Thu. Apr 25th, 2024

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் வாக்காளர்களின் எண்ணிக்கையை விட திமுக மற்றும் அதிமுக நிர்வாகிகளின் எண்ணிக்கை தான் அதிகமாகி கொண்டே வருகிறது என்கிறார்கள் ஈரோட்டில் உள்ள சமூக ஆர்வலர்கள்.

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே, உள்ளூர் திமுகவினர் தேர்தல் வேலைகளை தொடங்கிவிட்டனர்.

கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கு தொகுதிக்கு ஒதுக்கப்பட்டதை பற்றியெல்லாம் சிறிதும் கவலைப்படாமல், வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, தேர்தல் பணிகளில் பிஸியாகிவிட்டார்.

இடைத்தேர்தல் பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, காங்கிரஸ் கட்சி வேட்பாளரை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன்பு கைச் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கும் பணியை தொடங்கிவிட்டார்.

தேர்தல் பொறுப்பாளர்களாக 12 அமைச்சர்கள், 19 மாவட்டச் செயலாளர்களை திமுக தலைமை அறிவித்துள்ளது.

10 ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு அமைச்சர் என்ற முறையிலும் 5 ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற விகிதத்திலும் வாக்கு சேகரிப்பு பணி நடைபெற்று வருகிறது.

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி முழுவதும் நகரப் பகுதிகளிலேயே அமைந்திருப்பதால், எந்த தெருவில் நுழைந்தாலும் ஒரு அமைச்சரும், ஒரு மாவட்டச் செயலாளரும் தென்படுகின்றனர்.

திமுக அமைச்சர் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் தலைமையிலான வாக்கு சேகரிப்புப் பணியில், எம்எல்ஏக்கள், எம்பிக்கள், மேயர்கள், மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கள், நகராட்சித் தலைவர்கள், மாவட்டம், நகராட்சி, பேரூராட்சி மன்றங்களுக்கான கவுன்சிலர்கள் என ஒவ்வொரு தெருவிலும் உள்ளூர் மக்களின் நடமாட்டத்தை விட திமுக நிர்வாகிகளின் அணிவகுப்புதான் கலகலப்பாக இருந்து கொண்டிருக்கிறது.

இடைத்தேர்தல் என்றாலே, அரசியல்வாதிகளுக்கு திருவிழாதான். பத்தாண்டுகளுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்துள்ள திமுக, முதல்முறையாக இடைத்தேர்தலை சந்திக்கிறது. ஆளும்கட்சியான திமுகவே, வேட்பாளரை நிறுத்தியிருப்பதை போல, திமுகவினர் தேர்தல் பணிகளில் உற்சாகமாக ஈடுபட்டு வருவதைப் பார்த்து காங்கிரஸ் தொண்டர்கள் வியப்பில் ஆழ்ந்து உள்ளனர்.

ஹோட்டல்கள், தேநீர் கடைகள் என அனைத்து உணவு விடுதிகளிலும் திமுகவினர் மொய்த்துக் கொண்டிருப்பதால் சிறு வணிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.

ஆளும்கட்சியான திமுகவினரின் சுறுசுறுப்பாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் நேரத்தில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் குடிசையில் இருப்பவர்கள் கோபுரத்தை ஏக்கத்தோடு பார்ப்பதை போல வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதிமுக வேட்பாளரான தென்னரசு, பொருளாதார நிலையில் ஆகா, ஓகோ என்ற நிலையில் இல்லை என்பதால், அதிமுக முன்னாள் அமைச்சர்கள்தான் தேர்தல் செலவுகளை செய்து கொண்டிருக்கிறார்கள்.

கொங்கு சமுதாயத்தைச் சேர்ந்த அதிமுக முன்னணி நிர்வாகிகளான கே.ஏ.செங்கோட்டைய்ன், பி.தங்மகணி, எஸ்.பி.வேலுமணி, கருப்பண்ணன் ஆகியோர் தேர்தல் செலவுகளுக்காக பணத்தை வாரி இறைப்பதில் கஞசத்தனம் காட்டுவதாக அதிமுக மூத்த நிர்வாகிகளே புலம்புகிறார்கள்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல், எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்வா, சாவா போராட்டமாக மாறியிருக்கிறது. மரியாதைக்குரிய தோல்வி என்ற நிலையை எட்டுவதற்கு கூட, பத்து பதினைந்து கோடி ரூபாயை செலவழிக்க வேண்டிய இக்கட்டான நிலைக்ஙகு தள்ளப்பட்டிருக்கிறார்.

