஜக நிர்வாகிகள்.
அண்ணாமலையின் அரைவேக்காட்டுத்தன அரசியலால்தான் அதிமுகவுடன் முறிவு ஏற்பட்டுவிட்டது. கூட்டணியில் நீடித்திருந்தால் தமிழகத்தில் இருந்து அதிமுக பாஜக கூட்டணி எம்பிக்கள் 20 பேர் டெல்லிக்கு சென்றிருப்பார்கள். சந்திரபாபு நாயுடு, நிதித்குமார் ஆகியோருடன் மத்திய பாஜக கெஞ்சிக் கொண்டிருக்க வேண்டிய நிலைமையே ஏற்பட்டிருக்காது என்று கூறும் தமிழக பாஜக முன்னாள் தலைவர்கள், ஒரு எம்பியை வெற்றி பெற வைக்க முடியாத அண்ணாமலை, மத்திய அமைச்சரவையில் இடம் கேட்டு மோடியுடனே மோத தொடங்கிவிட்டார் என்பதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை என்கிறார்கள்.

மகாராஷ்டிரம், உத்தரப்பிரசேதத்தில் கடந்த 2019 தேர்தலில் பாஜக பெற்ற வெற்றியை விட, தற்போதைய தேர்தலில் குறைவாக வெற்றி பெற்றதையடுத்து, இரண்டு மாநிலங்களைச் சேர்ந்த பாஜக தலைவர்கள், தங்கள் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்கள். அவர்களுக்கு இருக்கும் மானம் மரியாதை, சூடு சொரணை கொஞ்சமாவது அண்ணாமலைக்கு இருக்குமானால், தேர்தல் தோல்விக்கு தார்மீகமாக பொறுப்பு ஏற்று, தலைவர் பதவியை ராஜினாமா செய்து இருக்க வேண்டும். அதற்குப் பதிலாக பிரதமர் மோடிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் டெல்லியில் முகாமிட்டு, பாஜக மேலிட தலைவர்களுக்கு அண்ணாமலை கொடுத்து வரும் குடைச்சலை பார்த்து, தமிழக பாஜக மூத்த நிர்வாகிகள் கொதிப்படைந்திருக்கிறார்கள் என்கிறார்கள்.

மஹாராஷ்டிரா மாநிலத்தில் பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி அதிர்ச்சிக்கரமாக தோல்வியடைந்ததையடுத்து, அம்மாநில துணை முதல்வரும் பாஜக கூட்டணிக்கு தலைமை வகித்துவருமான தேவேந்திர பட்னாவிஸ், தேர்தல் தோல்விக்குப் பொறுப்பு ஏற்று, துணை முதல்வர் பதவியில் இருந்து விலகுவதற்கு முன்வந்துள்ளார்.
மஹாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 48 தொகுதிகளில், கடந்த 2019 தேர்தலில் பாஜக 23 இடங்களில் வெற்றிப் பெற்றது. அப்போது, பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்த பிளவுபடாத சிவசேனா, 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா மற்றும் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸுடன் (இருகட்சிகளிலும் பிளவுப்பட்ட அணிகளோடு பாஜக கூட்டணி) இணைந்து போட்டியிட்ட 28 தொகுதிகளில் 9 இடங்களில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றது.

பத்தாண்டுகளுக்கு முன்பு 2014 ல் நடைபெற்ற தேர்தலில் 23 இடங்களில் வெற்றி பெற்று, தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்திய பாரதிய ஜனதா கட்சி, மகாராஷ்டிராவில் செல்வாக்கு மிகுந்த சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளில் பிளவு ஏற்படுவதற்கு தூண்டுதலாக இருந்தது என்ற கோபத்தில், 2014 மற்றும் 2019 ல் பாஜகவுக்கு அமோக ஆதரவு தந்த வாக்காளர்கள், 2024 ல் பாஜகவை பழிவாங்கி விட்டார்கள் என்று அரசியல் திறனாய்வாளர்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜகவுக்கு ஏற்பட்ட சரிவும் கூட மத்தியில் தனித்த பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியாத நிலை உருவாவதற்கு முக்கிய காரணம் என்று பாஜக மேலிட தலைவர்கள் வெளிப்படையாகவே கருத்துகளை முன்வைத்தார்கள். இப்படிபட்ட சூழலில் 2013 ஆம் ஆண்டில் இருந்தே மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக கூட்டணிக்கு தலைமை பொறுப்பு ஏற்றிருக்கும் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், தோல்விக்குப் பொறுப்பு ஏற்க தயாராகிவிட்டார்.

