தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் இன்றும் நீறுபூத்த நெருப்பாகவே இருந்து வரும் நிலையில், நடப்பாண்டிற்கான மருத்துவ மேற்படிப்பிற்கான நீட் தேர்வுக் கட்டணத்தை தேசிய தேர்வுகள் ஆணையம் உயர்த்தியிருப்பதுடன், தேர்வுக் கட்டணத்திற்கு ஜி.எஸ்.டி. வரியும் விதிக்கப்பட்டிருப்பது மருத்துவ மேற்படிப்பு மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு எனப்படும் அகில இந்திய நுழைவுத்தேர்வை மத்திய பா.ஜ.க அரசு கட்டாயமாக்கியுள்ளது.
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தபோதும் கடந்த 2017 -18 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து நீட் தேர்வு நடைபெற்று வருகிறது.
நடப்பாண்டு மருத்துவச் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில், மருத்துவ மேற்படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான நாள் இன்று முதல் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், இந்தத் தேர்வுக்கான கட்டணத்தை உயர்த்தி தேசிய தேர்வுகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோரிடம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
புதிய கட்டணம் தொடர்பாக தேசிய தேர்வுகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு விவரம் இதோ..
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி (எஸ்.சி/ எஸ்.டி) மாணவர்களுக்கான நீட் தேர்வு கட்டணம் ரூ.2,750-ல் இருந்து ரூ.3,835 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
பொதுப்பிரிவு, ஓ.பி.சி பிரிவினருக்கான நீட் தேர்வு கட்டணம் ரூ.3,750-ல் இருந்து ரூ.5,015 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு கட்டணத்திற்கு ஜி.எஸ்.டி. வரியும் விதிக்கப்பட்டிருப்பதுதான் பிரபல கல்வியாளர்களை அதிர்ச்சியில் ஆழ்ததியுள்ளது.
நீட் தேர்வு கட்டணத்தில் ஜி.எஸ்.டி வரியாக பொதுப்பிரிவு, ஓபிசி பிரிவினருக்கு ரூ.765 விதிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்விற்கு எதிரான கொதிப்பு நிலை தமிழக மக்களிடம் இன்றும் பரவலாக உள்ள நிலையில், மருத்துவ மேற்படிப்பிற்கான நீட் நுழைவு தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது, மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.