Sat. Nov 23rd, 2024

சமூக ஊடகங்களில் இன்றைய தேதியில் ஆட்சியாளர்களுக்கு எதிராகவும்
அநீதிகளுக்கு எதிராகவும்
குரல் கொடுக்கிற போராளியாக நடமாடிக் கொண்டிருக்கிறார் சவுக்கு சங்கர்..

யூ டியூப் பேட்டியாக இருந்தாலும் சரி…
மேடைப் பேச்சாக இருந்தாலும் சரி..
ஆளும்கட்சியான திமுக தலைவர்களின் பண்ணையார்தனத்தையும்

முதல்வர் மு.க.ஸ்டாலின்,
அவரது மனைவி துர்கா ஸ்டாலின்
அவர்களது புதல்வரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின்.,
மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் ஆகியோருக்கு எதிராக
சவுக்கு சங்கர் ஆவேசமாக குரல் கொடுக்காத நாளே இல்லை என்றே சொல்லிவிடலாம்.

ஆளும்கட்சியின் அராஜகப் போக்கை
கடுமையாக விமர்சனம் செய்து வரும் அதே நேரத்தில்
சமூகத்தில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராக
குரல் கொடுப்பவராகவும் அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறார் சவுக்கு சங்கர்

ஊர், உலகம் கணித்து வைத்திருப்பதற்கு ஏற்பவே,
சவுக்கு சங்கர், தொண்டை நரம்புகள் புடைக்க மூச்சுக்கு மூச்சு
ஒரு வாதத்தை தொடர்ந்து முழங்கி கொண்டிருக்கிறார்.

ஊடக உலகில் தன்னை தவிர
வேறு எந்த பத்திரிகையாளர்களும் அநீதிக்கு எதிராக
துணிந்து குரல் கொடுப்பதில்லை என்று
பொங்கும் சவுக்கு சங்கரே,
ஜெயா டிவியில் நடந்து கொண்டிருக்கும் அராஜகத்தை,
அநீதிகளை தட்டி கேட்ட மாட்டேன் என்று
கோபமாகி சத்தம் போட்ட
விவகாரத்தை தான்
இன்றைய நல்லரசு செய்தி விவரிக்கிறது..
சவுக்கு சங்கருக்கும் ஜெயா டிவிக்கும் என்ன சம்பந்தம்..
விரிவாக பார்ப்போம் நண்பர்களே…
மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா,
1996 சட்டமன்றத் தேர்தலில் பரிதாபகரமான தோல்வியை சந்தித்தார்.

அன்றைய காலகட்டத்தில்
ஆளும்கட்சியாக இருந்த அதிமுக
மிக மோசமான தோல்வியை சந்திப்பதற்கு
முக்கிய காரணமாக அமைந்திருந்தது சன் டிவியின் பிரசாரம்தான்.

ஆடம்பரமாக நடைபெற்ற வளர்ப்பு மகன் திருமனம்…

சந்தனக் கடத்தல் வீரப்பனின் ஆவேச பேட்டிகள்…,
டான்ஸி நில பேர முறைகேடுகள்…,
வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவிப்பு…,
ஆளுநர் சென்னாரெட்டியுடன் மோதல்…,
ஐஏஎஸ் அதிகாரி சந்திரலேகா மீது ஆசிட் வீச்சு…,
திமுக மூத்த வழக்கறிஞர் சண்முக சுந்தரம் மீது
குண்டர்களை ஏவி, கொடூர தாக்குதல் நடத்தியது…,
நேர்மை, நியாயத்திற்காக குரல் கொடுத்த
மூத்த வழக்கறிஞர் விஜயன் மீது தாக்குதல்….
சுடுகாட்டு கூரை முதல் பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட
இலவச சீருடை வரை அனைத்து துறைகளிலும்
நாற்றமெடுத்த ஊழல் விவகாரம்…

இப்படி வரிசையாக, 1991 முதல் 1996 வரையிலான அதிமுக ஆட்சியில் நடந்தேறிய
அனைத்து அராஜகங்களையும்
ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் கொண்டு சேர்த்தது சன் டிவி.