பட்னாவிஸை போலவே, உத்தரப்பிரதேச மாநில பாஜக தலைவர் சவுந்தரி பூபேந்திர சிங்கும், தேர்தல் தோல்விக்குப் பொறுப்பு ஏற்று பாஜக தலைவர் பதவியில் இருந்து விலகுவதற்கு முன்வந்திருக்கிறார். அந்த மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நேரத்தில், 2014 மற்றும் 2019 ஆகிய தேர்தல்களில் கைப்பற்றிய தொகுதிகளை விட சரி பாதி அளவுக்கு வெற்றி குறைந்து, மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 33 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

2019 தேர்தலில் பெற்ற எம்பி தொகுதிகளில் 29 இடங்களை பாஜக இழந்துள்ளநிலையில், மத்திய, மாநில பாஜக ஆட்சிகளின் மீதான கோபத்தினால்தான் அவமானகரமான தோல்வி ஏற்பட்டிருக்கிறது என்ற அடிப்படையில், முதல்வர் பதவியில் இருந்து யோகி ஆதித்ய நாத்தான் தார்மீக அடிப்படையில் பதவி விலக முன்வந்திருக்க வேண்டும். ஆனால், தேர்தல் தோல்விக்கு பொறுப்பு ஏற்க யோகி தயக்கம் காட்டி வருவது, உத்தரப்பிரதேச பாஜக மூத்த தலைவர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மற்றும் உத்தரப்பிரதேச மாநில பாஜக தலைவர்களிடம் காணப்படும் அரசியல் பக்குவம், தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலையிடம் எதிர்பார்க்கவே முடியாது என்று ஆதங்கப்படுகிறார்கள் பாஜக முன்னணி தலைவர்கள். “தமிழ்நாட்டில் பாஜகவுக்கு ஏற்பட்ட அவமானகரமான தோல்வியை பற்றி ஆராயாமல், தேர்தல் நேரங்களில் சாணக்கியதனத்துடன் கூட்டணி அமைப்பதற்குப் பதிலாக, பாஜகவின் செல்வாக்கை நிரூபிக்கிறேன் என்று வீம்பு காட்டி, 2014 மற்றும் 2019 ஆகிய பத்தாண்டுகளில் தனித்த பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சியை அமைத்த பிரதமர் மோடிக்கு, உலகளவில் இழுக்கு ஏற்படும் வகையில் 2024 தேர்தலில் அதிமுகவுடனான கூட்டணியை தகர்த்து,பாமகவைப் போல செல்வாக்கு இல்லாத கட்சிகளோடு கூட்டணி அமைத்து, பாஜகவுக்கு மட்டுமே தனியாக 5,6 எம்பிகள் கிடைத்திருக்கும் பொன்னான வாய்ப்பை கெடுத்தவர்தான் அண்ணாமலைதான்” என்று ஆவேசம் குறையாமல் பேசுகிறார்கள் அண்ணாமலைக்கு மிகமிக நெருக்கமான பாஜக மூத்த நிர்வாகிகள்.

“அதிமுக இல்லாமல் தேர்தலை சந்தித்தால், தமிழக பாஜகவுக்கு மட்டுமல்ல, அகில இந்திய பாஜகவுக்கும் கடும் பாதிப்பு ஏற்படும் என்று மூத்த ஊடகவியலாளர்கள் துக்ளக் ரமேஷ், ரங்கராஜ் பாண்டே, யூ டியூப் பிரபலம் மாரிதாஸ் உள்ளிட்டோர் ஓராண்டுக்கு மேலாக அழுத்தம் திருத்தமாக கூறி வந்ததை கூட கவனத்தில் கொள்ளாமல், தான்தோன்றித்தனமாக அண்ணாமலை எடுத்த முடிவுதான், தமிழகத்தில் பாஜக சந்தித்த அவமானகரமான தோல்விக்கு முழுமுதற் காரணமாகும். தேர்தல் பிரசாரத்தின் போது ஆளும்கட்சியான திமுகவை அதிகமாக விமர்சனம் செய்யாமல், கூட்டணியிலேயே இல்லாத அதிமுக மூத்த தலைவர்களை தரக்குறைவாக விமர்சனம் செய்ததோடு, அவர்களை சீண்டும் வகையில் அண்ணாமலை செயல்பட்டதால்தான், ஒன்றிரண்டு தொகுதிகளில் கூட பாஜக வெற்றி பெற முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது.