வட மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் இருந்து வந்திருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், பெயரளவுக்குதான் வாக்கு சேகரிப்பிலேயே ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஆளும்கட்சியான திமுகவின் அட்டகாசமான தேர்தல் பிரசாரத்திற்கு முன்பு அதிமுகவின் வாக்கு சேகரிப்பு பணி, தண்ணீரில் நனைந்த பட்டாசு சத்தம் போல தான் கேட்டுக் கொண்டிருக்கிறது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் தெரு தெருவாக சுற்றி வரும் திமுக அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், முன்னணி நிர்வாகிகள் ஆகியோரிடம் கரை புரண்டோடும் உற்சாகத்தைப் பார்த்து, காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனே வியந்து போய்விட்டார் என்கிறார்கள்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக அமைச்சர்கள் செலவழிக்கும் பணத்தை ஒட்டுமொத்தமாக அடுக்கி வைத்தால், காங்கிரஸ் நிர்வாகிகள் மயக்கம் போட்டே விழுந்து விடுவார்கள் என்கிறார்கள் உள்ளூர் திமுக நிர்வாகிகள்.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்ததற்கு பதிலாக, ஒரு பேச்சுக்கு சொல்கிறோம்.. தேனி நாடாளுமன்றத் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தால் ஈவிகேஎஸ் இளங்கோவன், இந்த முறை நிச்சயம் வெற்றி பெற்றிருப்பார். எம்எல்ஏ என்பதை எம்பி பதவி இளங்கோவனுக்கு மிகப் பெரிய சந்தோஷத்தை கொடுத்திருக்கும் என்கிறார்கள் காங்கிரஸ் வேட்பாளரின் விசுவாசிகள்.

வீதி வீதியாக சுற்றி வரும் திமுக நிர்வாகிகள், வாக்காளர்களை அதிமுக வளைத்து போட்டு விடக் கூடாது என்று கண்கொத்தி பாம்பாக பார்த்து வரும் அதே நேரத்தில், முதற்கட்டாக 500 ரூபாய் வீதம் வாக்காளர்களுக்கு திமுகவினர் பட்டுவாடா செய்து விட்டார்கள் என்கிறார்கள்.

வாக்குப்பதிவான பிப்ரவரி 27 ஆம் தேதிக்குள் ஒரு வாக்காளருக்கு பதினைந்தாயிரம் ரூபாய் வீதம் பணம் வழங்குவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் இருந்து வருகிறார்கள் வாக்காளர்கள்.
அதிமுக தரப்பில் இருந்தும் 5 ஆயிரம் ரூபாய் வீதம் வாக்காளருக்கு தர திட்டமிட்டிருக்கிறார்கள்.

ஆளும்கட்சியான திமுகவில் மூன்று, நான்கு அமைச்சர்கள் தான் ஒட்டுமொத்த தேர்தல் செலவுகளையும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு முதல் இடத்தில் இருக்கிறார்.

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, மூன்றாம் இடத்தில் இருக்கிறார்.

நான்காம் இடத்தில் ஈரோடு மாவட்ட அமைச்சரான சு.முத்துசாமி இருந்து வந்தாலும் கூட, ஈவிகேஎஸ் இளங்கோவனின் வெற்றியை உறுதிப்படுத்தியதற்கு அடித்தளம் அமைத்து கொடுத்திருப்பவரும் சு.முத்துசாமிதான்.
50 ஆண்டுகளுக்கு மேலான அரசியல் பயணத்தை நிறைவு செய்திருக்கும் சு.முத்துசாமிக்கு, ஈரோடு மாவட்ட மக்களிடம் நல்ல பெயர் இருந்து வருகிறது.

அராஜக அரசியலை மேற்கொள்ளாதவர், மென்மையானவர், சாதி, மதம் கடந்து பாசம் காட்டுபவர் என்ற நற்பெயரை பெற்றிருக்கும் சு.முத்துசாமி,
ஆளும்கட்சிக்கு எதிராக அதிருப்தி குரல் எழுவதை கூட தமது சாந்தமான அணுகுமுறையால் சரி செய்து, திமுக கூட்டணிக்கு ஆதரவாக திரட்டி வருகிறார்.