1996 ல் வரலாறு காணாத தோல்வியை அதிமுக சந்தித்ததற்கு
சன் டிவி செய்திதான் முக்கிய காரணம் என கொதித்தார் செல்வி ஜெயலலிதா.

சன் டிவிக்கும் ஆளும்கட்சியான திமுகவுக்கும் பாடம் புகட்ட,
அதிமுகவுக்கும் தொலைக்காட்சி ஒன்று வேண்டும் என்று நினைத்தார் ஜெயலலிதா.

ஜெயலலிதாவின் ஆசையை நிறைவேற்றும் வகையில்
1999 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜெயா டிவி தொடங்கப்பட்டது.
1999 காலக்கட்டத்தில் ஜெயா டிவியின் நிர்வாகப் பொறுப்பை
டி.டி.வி.தினகரன், அவரது மனைவி அனுராதா ஆகியோர் ஏற்றனர்.
ஜெயா டிவி தொடங்கப்பட்ட காலத்திலேயே பணியாளர்களாக 200 பேர் நியமிக்கப்பட்டனர்.
அதிமுகவின் தீவிர விசுவாசிகள் குடும்பத்தின் வாரிசுகள்,
மன்னார்குடி மற்றும் தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்,
செய்தியாளர்களாக,
வீடியோ கலைஞர்களாக,
வீடியோ எடிட்டர்களாக,
தொழில்நுட்ப வல்லுநர்களாக,
செய்தி வாசிப்பாளர்களாக உழைக்க தொடங்கினர்.

ஆளும்கட்சியாக அதிமுக இருந்த காலங்களில் எல்லாம்
கோடிக்கணக்கில் விளம்பர பணம்
ஜெயா டிவிக்கு கிடைத்து வந்தது.
ஜெயா டிவியின் ஒட்டுமொத்த நிர்வாகமும் வி.கே.சசிகலாவின் நேரடி பார்வையிலேயே இருந்து வந்தது.
ஜெயா டிவி மூலம் கிடைக்கும் வருமானத்தை பற்றி மரணத்தை தழுவும் வரை
செல்வி ஜெயலலிதாவுக்கு ஒன்றுமே தெரியாது.

வருமானத்தை பற்றி எப்போதுமே கேள்வி கேட்காத ஜெயலலிதா,
ஜெயா டிவியை மேம்படுத்த கோடிக்கணக்கான ரூபாயை
கணக்கு வழக்கு இல்லாமல் வாரி வழங்கி கொண்டே இருந்தார்.
ஜெயலலிதாவை பொறுத்தவரை ஜெயா டிவி என்பது அதிமுகவின் சொத்து..
ஆனால், வி.கே.சசிகலாவை பொறுத்தவரை ஜெயா டிவி என்பது,
மன்னார்குடி குடும்பத்தின் சொத்தாகவே மாற்றப்பட்டிருந்தது.

செல்வி ஜெயலலிதாவும் அதிமுகவும் வி.கே.சசிகலாவின் கட்டுப்பாட்டிற்குள் இருந்ததைப் போல,
ஜெயா டிவியும் சசிகலாவின் இரும்புக்கரங்களுக்குள் சிக்கிக் கொண்டிருந்தது.

2011 ஆம் ஆண்டில் விகே சசிகலா உள்ளிட்ட மன்னார்குடி கும்பலை
போயஸ்கார்டனில் இருந்து விரட்டியடித்தார் செல்வி ஜெயலலிதா.
அந்தநேரத்தில் ஜெயா டிவி பணியாளர்களுக்கும் விடுதலை கிடைத்தது.

செல்வி ஜெயலலிதாவின் நேரடி பார்வைக்கு ஜெயா டிவி வந்தவுடனேயே,
பத்தாண்டுகளுக்கு மேலாக துன்பத்தை மட்டுமே அனுபவித்த வந்த ஜெயா டிவி ஊழியர்களுக்கு
பல நன்மைகள் கிடைக்க தொடங்கின.