தேர்தல் தோல்வியால் ஏற்பட்ட அவமானத்தைவிட, பாஜக மேலிடம் தேர்தல் செலவுக்காக வழங்கிய பல நூறு கோடி ரூபாயை, முறையாக செலவிடாமல் பாஜக மாவட்ட நிர்வாகிகள் மோசடி செய்துவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டும் பெருத்த அவமானத்தை தந்துவிட்டது. அதிலும் முக்கியமாக தென்சென்னை தொகுதியில் போட்டியிட்ட தமிழக பாஜக முன்னாள் தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், தன் தொகுதியிலேயே பணம் முறையாக பட்டுவாடா செய்யாமல், பலர் மோசடி செய்துவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டை பகிரங்கமாக வைத்தது மட்டுமின்றி, காவல்நிலையத்திலும் புகார் கொடுத்ததும், தமிழக பாஜகவுக்கு மிகப்பெரிய இழுக்கை தேடி தந்துவிட்டது.

இப்படி அண்ணாமலைக்கு எதிராக கீழ்மட்டம் முதல் மேல்மட்டம் வரை பாஜக நிர்வாகிகள் பகிரங்கமாகவே குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நேரத்தில், பாஜக களம் கண்ட 23 தொகுதிகளில் ஏற்பட்ட தோல்வி குறித்து மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசிக்காமல், மீண்டும் மீண்டும் அதிமுகவையே சீண்டும் வேலையிலேயே அண்ணாமலை ஆர்வமாக இருப்பதுதான் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது” என்கிறார்கள் பாஜக மூத்த தலைவர்கள். 2026 வரை தமிழக பாஜக தலைவராக அண்ணாமலையே நீடித்தால், ஆளும்கட்சியான திமுகவுக்குதான் சாதகமாக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அமையும் என அச்சத்தில் உள்ள தமிழக பாஜக மூத்த தலைவர்கள், தமிழிசை வாயிலாக அண்ணாமலையை தலைவர் பதவியில் இருந்து அப்புறப்படுத்த காய் நகர்த்தி வருகிறார்கள்.

அண்ணாமலைக்கு எதிராக களமாடி வரும் பாஜக மூத்த நிர்வாகிகள் அனைவரும் ஓரணியில் திரண்டு தமிழிசைக்கு ஆதரவு தருவதால், அண்ணாமலையை தலைவர் பதவியில் இருந்து அகற்றிவிட்டு, மீண்டும் தமிழக பாஜக தலைவர் பதவியில் அமர்ந்து தமிழகத்தில் எழுச்சியோடு அரசியல் களம் ஆற்ற வியூகம் வகுத்துவிட்டார் தமிழிசை என்கிறார்கள் அவரது தீவிர விசுவாசிகள்.


அண்ணாமலையின் திட்டம்தான் என்ன? அவருடன் 24 மணிநேரமும் சுற்றிக் கொண்டிருக்கும் பாஜக மூத்த நிர்வாகியிடம் கேள்வியை முன்வைத்த போது, அவர் அளித்த விளக்கம், அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
“தமிழகத்தில் பாஜகவின் தோல்விக்கு அண்ணாமலையை மட்டுமே காரணமாக முன்வைப்பதை அவர் ரசிக்கவில்லை. அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்பதை நாடாளுமன்ற தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்பிருந்தே அவர் பகிரங்கமாகவே கூறி வருகிறார். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரிடம் அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து எடப்பாடியார் உள்ளிட்ட அதிமுக முன்னணி தலைவர்கள் நேரிடையாகவும் மறைமுகமாகவும் அழுத்தம் கொடுத்ததால்தான், அதிமுகவுடன் எப்போதுமே கூட்டணி வேண்டாம் என்ற பிடிவாதம் அண்ணாமலைக்கு அதிகமாகிவிட்டது.

அதிமுக தலைமையிலான கூட்டணியோடு தேர்தலை சந்தித்தால்தான் பாஜகவுக்கு வெற்றி கிடைக்கும் என்ற உண்மை பாஜக மேலிட தலைவர்களுக்கு தெரியாதா? அப்படியிருந்தும் அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று அண்ணாமலை திரும்ப திரும்ப கூறியபோது, கூட்டணி விவகாரத்தில் அவரின் பேச்சுக்கு மோடியோ, அமித்ஷாவோ கடிவாளம் போடாதது ஏன்? தனித்துப் போட்டியிட்டால்தான் பாஜகவின் செல்வாக்கு தமிழகத்தில் அதிகரிக்கும் என்று அண்ணாமலை கூறியதை உற்சாகப்படுத்தியவர்களும், தட்டிக் கொடுத்தவர்களும் மோடியும், அமித்ஷாவும்தானே. இருவரும் தமிழகத்திற்கு அடிக்கடி வந்து பிரசாரம் செய்ததும், திருக்குறள், பாரதியார் பாடல்களை உரக்க கூறியதும், புதிய நாடாளுமன்றத்தில் தமிழ் ஆன்மிக பெரியவர்கள் ஆகியோடு செங்கோல் நிறுவியதும் தேர்தல் வெற்றிக்கு கை கொடுக்காத போது, அண்ணாமலையின் தேர்தல் வியூகத்தை மட்டுமே காரணமாக கூறி, அவரை தனிமைப்படுத்துவதை அவரது விசுவாசிகள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள்” என்று பொங்கி தள்ளினார் அண்ணாமலையின் தீவிர விசுவாசி.