எ.வ.வேலு, செந்தில் பாலாஜி, கே.என்.நேரு ஆகியோர் பொறுப்பு ஏற்றிருக்கும் பகுதிகளில் பணம், காவிரி ஆறைப் போல வற்றாமல் ஓடிக் கொண்டே இருக்கிறது.

திருவண்ணாமலையில் இருந்து வந்திருக்கும் திமுக நிர்வாகிகள் எ.வ.வேலுவின் கண்ணசைவுக்கு ஏற்ப பம்பரமாக சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

செந்தில்பாலாஜி, நவீன தொழில் நுட்பத்தில் கைதேர்ந்தவர்களையும், கருத்துக் கணிப்பு எடுப்பதில் கில்லாடியானவர்களையும் கரூரில் இருந்தும் சென்னையில் இருந்தும் ஈரோட்டிற்கு வரவழைத்து, வாக்காளர்களின் மனநிலையை கண்டறிந்து, திமுக வலைக்குள் இழுத்துக் கொண்டிருக்கிறார்.

ஒட்டுமொத்தமாக இடைத்தேர்தலுக்கு பொறுப்பு ஏற்றிருக்கும் அமைச்சர் கே.என்.நேரு, திருச்சியில் இருந்தும், சேலத்தில் இருந்தும் தனது விசுவாசிகளை இறக்கி, ஈரோடு கிழக்கு தொகுதியின் மூலை முடுக்கெல்லாம் அதிமுக ஆதரவு மனநிலையில் உள்ள வாக்காளர்களை, கைச் சின்னத்திற்கு வாக்களிக்கும் வகையில் கரைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தீவிர வாக்கு சேகரிப்பு, முனைப்பான தேர்தல் பிரசாரம் போன்றவற்றை எல்லாம் கடந்து, அதிமுக கூடாரத்தில் இருந்து பிரபல நிர்வாகிகளை திமுகவுக்கு இழுப்பதற்கும், களத்தில் காங்கிரஸுக்கு எதிராக நிற்கும் பிற அரசியல் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்களையும் திமுக பக்கம் இழுக்க, அண்டர் கிரவுண்டில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார் அமைச்சர் கே.என்.நேரு என்கிறார்கள்.

ஈவிகேஎஸ் இளங்கோவனின் வெற்றி, அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாள் அன்றே உறுதியாகிவிட்டது என்று அடித்து கூறும் ஈரோடு கிழக்கு தொகுதி திமுக நிர்வாகிகள், வாக்கு வித்தியாசத்தை அதிகரிப்பதற்கும், இடைத்தேர்தல் என்றாலே திமுகவுக்கு சர்க்கரைப் பொங்கல் சாப்பிடுவது மாதிரி என்பதை எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு நிரூபிக்கவுமே, பகல் இரவு பாராமல் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, சு.முத்துசாமி, செந்தில் பாலாஜி ஆகியோர் என்கிறார்கள் ஈரோடு திமுக நிர்வாகிகள்.

ஈவிகேஎஸ் இளங்கோவனின் வெற்றியை உறுதி செய்வதற்கான அடித்தளத்தை அமைத்துவிட்டார் அமைச்சர் சு.முத்துசாமி.

அசைத்து பார்க்க முடியாத அடித்தளத்தின் மீது அழகான, அட்டகாசமான மாளிகையை எழுப்பும் பொறுப்பை ஏற்றிருப்பவர்கள்தான் கே.என்.நேரு., எ.வ.வேலு, செந்தில்பாலாஜி ஆகிய மூவரும்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை பொறுத்தவரை கில்லி என்று பாராட்டை பெற்றிருப்பவர்கள் சு.முத்துசாமி, எ.வ.வேலு, கே.என்.நேரு, செந்தில்பாலாஜி ஆகியோர்.
நான்கு திசை போல, நான்கு அமைச்சர்களும், 5, 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கே தேர்தல் பொறுப்பு ஏற்று, சாதித்து காட்டும் அளவுக்கு களப்பணியில் திறமை பெற்றவர்கள்.
தேரை இழுக்கும் சக்தி கொண்டவர்களுக்கு நடை வண்டியை கொடுத்தால் எப்படி இருக்குமோ, அப்படிதான் திமுக அமைச்சர்களிடம் ஈரோடு கிழக்கு தொகுதி சிக்கிக் கொண்டு படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்….