ஜெயா டிவியின் 14 ஆம் ஆண்டு விழாவையொட்டி,
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் 60 ஆண்டு கால திரையுலக சேவையை பாராட்டும் வகையில்
பிரம்மாண்டமான விழாவை நடத்தியது ஜெயா டிவி.

வெற்றிகரமாக விழா நடைபெற்றதால் மகிழ்ச்சியடைந்த செல்வி ஜெயலலிதா,
ஜெயா டிவி ஊழியர்களுக்கு 20 சதவீதம் முதல் 40 சதவீதம் அளவுக்கு சம்பள உயர்வு வழங்க உத்தரவிட்டார்.

காலை, மாலை, இரவு என மூன்று நேரமும் ஜெயா டிவி அலுவலகத்தில்
ஊழியர்களுக்கு உணவு வழங்கவும் ஏற்பாடு செய்தார் செல்வி ஜெயலலிதா.

மருத்துவக் காப்பீடு திட்டத்தை அமல்படுத்தி ஜெயா டிவி ஊழியர்களின்
வயிற்றில் பால் வார்த்தார் செல்வி ஜெயலலிதா.

ஜெயா டிவி மூலம் கிடைத்த ஒட்டுமொத்த வருமானத்தையும்
ஜெயா டிவி ஊழியர்களின் மேம்பாட்டிற்காக செலவழியுங்கள் என்று தாயுள்ளத்தோடு கூறியவர் செல்வி ஜெயலலிதா.

ஜெயா டிவி வருமானத்தை வைத்து கொண்டு தான் என்ன செய்யப் போகிறேன்.
அதைவிட ஜெயா டிவி ஊழியர்கள் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள் என்பதே தமக்கு சந்தோஷம் என்று நெகிழ்ந்து பேசியவர் செல்வி ஜெயலலிதா.

செல்வி ஜெயலலிதாவின் நேரடி நிர்வாகத்தில்
ஜெயா டிவி ஊழியர்களுக்கு கிடைத்து வந்த பல சலுகைகள்
ஐந்து ஆறு மாதங்கள் கூட நீடிக்கவில்லை என்பதுதான் துயரமான ஒன்று.

போயஸ் கார்டனில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட விகே சசிகலா,
தமது தவறுகளுக்கு மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு
செல்வி ஜெயலலிதாவோடு மீண்டும் இணைந்து கொண்டார்.

அன்றைய தினம் ஜெயா டிவிக்கு மீண்டும் சனி பிடித்துக் கொண்டது.

செல்வி ஜெயலலிதாவால் என்னென்ன சலுகைகள் எல்லாம் ஜெயா டிவி பணியாளர்களுக்கு வழங்கப்பட்டதோ,
அதை எல்லாவற்றையும் பறித்துக் கொண்டவர் விகே சசிகலா.

செல்வி ஜெயலலிதா உயிரோடு இருந்த காலத்திலேயே
நள்ளிரவு நேரத்தில் ஜெயா டிவி அலுவலகத்திற்கு வந்து ஆய்வு செய்வார் விகே சசிகலா.

ஜெயா டிவி தொடங்கப்பட்ட காலத்தில் பணிக்கு சேர்ந்த ஊழியர்களை
படிப்படியாக வீட்டுக்கு அனுப்பி வைக்கும் படுபாதகத்தை ஈவு இரக்கமின்றி செய்தவர் வி.கே.சசிகலா.

சர்வதிகாரியாக வி.கே.சசிகலா செய்த அத்தனை அராஜகத்திற்கும்
துணை போனவர் நாமக்கல் வழக்கறிஞர் குமார்.

ஒரு தவறும் செய்யாத பணியாளர்களை மிரட்டி வெள்ளை பேப்பரில் கையெழுத்து வாங்கி கொண்டு
ஜெயா டிவி ஊழியர்களை விரட்டியடித்தது சசிகலா கும்பல்.