“பாஜக தலைமையை ஏற்க மாட்டோம் என எடப்பாடியார் தலைமையிலான அதிமுக தீர்க்கமாக முடிவெடுத்த போது, இபிஎஸ் உள்ளிட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக உள்ள ஊழல் வழக்குகளை தூசி தட்டியெடுத்து சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணையை துரிதப்படுத்தியிருந்தால், சிறைச்சாலைக்கு பயந்து கொண்டு பாஜக கூட்டணியில் அதிமுக இணைந்திருக்கும். எடப்பாடியாரையும் அவருக்கு ஒத்து ஊதும் ஒன்றிரண்டு அதிமுக முன்னாள் அமைச்சர்களையும் அடிபணிய வைப்பதற்கு பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் துணியாததால்தான், எடப்பாடியாரின் கூட்டத்திற்கு துளிர்விட்டு போய்விட்டது.

அண்ணாமலை தலைமையை மூன்று முறை முதல்வர் பதவியில் அமர்ந்த ஓ.பன்னீர்செல்வமும் திஹார் சிறையில் அடைத்து பழிவாங்கியதையே மறந்துவிட்டு, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் அண்ணாமலையின் தலைமையை ஏற்றுக் கொண்டபோது, 2017 முதல் 2021 வரை மத்திய பாஜக அரசின் தயவில் ஆட்சி அதிகாரத்தில் நீடித்து பல்லாயிரம் கோடி ரூபாய்க்கு ஊழல் செய்த எடப்பாடியார் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு மட்டும் தன்மானம் எங்கிருந்து வந்தது?

2023 ஆம் ஆண்டிலேயே அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஒன்றிரண்டு பேரை திஹார் சிறையில் அடைத்திருந்தால், தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறுவதற்கான சூழல் அமைந்திருக்கும். வாலை விட்டுவிட்டு தும்பை பிடித்த கதையாக, தேர்தலுக்கு சிறிது நாட்களுக்கு முன்பு அதிமுக கூட்டணிக்கு பாஜக மேலிட தலைவர்கள் முயற்சி செய்ததுகூட, தமிழக பாஜகவிற்கு கிடைத்திருந்த நற்பெயரை கெடுக்கும் செயலாகதானே அமைந்தது. தேர்தல் தோல்விக்கு தனிப்பட்ட முறையில் அண்ணாமலை பொறுப்பு ஏற்க வேண்டும் என்று பாஜக மேலிட தலைவர்கள் அழுத்தம் கொடுத்தால், மோடியையும், அமித்ஷாவையும் நேரடியாக எதிர்த்துக் கொண்டு தனிக்கட்சி தொடங்குவதற்கு கூட அண்ணாமலை தயங்க மாட்டார் என்பதுதான் தற்போதைய நிலைமை.

அண்ணாமலையை மட்டுமே நம்பி பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் தமிழகத்தில் இன்றைய தேதியில் இருக்கிறார்கள். 2026ல் முதல் அமைச்சர் நாற்காலியில் அமர்ந்துவிட வேண்டும் என்ற வெறியோடு அரசியல் செய்து கொண்டிருக்கிறார் அண்ணாமலை. தமிழ்நாட்டு அரசியலில் தனித்த ஆளுமையாக நிற்க வேண்டும் என்பதுதான் அண்ணாமலையின் திட்டமாகும். தமிழக பாஜக தலைவர்களை எதிர்ப்பதில் எந்தளவுக்கு உறுதியாக இருக்கிறாரோ அதேஅளவுக்கு தலைவர் பதவியில் இருந்து தன்னை விரட்டும் முயற்சியில் ஈடுபடும் பாஜக மேலிட தலைவர்களையும் அண்ணாமலை கண்டிப்பாக எதிர்த்து களமாடுவார். அதற்கு ஏற்பதான் அவரது தலைமையை ஏற்றிருக்கும் பல்லாயிரக்கணக்கான தொண்டர்களுக்கு பயிற்சியும் கொடுக்கப்பட்டு வருகிறது” என்று அண்ணாமலையின் ஆழ்மனதில் நிலைத்திருக்கும் அபிலாஷைகளை விரிவாக கூறினார்கள் அவரின் முரட்டு பக்தர்கள்.
வளர்த்த கடா மார்பில் முட்டி விடுமோ..