செல்வி ஜெயலலிதா உயிரோடு இருந்த போதே ஜெயா டிவியில் அராஜகத்தை தொடங்கியவர் வி.கே.சசிகலா.

2016ல் செல்வி ஜெயலலிதா காலமானதையடுத்து விகே சசிகலாவும் சிறைக்குச் சென்றார்.

2017ல் ஜெயா டிவி நிர்வாகம், வி.கே.சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் ஜெயராமனின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது.

27 வயதான விவேக் ஜெயராமன், ஜெயா டிவியை வணிக ரீதியாக வெற்றி காண்பதற்காக புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தினார்.

ஊழியர்களுக்கும் ஆண்டுதோறும் வழங்கப்படும் சம்பள உயர்வையும் வழங்கினார் விவேக் ஜெயராமன்.

2017ம் ஆண்டு இறுதியில் விகே சசிகலாவின் பெயரில் இருந்து சொத்துகள், ஜெயா டிவி உள்பட 150க்கும் மேற்பட்ட இடங்களில்
வருமான வரித்துறையினர் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.
வருமான வரித்துறையின் தொடர் விசாரணையை எதிர்கொண்ட விவேக் ஜெயராமன்,
ஜெயா டிவி நிர்வாகத்தில் அதிக அக்கறை செலுத்தாமல் ஒதுங்கியிருந்தார்.

பெங்களூர் சிறையில் இருந்து விடுதலையாகி வெளியே வி.கே.சசிகலா வந்தவுடன்
டிடிவி தினகரனின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.

ஜெயா டிவியில் டிடிவி தினகரனுக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவம் விவேக் ஜெயராமனுக்கு எரிச்லை ஏற்படுத்தியது.

விகே சசிகலா மீதான கோபத்தை ஜெயா டிவி ஊழியர்களிடம் காட்ட தொடங்கினார் விவேக் ஜெயராமன்.

2020 ஆம் ஆண்டில் இருந்து ஜெயா டிவியில் ஆட்குறைப்பு எனும் கொடுமை அடிக்கடி நடைபெற்று வருகிறது.

5 ஆண்டுகள், பத்தாண்டுகள் பணிபுரிந்த பணியாளர்கள் ஒரு நாளில் வேலையை விட்டு நீக்கினார் விவேக் ஜெயராமன்.

அதிமுகவை கைப்பற்றும் விவகாரத்தில் விகே சசிகலாவுடன் டிடிவி தினகரனுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டதால்,
ஜெயா டிவியில் டிடிவி தினகரனை பற்றிய செய்தியே போடக் கூடாது என்று கண்டிப்பு காட்டினார் விவேக் ஜெயராமன்.

1999 ல் ஜெயா டிவி உருவாக முழு மூச்சாக உழைத்த டிடிவி தினகரனுக்கு, ஜெயா டிவியில் இன்றைக்கு மரியாதை கிடையாது.

2023 ஜனவரியில் ஜெயா டிவியில் நடைபெற்ற மாற்றங்கள் உச்சகட்ட கொடுமையாகும்.

25 ஆண்டுகளாக தொடர்ந்து பணியாற்றி வந்த 50 க்கும் மேற்பட்டவர்களை வேலையை வீட்டு நீக்கியிருக்கிறார் விவேக் ஜெயராமன்.

50 வயதை கடந்த பணியாளர்களின் வாரிசுகள் பள்ளி படிப்பிலும், கல்லூரி படிப்பிலும் இருந்து கொண்டிருக்கும் இக்கட்டான கால கட்டம்.

ஒரு தவறும் செய்யாத ஊழியர்களை, ஒரு நாளில் வீட்டுக்கு அனுப்பி வைத்த விவேக் ஜெயராமன்,
ஊழியர்கள் அடுத்த வேலை சாப்பாட்டிற்கு என்ன செய்வார்கள் என்று கூட நினைத்து பார்க்கவில்லை என்பதுதான் துயரம் தரும் செய்தியாகும்.

கிராஜுவிட்டி என்று அழைக்கப்படும் பண பலன்களையும் வழங்காமல் வெறும் கையோடு வீட்டுக் சென்றிருக்கிறார்கள் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள்.

வேலையில் விட்டு நீக்கப்படும் ஊழியர்களுக்கு அடுத்த மூன்று மாதங்களுக்கு சம்பளம் வழங்கி மனிதாபிமானத்தோடு அனுப்பி வைக்கும் நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன.

ஆனால், அனாமத்தாக வந்த சொத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் விவேக் ஜெயராமன்,
செல்வி ஜெயலலிதா போட்ட பிச்சையால் வாழ்க்கையை வசதியாக்கி கொண்டிருக்கும் விவேக் ஜெயராமன்
கடந்த 25 ஆண்டுகளாக செல்வி ஜெயலலிதாவை கடவுளுக்கு இணையாக மனதில் நிறுத்தி வாழ்ந்து கொண்டிருந்த ஜெயா டிவி ஊழியர்கள் 100 பேரை நடுத்தெருவில் நிறுத்தியுள்ளார்.
எல்லாவற்றையும் உச்சக்கட்ட கொடுமை, விகே சசிகலாவை சந்திக்க வந்தவர்களில் ருக்குமணி என்ற ஆதரவாளர் பெயரை செய்தியில் சொல்ல மறந்துவிட்டார் இளம் செய்தியாளர் தாமோதரன்..
செய்தி வழங்கும் அவசரத்தில் சில பிரமுகர்களின் பெயர்கள் விடுபட்டு போவது இயல்பான ஒன்றுதான்.
ஆனால், மன்னிக்கும் குணமே இல்லாத விகே சசிகலா, ருக்குமணி பெயரை செய்தியில் சொல்லாத செய்தியாளர் தாமோதரனை,
மறுநாளே வேலையில் இருந்து துரத்தியடித்துவிட்ட கொடுமையும் நடைபெற்றது.
புதிய தலைமுறை தொலைக்காட்சி செய்தியாளர் முருகேசன், பாஜக தலைவர் கே.அண்ணாமலையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவகாரம் பார்வையாளர்களுக்கு நினைவிருக்கலாம்.
அண்ணாமலையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட முருகேசன், வேலையில் இருந்து அனுப்பி விட்டது புதிய தலைமுறை என்று பொய்யான தகவல் பரவியது.
முருகேசனுக்கு அநீதி இழைக்கப்பட்டுவிட்டது என்று சமூக ஊடகங்களில் அனல் பறந்தது.
ஆனால், ஜெயா டிவியில் இருந்து செய்தியாளர் தாமோதரன் வெளியேற்றப்பட்ட கொடுமையை பற்றி யாருமே பேசவில்லை.

ஜெயா டிவியில், விவேக் ஜெயராமனின் அராஜகப் போக்கும் விகே சசிகலாவின் சர்வதிகாரமும் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது.
செல்வி ஜெயலலிதா தொடங்கி வைத்த ஜெயா டிவியில் வேலை பார்த்த பணியாளர்கள் ஒருவர் கூட இன்றைய தேதியில் வேலைக்கு வரக் கூடாது என்ற தொழிலாளர் விரோத போக்கோடு விவேக் ஜெயராமனும், வி.கே.சசிகலாவும். செயல்பட்டு வருகிறார்கள்,
ஜெயா டிவியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பணியாளர்களுக்கு எதிரான கொடுமைகளை பாதிக்கப்பட்ட ஊழியர்களே சவுக்கு சங்கரிடம் கண்ணீர் மல்க கூறியிருக்கிறார்கள்.

அடுத்த வேளை உணவுக்கு இல்லாமல் பரிதவிக்கும் ஊழியர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டிய சவுக்கு சங்கர், கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி விவகாரத்தில் முதலாளிகளுக்கு ஆதரவாக நின்றதை போலவே ஜெயா டிவி ஊழியர்களின் மனம் புண்படும் பேசி வெறுப்பு ஏற்றிருக்கிறார் என்பதுதான் வேதனைக்குரிய விஷயம்.

தனியார் நிறுவனம் என்றால் லாபம், நட்டம் பார்த்துதான் நடத்துவார்கள்.

நட்டத்தில் இருக்கும் ஜெயா டிவியை லாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்ற விவேக் ஜெயராமன் முயற்சிக்கிறார்.

விவேக் ஜெயராமனுக்கு எதிராக எதுவும் என்னால் பேச முடியாது என்று மனசாட்சியை முதலாளிகளுக்கு முழுமையாக விற்றவர் போல எடுத்தெறிந்து பேசியிருக்கிறார் சவுக்கு சங்கர்.

சவுக்கு சங்கர் பேச மாட்டேன் என்று கோபத்தோடு கூறிய ஜெயா டிவி விவகாரத்தை பொதுமக்களின் பார்வைக்கு கொண்டு வந்திருக்கிறது நல்லரசு யூ டியூப் சேனல்.

சவுக்கு சங்கருக்கு நல்லரசு சில கேள்விகளை முன்வைக்கிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன், பிறக்கும் போதே கோடீஸ்வரராகவா பிறந்தார்.. அவங்க பரம்பரை பெரிய கோடீஸ்வரர் பரம்பரையா என்று ஆவேசமாக கேள்வி கேட்ட முடிந்த சவுக்கு சங்கரால்
அதே கேள்வியை விவேக் ஜெயராமனை பார்த்து கேட்பதற்கு ஏன் தயக்கம் காட்டுகிறார்.

சபரீசனிடம் இன்றைய தேதியில் கோடிக்கணக்கில் சொத்து இருக்கிறது. அதெல்லாம் நியாயமாக உழைத்து சம்பாதித்த சொத்தா என்று நக்கலாக கேள்வி கேட்டீர்களே சவுக்கு சங்கர்..

விவேக் ஜெயராமனுக்கு இன்றைய தேதியில் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துகள் இருக்கின்றன. 32 வயதில் இவ்வளவு மதிப்புடைய சொத்துகளுக்கு விவேக் ஜெயராமன் எப்படி உரிமையாளர் ஆனார் என்று கேள்வி கேட்க சவுக்கு சங்கர் பயப்படுவது ஏன்..

சபரீசனால் பாதிக்கப்பட்டு நடுத்தெருவில் யாராவது நிற்கிறார்கள் என்று சவுக்கு சங்கரால் ஒருவரை கூட அடையாளம் காட்ட முடியாது.

ஆனால், விவேக் ஜெயராமனால் பழி வாங்கப்பட்டவர்கள் நூற்றுக்கணக்கில் இருக்கிறார்கள்..

ஜெயா டிவியின் அராஜகத்தை எதிர்த்து நீதி மன்றத்தில், தொழிலாளர் நலத்துறையில் வழக்கு நடத்திக் கொண்டிருக்கும் ஜெயா டிவி ஊழியர்களின் பக்கம் உள்ள நியாயத்தை பேச சவுக்கு சங்கர் பயப்படுவது ஏன்..

திமுகவை எதிர்த்தால் சவுக்கு சங்கருக்கு பல நன்மைகள் கிடைக்கும்.

விவேக் ஜெயராமனை, விகே சசிகலாவை எதிர்த்தால் சவுக்கு சங்கருக்குதான் பாதிப்புதான் ஏற்படும்.

சவுக்கு சங்கருக்கு எப்போதுமே பொது நோக்கம் எல்லாம் இருந்தது இல்லை.
சுயநலத்திற்காகவும், விளம்பரத்திற்காகவும் மட்டுமே சவுக்கு சங்கர் கம்பு வீசிக் கொண்டிருக்கிறார்.

பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நின்று சவுக்கு சங்கர் என்றைக்குமே குரல் கொடுக்க மாட்டார் என்பதற்கு ஜெயா டிவி விவகாரமும் மற்றொரு உதாரணமாக மாறியிருக்கிறது..